புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 செப்., 2013

நவநீதம் பிள்ளை -யார் இவர்??
தென்னாபிரிக்காவின் டேர்பன் நகர (கிளாயர்வுட் பகுதியில்) சாதாரண குடும்பமொன்றில் பிறந்து உலகின் அதியுயர் கல்வி நிறுவனமான அமெரிக்க ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறை கலாநிதி பட்டம்
(1988) பெற்ற நவிப்பிள்ளை அம்மையார் தென்னாபிரிக்காவின் முதல் ஹாவார்ட் கலாநிதி என்ற பெருமையை பெற்றுக் கொண்டவர். அதனைத் தொடர்ந்து அவர் செய்த சாதனைகளில் ‘‘முதல்’ ’ நிலை பல துறைகளிலும் காணப்பட்டது. அடிப்படையில் இவர் இந்தியாவிலிருந்து தொழில் நிமித்தம் தென்னாபிரிக்காவுக்கு குடிபெயர்ந்து சென்ற இந்திய தமிழ் வம்சாவளி வந்தவராவார்.
தென்னாபிரிக்காவும் இந்தியக் குடிப்பெயர்வும்

தென்னாபிரிக்காவுக்கு இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் குடிப்பெயர்வு 1860 ஆம் ஆண்டு முதலாக ஏற்பட்டுள்ளது. அவர்களுடைய குடித்தொகை தென்னாபிரிக்காவில் இரண்டாம் உலக யுத்தத்தின் இறுதியில் மூன்று இலட்சமாயிருந்து இன்று 13 இலட்சமாகியுள்ளது. இதில் ஆறு இலட்சம் பேர் தமிழர்களாவர். தமிழர்களில் 85 வீதமானோர் இந்துக்களே.

அவர்கள் சுரங்கங்கள், பெருந்தோட்டங்கள், புகையிரத வீதிகள் அமைத்தல் போன்றவற்றிற்காகவும் வர்த்தகம் மற்றும் உயர்தொழில் புரிபவர்களாகவும் தென்னாபிரிக்காவுக்கு குடிபெயர்ந்தவர்கள். அந்நாட்டுப் பொருளாதாரத்திற்காக ஆங்கிலேயர்களால் அழைத்துச் செல்லப்பட்டவர்களை இன்றுவரை ஒரு அரசியல் கொள்கையாக இந்தியா திருப்பி பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற அழுத்தங்கள் அந்நாட்டில் ஏற்படவில்லை.

சில மாகாணங்களில் சில எதிர்மறை நடவடிக்கைகள் சில இனவாத கும்பல்களால் ஏற்பட்டிருந்தபோதிலும் இலங்கையிலிருந்து 1968-, 1983 ஆம் ஆண்டு காலங்களில் ஏறத்தாழ ஐந்து இலட்சம் பேர் தா
யகம் திரும்பி அனுப்பப்பட்டதன் ஒத்த வகையான செயல்கள் ஏற்பட்டதில்லை. தமது நாட்டு பொருளாதார வளர்ச்சிக்கு பங்காற்றிய பிரிவினர் மனித வளங்களாகவே பார்க்கப்பட்டனர். இனவொதுக்கல் ஆட்சியிலும் இனவாதம் பின்பற்றப்படவில்லை.

முன்னாள் தென்னாபிரிக்க ஜனாதிபதி தபோ பேகி 2003 ஆம் ஆண்டு ஏப்ரல் பத்தாம் திகதி தமிழர்கள் தென்னாபிரிக்காவின் வளர்ச்சியில் ஆற்றிய பங்குபற்றி குறிப்பிட்டு டர்பன் நகரில் ஆற்றிய உரையில் நன்றியும் பாராட்டும் தெளிவாக வெளியிடப்பட்டது. அக்கருத்துக்களே தென்னாபிரிக்காவின் அரசியல் நிலைப்பாடாகும்.

அவ்வாறான பின்னணியினைக் கொண்ட சமூகத்தில் 1941 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23 ஆம் திகதி நவி பிள்ளை பஸ் சாரதி ஒருவரின் மகளாக பிறந்தார். அவருடைய தாயார் பாடசாலைக்கே செல்லாதவர். நேட்டால் வாழ் இந்திய சமூகத்தின் அனுசரணையுடன் நேட்டால் பல்கலைக்கழகத்தில் 1963 ஆம் ஆண்டில் பீ.ஏ. பட்டத்தையும் 1965 ஆம் ஆண்டில் LLB என்னும் சட்டத்துறைப் பட்டத்தையும் பெற்றுக்கொண்டார். அதன் பின்னர் ஐக்கிய அமெரிக்காவில் உள்ள உலக பிரசித்தி பெற்ற ஹாவார்ட் பல்கலைக்கழகத்தில் இணைந்து 1982 ஆம் ஆண்டு LLM என்ற சட்ட முதுமாணிப் பட்டத்தையும் பின்னர் சட்ட விஞ்ஞானத்தில் கலாநிதிப் பட்டத்தினையும் பெற்றுக் கொண்டார்.

1965 ஆம் ஆண்டு பரஞ்சோதி ‘‘ஹாபி பிள்ளை’’ என்னும் வழக்கறிஞரை திருமணம் செய்து கொண்ட நவி பிள்ளை ஈஸ்வரி, காமினி என்னும் இரண்டு பெண் குழந்தைகளுக்கும் தாயானார். கல்விக்கும் தொழிலுக்குமாக சமூக வாழ்வில் நிறைவு காணத் தவறவில்லை. குடும்ப வாழ்க்கையை அறிவு, தொழில் முன்னேற்றத்துடன் சமரசம் செய்து கொள்ளவும் இல்லை.

இது அவருடைய சரி சமநிலையுடைய (Balanced) சிந்தனை வளர்ச்சிக்கான அடிப்படை எனலாம். கணவர் பரம்ஜோதி காலமாகிவிட்ட போதிலும் நெல்சன் மண்டேலாவுடன் இனவொதுக்கல் ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் சிறை சென்று விடுதலைப் போராட்டக்காரராக தென்னாபிரிக்க அரசியலில் இனங்காணப்படுகிறார்.

சட்டத்துறை

நவிப்பிள்ளை ஹாவார்ட் பல்கலைக்கழக கல்வியின் பின்னணியினை கொண்டிருந்த போதிலும் தென்னாபிரிக்காவில் நிலவிய அன்றைய ஆட்சியாளர்களின் இனவொதுக்கல் கொள்கை காரணமாக சட்டத்துறையில் போதிய வாய்ப்புக்கள் கிட்டாததால் சுயமாக ஒரு சட்ட நிறுவனத்தை உருவாக்கி தொழில் புரிய நேர்ந்தது. தென்னாபிரிக்காவின் வரலாற்றில் நேட்டால் மாகாணத்தில் முதன் முதலாக சட்டத்துறையில் சுயமாக நிறுவனத்தை உருவாக்கிய வெள்ளையரல்லாத பெண்மணி என்ற ‘‘முதல்’’ நிலை பெருமை இத்துறையிலும் இவருக்குண்டு.

இதற்கான காரணத்தை இவர் விளக்கும்போது ‘‘தன்னை எந்தவொரு சட்ட நிறுவனமும் தொழிலுக்கு அமர்த்தாது என்றும் அதற்கு காரணம் வெள்ளையரல்லாத தனது பணிக்கட்டளைகளை நிறுவனத்தின் ஏனைய பணியாளர்களை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பது தான் காரணம் என்றும் கூறியுள்ளார். வெள்ளையரல்லாதவரென்பதால் நிறவொதுக்கல் ஆட்சியின்போது அவரை ‘‘நீதிபதிகள் கூடும் இடங்களில் அனுமதிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

இதற்காக தொழில் தேடி அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கு குடி பெயரவில்லை. மாறாக 28 வருடங்கள் தென்னாபிரிக்காவிலேயே வழக்கறிஞராக பணியாற்றியதோடு அக்காலப் பகுதியில் இனவொதுக்கல் கொள்கைகளுக்கு எதிரான போராட்டக்காரர்களுக்காக நீதிமன்றங்களில் போராடிக் கொண்டிருந்தார்.

அவர் இனவொதுக்கலுக்கு எதிரான போராட்டங்களின்போது சிறைகளில் இடம்பெற்ற சித்திரவதைகள் பற்றி பகிரங்கப்படுத்தவும் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தரக்குறைவான வசதிகளுடன் அடைத்து வைக்கப்பட்டிருப்பது பற்றி பகிரங்கப்படுத்தவும் ஆற்றிய பணிகள் சுதந்திர தென்னாபிரிக்காவில் நினைவு கூரப்படுகின்றன.

ஜோனா பிஜர் (2008), லூயிஸ் சார்போனோ (2008) ஆகியோரது கட்டுரைகளில் இவை தெளிவாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. அவரது கணவரை இனவொதுக்கல் சட்டத்தின் கீழ் கைது செய்தபோது அவரை சட்டவிரோதமாக குறுக்குக் கேள்விகள் கேட்பதனை தனது வாதத்தால் நிறுத்தியே விட்டார்.

1973 ஆம் ஆண்டு நடைபெற்ற ‘‘டொபன் ஐலண்ட்’’ வழக்கில் நெல்சன் மண்டேலா உட்பட பல அரசியல் கைதிகளுக்கு அவர்களது வழக்குகளில் வாதாட வழக்கறிஞர்களை அமர்த்தும் உரிமையினைப் பெற்றுக் கொடுத்த பெருமை நவிப்பிள்ளையையே சாரும் என மெகி பார்லே (Maggie Farley) என்பவர் (2008) தனது ‘‘மனித உரிமைகளுக்கான ஆணையாளர் தனது உரிமைகளுக்காக நீண்ட காலம் போராடினார்’’ என்னும் கட்டுரையில் விளக்கமாக கூறியுள்ளார்.

குடும்ப வன்முறைகளால் பாதிப்புக்குள்ளாகி துஷ்பிரயோகங்களுக்கு ஆளாகியவர்களுக்கான புகலிடம் வழங்கும் அமைப்பு ஒன்றினை நிறுவுவதற்கு இணை ஸ்தாபகராகவும் பங்காற்றியுள்ளார். அவர் ‘‘பெண்கள் தேசிய கூட்டமைப்பின் அங்கத்தவர்களில் ஒருவராக செயற்பட்டு தென்னாபிரிக்க அரசாங்கத்தின் யாப்பில் (அரசியல் அமைப்பில்) இனம், சமயம், பாலியல் என்பனவற்றின் காரணமாக எவரொருவருக்கும் சமவுரிமை வழங்குவதில் பாகுபாடு காட்டக்கூடாது என்னும் சரத்தினை சேர்த்துக் கொள்வதற்கும் பெரும்பங்காற்றியுள்ளார். தொடர்ந்து 1992 ஆம் ஆண்டு ‘‘இப்போதே சமத்துவம்’’ (Freedom Now) என்னும் சர்வதேச பெண்கள் உரிமை அமைப்பினை உருவாக்கிய முன்னோடி நிறுவுனர்களில் ஒருவராகவும் பங்களித்துள்ளார்.

கிவா சூலு- நேட்டாலில் உள்ள (Kiwazulu) பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றியதனைத் தொடர்ந்து வெஸ்ட்விலி டேர்பன் பல்கலைக்கழகத்தின் மூதவையின் துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.

‘‘ஆபிரிக்க தேசிய காங்கிரஸ்’’ தென்னாபிரிக்காவில் ஆட்சியமைத்த அடுத்த வருடம் (1995) தென்னாபிரிக்க ஜனாதிபதி நெல்சன் மண்டேலா நவிப்பிள்ளையை தென்னாபிரிக்காவின் உயர் நீதிமன்றத்திற்கு முதன் முறையாக வெள்ளையரல்லாத ஒருவராக நீதிபதி பதவிக்கு நியமித்தார்.

அது பற்றி நவிப்பிள்ளை குறிப்பிடும் போது 1967 ஆம் ஆண்டு சட்டத்துறையில் பணியாற்ற ஆரம்பித்த எனக்கு நான் நீதிபதி பதவிக்கு நியமிக்கப்பட்ட பின்னர்தான் நீதிபதிகள் கூடும் (மன்றில்) மன்றத்தில் நுழைய முடிந்தது எனக் கூறியுள்ளார். இனவொதுக்கல் கொள்கைக்கு எதிரான இவரது போராட்டம் 28 வருடம் தொடர்ந்திருக்கிறது. தென்னாபிரிக்காவில் அவருடைய நீதிபதிப் பணி சிறிது காலமே நிலவியது.

ருவாண்டா சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (1995- 2003)

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையினால் நவநீதம்பிள்ளை ருவாண்டாவிற்கான சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதியாக 1995 இல் நியமிக்கப்பட்டார். அதில் எட்டு வருடங்கள் பணியாற்றிய காலப் பகுதியில் நான்கு வருடங்கள் அதன் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றினார்.

அந்த தீர்ப்பு மன்றத்தின் (Tribunal) முதல் நான்கு வருடகாலப் பகுதியில் அவரொருவரே அம்மன்றில் பெண் நீதிபதியாக பணியாற்றியவர். அந்த நீதிமன்றத்தின் ஜூன் போல் அக்காய சூ என்னும் வழக்கு விசாரணையின் போது பாலியல் வன்முறை (கற்பழிப்பு) மற்றும் பாலியல் ரீதியாக வலிந்து தாக்குதல் (Sexual Assault) என்பனவும் இன அழிப்பு நடவடிக்கைகளே என தீர்மானித்தமைக்கு அவர் ஆற்றிய பங்கு இனங் காணப்பட்டுள்ளமை பற்றி எமிலி நியூபேர்ஹர் (Emily New burger 2006) என்பவர் ஹாவார்ட் சட்ட சஞ்சிகையில் வெளியிட்ட கட்டுரையில் கூறியுள்ளார்.

நவிப்பிள்ளை இதுபற்றி அளித்த பேட்டி ஒன்றில் எமது நினைவுக்குட்பட்ட காலம் முதலாக கற்பழிப்பு என்பது போரில் கைப்பற்றிய திறை (கப்பம்) ஒன்றே எனக் கருதப்பட்டு வந்துள்ளது. இப்போதிலிருந்து இது ஒரு பாரிய யுத்த குற்றமாகக் கருதப்படும் என சூளுரைத்தார்.

கற்பழிப்பு என்பது யுத்தத்தின் வெற்றிச்சின்னம் என இனிமேலும் கருதக்கூடாது என்ற கடுமையான செய்தியை நாம் அனுப்பி வைக்க வேண்டும் என இவர் கூறியதனை பில் பெக்கர்லி (Bill Berkeley) என்பவர் ‘‘கடவுளின் இறுதி தீர்ப்பு நாள்’’ (Judgement day) என்னும் கட்டுரையில் கூறியுள்ளார். இது வொஷிங்டன் போஸ்ட் ஞாயிறு சஞ்சிகையில் (11.10.1998) வெளியிடப்பட்டு பெரிதும் பாராட்டுதலுக்குள்ளாகியிருந்தது.

சர்வதேச குற்றவியல் விசாரணை மன்றம்

2003 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் முறையாக உருவாக்கப்பட்ட சர்வதேச குற்றவியல் விசாரணை மன்றத்தின் நீதிபதிகளில் ஒருவராக நியமிக்கப்பட்டு அதன் மேன்முறையீட்டு பிரிவு நீதிபதியானார். அப்பதவி ஆறு வருடங்களுக்கானது. ஆயினும் ஐக்கிய நாடுகள் சபையினால் அதன் மனித உரிமை உயர்ஸ்தானிகராக (ஆணையாளர்) பணியாற்ற அழைக்கப்பட்டமை காரணமாக சர்வதேச நீதிமன்ற நீதிபதி பதவியை 2008 ஆம் ஆண்டு ராஜினாமா செய்ய வேண்டியதாயிற்று..

மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர்

கனடிய நாட்டு லூயிஸ் ஆபர் அம்மையார் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் பதவியை விட்டு சென்றதும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் நவிப்பிள்ளை அம்மையாரை அப்பதவிக்கு 24.7.2008 இல் முன்மொழிந்தார். ஐக்கிய அமெரிக்கா, இவ்வம்மையார் கருக்கலைப்புத் தொடர்பில் வெளியிட்டுள்ள சில கருத்துக்கள் காரணமாக இவருடைய நியமனத்திற்கு முதலில் தயக்கம் காட்டிய போதிலும் இவருடைய உயர் தகுதிகள், நீதித்துறை அனுபவம், தென்னாபிரிக்க சமத்துவ போராட்டத்திற்கான பங்களிப்பு, நெல்சன் மண்டேலாவின் அங்கீகாரம் போன்றவை காரணமாக தனது தயக்கத்தை தவிர்த்துக் கொண்டது.

ஜூலை 28 ஆம் திகதியே ஒரு சிறப்பு கூட்டம் ஒன்றில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை இவருடைய நியமனத்தை ஏகமனதாக நிறைவேற்றியது. 1.9.2008 இல் ஆரம்பித்த தனது உயர்ஸ்தானிகர் பணியின் நான்கு வருட இறுதியில அவர் ‘‘உயர்ஸ்தானிகர்’’ என்பவர் ‘‘பலியானவர்களது குரல்’’ என அடையாளம் காட்டினார்.

அவரே அதற்கு வாழும் சாட்சி. 2012 ஆம் ஆண்டு அவரை மீண்டும் இரண்டு வருடம் அப்பதவியினை புரியுமாறு செயலாளர் நாயகம் ஐ.நா. சபையின் சார்பில் கேட்டுக் கொண்டு நியமித்துள்ளார். மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகர் என்ற வகையில் சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தில் பாலியல் திசையமைவு (Sexual Orientation) மற்றும் பால் அடையாளம் என்பன பற்றிய ஆவணத்தில் அவர் ஒப்புதல் கூறி கையெழுத்திட்டுள்ளார். அச்சட்டத்தின் தலைப்பு ‘‘சுதந்திரமாகவும் சமத்துவத்துடனுமே பிறந்தோம்’’ (Born Free and Equal) என்பதாகும்.

கெளரவிப்பு

உலக பிரசித்தி பெற்ற ‘‘பெண் உரிமைக்கான குரூபர் பரிசு’’ 2003 ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது. இதன் பெறுமதி ஐந்து இலட்சம் அமெரிக்க டொலர்களாகும். இலங்கை ரூபாவில் அது 6 கோடி ரூபாவாகும். 2007 ஆம் ஆண்டு பிரித்தானிய டராம் பல்கலைக்கழகமும் 2008 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவின் நியூயோர்க் நகர சட்ட பீட பல்கலைக்கழகமும் இலண்டன் பொருளாதார பல்கலைக்கழகம் மற்றும் ரோட்ஸ் பல்கலைக்கழகம் என்பனவும் இவருக்கு கெளரவ ‘டாக்டரேட்’’ பட்டங்களை வழங்கி கெளரவித்து பெருமைப்படுத்தியுள்ளன.

2009 ஆம் ஆண்டு உலகின் உயர் அதிகாரம் வாய்ந்த முதல் 100 பெண்களில் ஒருவர் என இவரை அடையாளம் செய்து உலகிற்கு இவரை அடையாளம் காட்டியுள்ளது. 64 ஆவது இடத்தை பெற்றுள்ளார்.

ஆயினும் நவிப்பிள்ளையின் 64 ஆவது அதிகாரமிக்க உலகப் பெண்மணி என்ற மதிப்பீட்டில் சில உட்பொதிந்திருந்த கருத்துக்களையும் நாம் அலசி ஆராய வேண்டியுள்ளது.

இவரை விட அதிகாரம்கூடியவர்கள் எனக் கருதப்பட்டவர்களில் மிகப் பெரும்பான்மையினர் வர்த்தகத் துறையில் கொடிகட்டிப் பறப்பவர்களும், அரச பரம்பரை மற்றும் ஆட்சியாளர்களுமாவார்கள். உதாரணமாக உலகின் முதலாவது அதிகாரம் கூடிய பெண்மணியாக ஜெர்மனி நாட்டின் சான்சலர் எனப்படும் ஜனாதிபதி பதவியை வகிக்கும் அஞ்செலா மேர்கல் என்பவராவார். கடந்த மூன்று வருடங்களாக அவரே அந்த அந்தஸ்தை வகித்து வந்த பெண்மணியாவார்.

இரண்டாவது நிலையை வகிப்பவர் அமெரிக்கரான சீலாபேயர் எனும் ‘‘சமஷ்டி வைப்பு காப்புறுதி நிலையத்தின்’ ’ தலைவராவார். காரணம் அதிகாரமிக்க பெண்மணிகளாக தெரிவு செய்யப்படுபவர்களுக்கான அடிப்படை நிர்ணய காரணிகள் அரசியல் பதவிகளும், பொருளாதார பலம் மற்றும் அரச குடும்ப வாரிசுகள் என்பதாக இருப்பதாகும்.

ஆனால் கல்வி, அறிவு, தேச விடுதலை போராட்டத் தொண்டு, சமத்துவ சிந்தனை, நல்லாட்சி மற்றும் மனித உரிமைகளுக்கு ஆற்றிய பணி போன்ற மகத்தான தொண்டுகளின் அடிப்படையில் கணிக்கப்பட்டிருந்தால் நவிப்பிள்ளையின் அதிகார அந்தஸ்தினை விட உயர்ந்தவர்களாக இப்போது கணிக்கப்பட்டுள்ள பெண்களில் எத்தனை பேர் இவரை விட முன் வரிசைகளில் இடம்பெறுவர் என்பது சந்தேகமே. உதாரணமாக சோனியா காந்தி ஆறாவது இடம்பெறுகிறார்.

அரசியல் முக்கியத்துவத்தின் அடிப்படையில் மட்டுமே இவ்விடத்தைப் பெறுகிறார். மகாத்மா காந்தி என்பவர் யார் என்று தெரியாத அரசியல் பிரமுகர் ஒருவரும் அத்தகைய உயர் அதிகாரம் கொண்டவராக கடந்த வருடங்களில் கணிக்கப்பட்ட அபத்தமும் உண்டு. எனவே போப்ஸ் மதிப்பீடு எந்தளவுக்கு சரியான பலம் வாய்ந்தவர்களையே அடையாளம் செய்கிறது என்பது பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டிய தொன்றாகும். அதன் நிர்ணய காரணிகளை கவனத்திற் கொள்ளுதல் அவசியம்.

மேற்கூறிய சாதனை படைத்த ஒருவரைப் பார்த்து தமிழின சார்பானவர் என கருத்து கூறப்பட்டமை தொடர்பில் ஐ.நா. அதிகாரி ஒருவரின் கண்டனச் செய்தி பின்வருமாறு இருந்தது.

‘‘நவிப்பிள்ளையின் கடந்த கால சேவை அப்பழுக்கற்றது. அவர் இந்திய பாரம்பரியம், தமிழினப் பிறப்பு, இனம், சமயம், நாடு, சுயநலம் என்பவற்றை கடந்து ஒரு சர்வதேச பிரசையாகிவிட்டவர். மனித உரிமை, பெண் உரிமை, பாதிக்கப்பட்டவர்களுக்கான விமோசனம் பற்றி சுவாசித்துக் கொண்டு கடமை தவறாது நடு நிலை வகிக்கும் அறிவார்ந்த பெண்மணி, அவரை இன, மதவாத சிந்தனையுடன் பார்ப்பதோ ஒரு பெண் என பார்ப்பதோ அறிவற்ற இழி நிலை சிந்தனையாகும்’’

அன்னாரது இலங்கை விஜயம்

இலங்கைக்கு ஏற்கனவே அதுவும் பெரிதும் உன்னதமான ஒரு பணிக்காக இலங்கை வந்திருக்கிறார். காலஞ்சென்ற கலாநிதி நீலன் திருச்செல்வம் நினைவுப் பேருரையாற்றவே அப்போது வந்திருந்தார்.

இப்போது (ஆகஸ்ட் 2013) ஐக்கிய நாடுகள் சபையின் உயர்ஸ்தானிகராக இலங்கை சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மற்றும் மனித உரிமைகள் சட்டங்களை மீறி போரின் இறுதிகால கட்டங்களில் நடந்து கொண்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தகவலறிந்து இவ்வருடம் செப்டெம்பர் மாத இறுதியில் ஜெனிவா ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஆகஸ்ட் 25- – 31 திகதிகளில் வந்திருந்தார்.

இவருடைய வருகை பற்றிய வேறுபட்ட விமர்சனங்களில் பாராளுமன்ற மக்கள் பிரதிநிதியும் மற்றும் முன்னாள் மனித உரிமை ஆணைக்குழுத் தலைவருமான பேராசிரியர் ரஜீவ விஜயசிங்கவின் கருத்து கவனிக்கத்தக்க தொன்றாகும்.

‘‘ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை இலங்கைக்கு மேற்கொள்ளவிருக்கும் விஜயத்தை இந்நாட்டில் மனித உரிமைகள் தொடர்பில் கொள்கைகளையும் நடைமுறைகளையும் மேம்படுத்துவதற்கு அரசாங்கத்திற்கு கிடைத்திருக்கக் கூடிய சிறந்த சந்தர்ப்பமாக பார்க்க முடியும். இவ்வாறான சந்தர்ப்பம் இலங்கையினால் பயன்படுத்திக் கொள்ளப்படும் என்றும் இதனை ஒரு அச்சுறுத்தலாக பார்க்கக்கூடாது என்றும் நான் நம்புகிறேன்’’ என 15.8.2013 திகதியிட்ட ‘‘சமகாலம்’’ என்னும் சஞ்சிகையில் கருத்து வெளியிட்டுள்ளார்.

இது கவனிக்கத்தக்கதோர் விமர்சனமாகும். ‘‘கற்றாரே கற்றாரை காமுறுவர்’’ என்னும் பாவுக்கும் கருத்திற்கும் வெளிச்சம் தெரிகிறது. இலங்கையில் கற்றவர்கள் மத்தியில் இத்தகைய போக்கிலான கருத்துக்களே நிலவுகின்றன.

நாட்டின் ஜனாதிபதியும் கூட நவநீதம்பிள்ளையை மிகவும் கெளரவத்துடன் பார்த்தார் என்பதற்கு அவரைப் பற்றிய தரக்குறைவான முறையில் அரசாங்க தரப்பு பாராளுமன்ற அமைச்சர் ஒருவர் உரையாற்றியதற்காக மன்னிப்பு கோரியதிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது. தரங்கெட்ட விமர்சனம் குறித்து நாட்டின் ஜனாதிபதி மன்னிப்பு கோரியமை ஜனாதிபதியின் பெருந்தன்மைக்கு ஒரு உதாரணமாக கருத வேண்டும். ஆயினும் இப்படிப்பட்டவர்களை ஜனாதிபதியின் சகாக்கள் எனக் கூறுவது ஜனாதிபதியின் பதவிக்கே இழிவென்றும் அபிப்பிராயங்களும் நிலவுகின்றன என்றும் நம்பலாம்.

விமர்சனம்

இவர் கனடாவின் கியூபெக் மாகாணத்தில் மாணவர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டபோது அவர்களது அமைதியான எதிர்ப்பிற்கும் சுதந்திர கருத்து வெளியிடுவதற்கும் எதிராக தடை விதித்து கனடிய அரசாங்கம் மனித உரிமைகளை மீறும் வகையில் நடந்து கொண்டதாக அந்த அரசாங்கத்தை கரும் பட்டியலில் அடையாளம் செய்துவிட்டார். இதற்கு கனடிய அரசாங்கம் தரப்பில் மோசமாக மனித உரிமைகளை மீறும் நாடுகளின் பட்டியலில் கனடாவையும் சேர்த்ததற்காக இவருக்கு எதிராக கண்டனம் கூறப்பட்டது.

சீனாவில் 3500 இற்கும் மேற்பட்ட மாணவர்களை டெனன்ஹைம் சதுக்கத்தில் (1994) அரை மணி நேரத்தில் சுட்டுக் கொல்லப்பட்டமையுடன் ஒப்பிடுகையில் இது ஒன்றுமே பெரியகுற்றம் அல்ல. ஆனாலும் வளர்ச்சியுற்ற செல்வந்த நாடானாலும் அது செய்த சிறிய அணிவகுப்பு தடை குற்றமும் குற்றமே என நெற்றிக்கண்ணைக் காட்டியிருக்கிறார். அவுஸ்திரேலியாவுக்கு உயிரைப் பணயம் வைத்து செல்பவர்களின் வரிசையில் ஈரானே முன்னணியில் உள்ளது. அதையடுத்தது தான் இலங்கை. அடுத்து ஆப்கானிஸ்தான். ஈரானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையில் இலங்கை காணப்படுவது கவலைக்குரியதாகும்.

முடிவுரை

இவ்வாறான மனித உரிமைகள் மீறல்கள் பற்றிய கண்காணிப்பில் தற்போது நவநீதம்பிள்ளை தனது 72 ஆவது வயதிலும் ஈடுபாட்டுடன் செயற்படுவது தனது வயதுக்கே அவர் சவால் விடுவதாகத் தென்படுகிறது. இலங்கையிலிருந்த 6 நாட்களில் (6 x 16) 96 மணி நேரத்திற்கு மேல் கூட்டங்கள், சந்திப்புக்கள், பேட்டிகள், பயணங்கள் என்பவற்றிற்காக பணியாற்றியுள்ளார் என்ற புள்ளிவிபரம் சிந்திப்பவரை மலைக்க வைக்கின்றது.

கண் திருஷ்டியாகாது? அவர் போன்றவர்களுக்கே கூடிய பலமும் ஆயுளும் தேவை. மனித குலத்தின் மகிழ்ச்சிக்கும் பாதுகாப்பிற்கும் பாடுபடுபவர்களே நீண்டகாலம் வாழ வேண்டியவர்கள். அவருக்கு ஆரோக்கியமான நீண்ட ஆயுள் கிட்டட்டும்.

ad

ad