28 டிச., 2013

ஜெனிவாவில் எழுச்சி மாநாடு திரள்கிறது தமிழரின் சேனை
மனித உரிமைகளை மதிக்காது தமிழ் மக்களை அடக்கி ஆள முனையும் இலங்கை அரசுக்கு எதிராக அனைத்துலக சமூகம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இம்முறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கும் வகையில் மாபெரும் எழுச்சி
மாநாடொன்றை ஜெனிவாவில் நடத்துவதற்கு புலம்பெயர் தமிழ் அமைப்புகள் தயாராகி வருகின்றன.
 
இதன்பிரகாரம் எதிர்வரும் மார்ச் 10 ஆம் திகதி இந்த மக்கள் எழுச்சி மாநாடு நடைபெறும் என்று உலகத் தமிழர் பேரவையின் தலைவர் வண. இமானுவேல் அடிகளார் நேற்று மாலை "உதயனி'டம் தெரிவித்தார். 
 
புலம்பெயர் எழுச்சி மாநாடு முடிவடைந்த பின்னர் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அமைந்துள்ள வளாகத்தில் கவன ஈர்ப்பு போராட்டமொன்றை நடத்தவும் புலம்பெயர் தமிழ் அமைப்புகள் தீர்மானித்துள்ளன. இதில் பங்கேற்க லண்டன், அமெரிக்கா, பிரான்ஸ், கனடா, ஜேர்மனி உட்பட புலம்பெயர் தமிழர்கள் வாழும் நாடுகளில் பிரதிநிதிகள் ஜெனிவாவுக்குச் செல்லவுள்ளனர்.
 
குறிப்பாக இந்தியாவிலுள்ள தமிழர் ஆதரவு அமைப்புகளுக்கும் இதில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன், வெளிநாட்டவர்களுக்கு ஈழத் தமிழர்களின் அவலங்களை விளக்கும் வகையில் ஆங்கில கையேடுகளும் விநியோகிக்கப்படவுள்ளன.
 
அதேவேளை, எழுச்சி மாநாடு நடைபெறும் மண்டபத்தில் இறுதிகட்ட யுத்தத்தில் படைத் தரப்பால் மிகவும் கொடூரமாக கொல்லப்பட்டவர்களின் புகைப்படங்கள், வடக்கு மக்களின் ஜனநாயக ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட அடக்குமுறைகள் உட்பட பல்வேறு கொடூரச் சம்பவங்களை விளக்கும் வகையில் புகைப்படகாட்சிப் பிரிவொன்றும் அமைக்கப்படவுள்ளது.
 
இதில் பங்கேற்று ஈழத் தமிழர்களுக்கு நேர்ந்த கொடூரங்களை அறிந்து, தமிழருக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகளின் இராஜதந்திரிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவுள்ளது என்று புலம்பெயர் அமைப்பின் பிரதிநிதயொருவர் தெரிவித்தார்.
 
இதற்கிடையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் ஜெனிவா வந்தால் அது பெரும் சக்தியாக இருக்கும் என்று தெரிவித்த இமானுவேல் அடிகளார், இது தொடர்பில் கூட்டமைப்புடன் கலந்துரையாடப்படும் என்றும் குறிப்பிட்டார்.