28 டிச., 2013

மகா. தமிழ் பிரபாகரன் நாடு கடத்தப்படலாம் என தெரிவிப்பு! விடுவிக்க கோரி வைகோ மன்மோகனுக்கு கடிதம்
கைது செய்யப்பட்டு பயங்கரவாத விசாரணை திணைக்கள அதிகாரிகளின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள ஜூனியர் விகடன் சஞ்சிகையின் ஊடகவியலாளர் மகா. தமிழ் பிரபாகரன் இலங்கையில் இருந்து நாடு கடத்தப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கில் இராணு முகாம்கள் மற்றும் பொலிஸ் நிலையங்களை அனுமதியின்றி புகைப்படம் பிடித்த குற்றம் சுமத்தப்பட்டு இவர்கள் நேற்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். இவர் நாவற்குழி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.
வீசா விதிமுறைகளை மீறியமை, அனுமதியின்றி இராணுவ முகாம் மற்றும் பொலிஸ் நிலையங்களை படம்பிடித்தமை காரணமாக இவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர்.
மகா. தமிழ் பிரபாகரன் விசாரணைகளின் பின்னர் நாட்டில் இருந்து வெளியேற்றுவதற்காக குடிவரவு குடியகல்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2ம் இணைப்பு
இலங்கையில் தமிழ் பத்திரிகையாளர் கைது: விடுவிக்க உதவுமாறு பிரதமருக்கு வைகோ கடிதம்!
இலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் மகா.தமிழ் பிரபாகரனை விடுதலை செய்ய உதவிடுமாறு பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில்,
அன்புள்ள டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு,
வணக்கம்.
சுற்றுலா நுழைவு உரிமை பெற்று இலங்கைக்குச் சென்ற, தமிழகச் செய்தியாளர் மகா தமிழ் பிரபாகரன் இலங்கை இராணுவத்தால் கைது செய்யப்பட்டு உள்ள செய்தியை, உடனடியாகத் தங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், வடக்கு மாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை ஆகியோருடன், மகா. தமிழ் பிரபாகரன் பொன்னாவிழி என்ற கிராமத்துக்குச் சென்றார்.
அங்கிருந்து வலைப்பாடு கிராமத்துக்குச் சென்று, புனித அந்தோனியார் தேவாலயத்தின் பங்குத் தந்தை அவர்களோடு உரையாடிக் கொண்டு இருந்தபோது, 25.12.2013 அன்று  பகல் 1.30 மணி அளவில், இலங்கை இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டனர்.
மூவரையும் கைது செய்த இராணுவத்தினர், நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனையும், பசுபதிப்பிள்ளை அவர்களையும் மாலையில் விடுவித்தனர். மகா தமிழ் பிரபாகனை  மட்டும் தொடர்ந்து சிறை வைத்துள்ளனர்.
செய்தியாளர்கள், உலகம் முழுமையும் பயணிப்பதற்கும், மக்களோடு கலந்து உரையாடுவதற்கும் உரிமை பெற்றவர்கள்.ஆனால் இலங்கைத் தீவில், மனித உரிமைகள் நசுக்கப்பட்டு வருவதையும், செய்தியாளர்களுக்கு எவ்வித சுதந்திரமும் இல்லை, உயிர் ஆபத்தை எதிர்கொண்டு இருக்கின்றார்கள் என்பதையும் உலகம் அறியும்.
சண்டே டைம்ஸ் ஏட்டின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க, அரசுப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும் பல செய்தியாளர்களும் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர்.
அண்மையில் இலங்கையின் வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்த இங்கிலாந்து பிரதமர் டேவிட் கமரூன் அவர்கள், இக்கூற்றை உறுதிப்படுத்தியுள்ளார்.
எனவே, மகா தமிழ் பிரபாகரனின் உயிருக்கு இலங்கை இராணுவம் மற்றும் காவல்துறையில் ஊறு நேரக்கூடும் என அஞ்சுகிறேன்.
தாங்கள் உடனடியாக நமது வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் வழியாக நடவடிக்கை மேற்கொண்டு, செய்தியாளர் மகா தமிழ் பிரபாகரனை விடுவித்திட ஆவன செய்திடுமாறு அன்புடன் வேண்டுகிறேன் எனக் கூறியுள்ளார்.