28 டிச., 2013

சிறிலங்கா அரச மீறல்கள் தொடர்பாக நம்பகமான விசாரணை - அனைத்துலக சமூகத்தின் அழுத்தம்: அல்ஜசீரா

சிறிலங்காவில் போர் முடிவடைந்ததானது இங்கு மீளிணக்கப்பாடு மேற்கொள்ளப்பட்டு ஜனநாயக ஆட்சி நடைபெறுவதற்கான ஒரு சிறந்த வாய்ப்பாக உள்ளபோதிலும் சிறிலங்கா அரசாங்கத்தால் இழைக்கப்பட்ட பல்வேறு மீறல்கள் தொடர்பில் நம்பகமான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என சிறிலங்கா அரசாங்கம் மீது அனைத்துலக சமூகமானது மிகப் பலமான அழுத்தங்களை மேற்கொள்கின்றது.

இவ்வாறு அனைத்துலக தொலைக்காட்சி சேவையான Al Jazeera தெரிவித்துள்ளது. அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்புப் படையினர் தமிழீழ விடுதலைப் புலிகளைப் போரில் தோற்கடித்ததன் மூலம் 2009ல் சிறிலங்காவில் உள்நாட்டுப் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. ஆனால் சிறிலங்காவில் தொடர்ந்தும் முன்னாள் புலி உறுப்பினர்கள் மீதான கடத்தல்கள், சித்திரவதைகள் மற்றும் பாலியல் வன்புனர்வுகள் என்பன தொடர்கின்றன.
நவம்பர் 2013ல் சிறிலங்காவில் இடம்பெற்ற பொதுநலவாய அமைப்பின் உச்சி மாநாட்டின் போது பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமறூன் உட்பட பல்வேறு தலைவர்கள் சிறிலங்கா மீது தமது அழுத்தங்களை மேற்கொண்டிருந்தனர். சிறிலங்காவில் போர் முடிவடைந்ததானது இங்கு மீளிணக்கப்பாடு மேற்கொள்ளப்பட்டு ஜனநாயக ஆட்சி நடைபெறுவதற்கான ஒரு சிறந்த வாய்ப்பாக உள்ளபோதிலும் சிறிலங்கா அரசாங்கத்தால் இழைக்கப்பட்ட பல்வேறு மீறல்கள் தொடர்பில் நம்பகமான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என சிறிலங்கா அரசாங்கம் மீது அனைத்துலக சமூகமானது மிகப் பலமான அழுத்தங்களை மேற்கொள்கின்றது.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது பல பத்தாயிரக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். பாதுகாப்பு வலயங்களில் தங்கியிருந்த பொதுமக்கள் மீது சிறிலங்கா இராணுவத்தினர் ஆட்லறித் தாக்குதல்களை மேற்கொண்டதாகக் குற்றம் சுமத்தப்படுகிறது. இவ்வாறான மீறல்கள் இடம்பெற்றதை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது. இதேவேளையில் தமிழ்ப் புலிகள் தமது கட்டுப்பாட்டிலிருந்த பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தினர்.

போரின் இறுதிக்கட்டத்தில் இராணுவத்திடம் சரணடைந்த மற்றும் இராணுவத்தால் கைதுசெய்யப்பட்ட பலர் இன்றுவரை காணாமற் போயுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தடுத்து வைக்கப்பட்ட பெரும்பாலானவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் நாங்கள் ஆனந்தி சசிதரனைச் சந்தித்தோம். இவரது கணவரான எழிலன் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற் தலைவர்களுள் ஒருவராவார். இவர் போரின் பின்னர் இராணுவத்திடம் சரணடைந்திருந்த போதும் இதுவரையில் எவ்வித தகவலும் கிடைக்கப் பெறவில்லை. தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது எனக் கோரும் 'போரில் தமது கணவன்மாரை இழந்த தமிழ்ப் பெண்களின்' ஒரு குழுவுக்கு ஆனந்தி தலைவியாக உள்ளார். இந்தப் பெண்களின் கணவன்மார் இராணுவத்திடம் சரணடைந்து காணாமற் போயுள்ளனர்.

2006-2012 வரையான காலப்பகுதியில் சிறிலங்காவின் உத்தியோகபூர்வ மற்றும் இரகசியத் தடுப்பு முகாங்களில் தடுத்து வைக்கப்பட்ட போது பாலியல் வன்புர்வுகளுக்கும் பாலியல் சித்திரவதைகளுக்கும் உட்படுத்தப்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்ட 75 வரையான வழக்குகளைப் பதிவுசெய்துள்ளதாக இவ்வாண்டின் ஆரம்பத்தில் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்திருந்தது. 2009ல் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னரே இவற்றுள் பெரும்பாலான மீறல்கள் இடம்பெற்றதாகவும் வெளிநாடுகளிலிருந்து தமது உறவுகளைப் பார்ப்பதற்காக சிறிலங்காவுக்குச் சென்ற போது தடுத்து வைக்கப்பட்டவர்களும் இதற்குள் உள்ளடங்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விசாரணையின் போது சிறிலங்காப் படையினராலும் சிறிலங்கா காவற்துறையினராலும் தொடர்ச்சியாகப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாகத் தெரிவித்த தமிழ் யுவதி ஒருவரை நாங்கள் சந்தித்தோம். இவ்வாண்டு தான் தடுத்து வைக்கப்பட்ட போது சிறிலங்காப் படையினரால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் தான் கர்ப்பமுற்றதாகத் தெரிவித்த பெண்மணி ஒருவரை நாம் சந்தித்தோம். இதுபோன்ற பல்வேறு சம்பவங்களை நாம் கேட்டறிந்தோம்.

சிறிலங்கா அரசாங்கத்தால் இழைக்கப்படும் பல்வேறு மீறல்களில் தமிழ் மக்கள் பெருமளவில் பாதிக்கப்படும் அதேவேளையில், பெரும்பான்மை சிங்கள சமூகமும் பாதிப்பைச் சந்திக்கின்றது. 2009ல் சுட்டுக் கொல்லப்பட்ட பிரபல பத்திரிகை ஒன்றின் ஆசிரியரின் சகோதரரை நாம் சந்தித்தோம். அண்மைய ஆண்டுகளில் ஊடகங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளில் 23 வரையான ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் கூறப்பட்டது.

சிறிலங்கா அரசாங்கத்தை விமர்சிக்கும் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்படுவதாகவும் கடத்தப்படுவதாகவும் படுகொலை செய்யப்படுவதாகவும் ஊடக சுதந்திரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஊடகவியலாளர்கள் தெரிவித்தனர். 2006ன் ஆரம்பத்திலிருந்து இன்றுவரை சிறிலங்கா ஊடகங்களில் பணிபுரிந்த 14 ஊடகப் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டதாக அனைத்துலக மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

அனைத்துலக நாடுகளில் வாழும் தமது உறவுகளுடன் தொடர்புகளைப் பேணும் தமிழர்களை சிறிலங்கா இராணுவம் மிகவும் நெருக்கமாகக் கண்காணிக்கின்றனர் என்ற குற்றச்சாட்டை வடக்கில் பணிபுரியும் மூத்த இராணுவ அதிகாரி ஒருவர் ஏற்றுக்கொண்டார்.

மனித உரிமை மீறல்குற்றச்சாட்டை விசாரிப்பதற்கான சட்ட நடைமுறை சிறிலங்காவில் கடைப்பிடிக்கப்படுவதாக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச பொதுநலவாய அமைப்பின் உச்சி மாநாட்டின் போது அறிவித்திருந்தார். ஆனால் இந்த சட்ட முறைமையின் ஊடாக எந்தவொரு வழக்கும் வெற்றிகரமாக முடிவுக்குக் கொண்டுவரப்பட முடியாதுள்ளதாக மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.