அன்பார்ந்த எனது வாசகப் பெருமக்களே..!
அஸ்ஸலாமு அலைக்கும் (வறஹ்..)

நேற்று (31.10.2013) வியாழக்கிழமை காலை 07:45 மணியளவில் எனது வீட்டுக் கதவு தட்டப்பட்டது. திறந்து பார்த்தபோது, ஐந்து பேர் ட்ரவுஸர், டீ சேர்ட் அணிந்தவர்களாக நின்றனர். ஒரு பொலீஸ் ஜீப்பும் வீட்டு வாசல் முன்பாக நிறுத்தப்பட்டிருந்தது. அதிலும் ஒருவர் காணப்பட்டார்.
‘இது புவியின் வீடா?’ என்று அவர்களில் ஒருவர் கேட்டார். ‘ஆம்’ என்றேன். ‘புவி எங்கே?’ என்று மீண்டும் அவர் கேட்டார்;. ‘நான் தான் புவி’ என்றேன்.
‘உங்களின் வீட்டில் கஞ்சா இருப்பதாக 119 பொலீசுக்கு தகவல் கிடைத்துள்ளது. நாங்கள் வீட்டைச் சோதனை இட வேண்டும்’ என்றார்கள்.
‘நான் ஒரு பத்திரிகை ஆசிரியர். கஞ்சா எதுவும் எனது வீட்டில் இல்லை. என்றாலும் உங்களின் கடமைக்கு நான் இடையூறு ஏற்படுத்தவில்லை. நீங்கள் விரும்பினால் தாராளமாகச் சோதனை இடலாம்’ என்று கூறி அரைகுறையாக விரித்திருந்த வாயிற்கதவை முழுமையாகத் திறந்து விட்டேன்.