பிரிட்டனின் குடிவரவு சட்டமூலம் இன அடையாளங்களுக்கு வழிவகுக்கும்; யு.என்.எச்.சி.ஆர்.கடுந்தொனியில் எச்சரிக்கை
லண்டன்: பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரூனால் முன்மொழியப்பட்டிருக்கும் குடிவரவு சட்ட மூலங்களை ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் அமைப்பு மிகவும் வன்மையாகக் கண்டித்துள்ளது.
கமரூனின் புதிய குடிவரவுச் சட்டமூலங்களால் வெளிநாட்டவர்கள் இகழ்ச்சிக்கு உட்படுத்தப்படுதல் வீட்டு வசதி தேவைப்படுவோரின் கோரிக்கைகள் நிராகரிக்கப்படுதல் மற்றும் இன ரீதியிலான
விபரங்களை அடையாளப்படுத்துதல் ஆகிய எதிர்மறையான விளைவுகள் தோன்றியிருப்பதாக யு.என்.எச்.சி.ஆர். அச்சம் வெளியிட்டுள்ளது.
ஐ.நா.அகதிகள் அமைப்பான யு.என்.எச்.சி.ஆரின் ஆணையாளர் அன்ரொனியோ கட்டேரஸீன் அறிக்கை கமரூனின் குடியேற்ற சட்டமூலத்தை மிகமோசமாக கண்டிக்கும் வகையில் அமைந்துள்ளது.
இச்சட்டமூலமானது புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகளை ஓரங்கட்டுவதற்குரிய நடவடிக்கைகளுக்கு வழிவகுப்பதாகவும் சமூகங்களில் பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையிலும் அமைந்திருப்பதாக கட்டேரஸ் கவலை வெளியிட்டுள்ளார்.
பிரிட்டனின் படுக்கை அறை வரித் திட்டமானது நாட்டின் பல பகுதிகளில் வாழும் மக்களை அவலநிலைக்கு உட்படுத்தியிருப்பதாக ஐ.நா.வின் குடியியல் விசேட விசாரணையாளர் ராகுவல் ரொல்நிக் குற்றஞ்சாட்டியமைக்கு பிரிட்டனின் எம்.பி.க்கள் கடுமையான ஆத்திரத்தினை வெளிப்படுத்தியிருக்கும் நிலையிலேயே இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.
சட்டவிரோத குடியேற்றவசிகளை கட்டுப்படுத்தல், தனியார் வீட்டுத் திட்டங்கள் மற்றும் வங்கிகளுக்குரிய மக்களின் அனுமதிகளை கட்டுப்படுத்துதல் மற்றும் தேசிய சுகாதாரத் திட்டம் போன்ற பொது சேவைகளுக்கு தற்காலிக குடியேற்றவாசிகளும் பணம் செலுத்துதல் போன்றவற்றை இலக்காகக் கொண்டு கமரூன் இந்தசட்டமூலத்தை முன்மொழிந்துள்ளார்.
“இந்தச் சட்டமூலத்தின் சரத்துகள் காரணமாக புகலிடக் கோரிக்கையாளர்கள் அகதிகள் மற்றும் மானிய உதவிகளைப் பெறுவோரின் பொதுவான மனோபாவத்தில் இழக்கப்படுதல் ஆகியவற்றில் விளைவுகளை தோற்றுவிக்கும் எனவும் யு.என்.எச்.சி.ஆர். கூறியுள்ளது,
இந்தசட்டமூலம் அமுல்படுத்தப்படல் அது குறித்து யு.என்.எச்.சி.ஆர். தலைமை மிகுந்த கவனம் எடுக்கும். இதனால் அகதிகள், குடியேற்றவாசிகள் போன்றோரின் ஒருங்கிணைவுக்கான நீண்டகால கருத்துகள் சீர்குலைக்கப்படும். அதேநேரம் சமூக ஐக்கியத்துக்கான தீர்வுகளாகவும் அமையக்கூடிய இன அடையாளப்படுத்தலுக்கும் தவறான புரிந்துணர்வுக்கும் வழிவகுக்குமெனவும் கூறப்பட்டுள்ளது.