-

9 நவ., 2025

இளஞ்செழியனின் நீதித்துறை சேவையை பாராட்டி மகிழும் சுவிஸ் தமிழ் சமூகம்

www.pungudutivuswiss.com


ஈழத்து வரலாற்றில் நீதித்துறையில் தனக்னெ ஓர் தடம் படைத்து 
சரித்திர நாயகனாக வலம் வரும் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் 
நீதியின் காவலனாக போற்றப்படுகின்றார்.

நீதித்துறை சேவையில் சுமார் மூன்று தசாப்தங்களாக அர்ப்பணிப்புடன் அளப்பரிய சேவைகளை அவர் வழங்கியுள்ளார்.

நீதிபதி எம்.இளஞ்செழியன் இலங்கை நீதித்துறை வரலாற்றில் மிக முக்கியமான பல வழக்குகளில் தைரியமாக பக்கச்சார்பற்ற தீர்ப்புகளை வழங்கியுள்ளார்.

இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போக செய்யப்பட்ட வழக்குகள் தொடர்பில் படை அதிகாரிகளுக்கு எதிராக தீர்ப்பு வழங்கியிருந்தார்.

நீதித்துறையில் புகழ்பூத்த அதிகாரிகள் சிலர் முக்கிய வழக்கு விசாரணைகளின் போது அந்த வழக்கிலிருந்து விலகிக் கொள்ளும் சந்தர்ப்பங்களில், துணிந்து வழக்கு விசாரணைகளை மேற்கொண்டு நீதியை நிலைநாட்டும் தற்துணிவுயும் கடமையுணர்வும் நீதிபதி இளங்செழியனுக்கு நிதித்துறைக்கு உள்ளேயும் வெளியேயும் பெரும் நன்மதிப்பினை பெற்றுத் தந்தது.

பல்வேறு சந்தர்ப்பங்களில் மிக முக்கியமான வழக்குகளில் அவர் தைரியமான தீர்ப்புகளை வழங்கியிருந்தார்.

குறிப்பாக புங்குடிதீவல் பதினைந்து வயது மாணவியான சிவலோகநாதன் வித்யா என்ற மாணவி கூட்டு பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஏழு பிரதிவாதிகளுக்கு மரண தண்டனை விதித்திருந்தார்.

மேலும் இந்து ஆலயங்களில் மிருக பழி பூஜைகள் நடத்தப்படுவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பு வழங்கியிருந்தார்.

முன்னாள் அமைச்சர் மோவின் செல்வா இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார் இந்து ஆலயங்களில் மிருகப் பலிபூஜைகள் நடாத்தப்படுவதனை தடுத்து நிறுத்துமாறு மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனுவை பரிசீலனை செய்த நீதிபதி மிருகங்களை கோயில் வளாகங்களில் வதை செய்வது கூடாது என தீர்ப்பு வழங்கியிருந்தார்.

இதேவேளை, இளைஞர் ஒருவர் கடத்தி காணாமல் செய்யப்பட்ட வழக்கில் படை அதிகாரிகளுக்கு எதிராக தண்டனை விதித்ததுடன் ஒரு மில்லியன் ரூபா நட்டஈட்டை குறித்த இளைஞனின் குடும்பத்திற்கு வழங்க வேண்டும் என தீர்ப்பு வழங்கி இருந்தார்.

அனேகமான சந்தர்ப்பங்களில் அவர் பக்க சார்பற்ற நீதியான தீர்ப்புகளை வழங்கியிருந்தார்.

இதனால் இலங்கையில் தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் மத்தியில் நீதிபதி இளஞ்செழியனுக்கு பெரும் மரியாதையும் வரவேற்பும் காணப்படுகின்றது.

அவர் தனது தீர்ப்புக்களை மனசாட்சியின் அடிப்படையில் மிகவும் பக்கச்சார்பற்ற வகையில் வழங்கியுள்ளார்.

வவுனியா யாழ்ப்பாணம் திருவோணமலை உள்ளிட்ட பல இடங்களில் அவர் நீதிபதியாக கடமையாற்றியுள்ளார். என்பதுடன் வடக்கு கிழக்கு மாகாணங்களில் நீண்ட காலம் கடமையாற்றிய தமிழ் நீதிபதியாக காணப்படுகின்றார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22 ஆம் திஎதி யாழ்ப்பாணம் நல்லூரில் வைத்து நீதிபதி இளஞ்செழியன் பயணம் செய்த வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

நீதிபதியை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

இந்த துப்பாக்கி சூட்டின் போது அவருக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை.

எனினும் அவரது மெய்ப்பாதுகாவலர்கள் காயமடைந்தனர், அதில் ஒருவர் உயிரிழந்தார்.

ஹேமரத்ன என்ற சார்ஜன்ட் தர மெய்ப்பாதுகாவலரே சம்பவத்தில் உயிரிழந்தார்.

தமக்கு பல ஆண்டுகள் பாதுகாப்பு வழங்கிய பொலிஸ் உத்தியோகத்தரின் பிரிவு நீதிபதியை கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியது.

நீதிபதி, உயிரிழந்த மெய்ப்பாதுகாவலரின் வீட்டுக்குச் சென்று கதறியழும் காட்சிகள் சமூக ஊடகத்தில் பகிரப்பட்டிருந்தது.

மறைந்த பொலிஸ் உத்தியோகத்தரின் பிள்ளைகளது எதிர்காலத்தை பயன் படுத்துவதற்கான சகல பொறுப்பினையும் நீதிபதி இளஞ்செழியன் ஏற்றுக் கொண்டிருந்தார்.

இலங்கையில் தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் நீதித்துறையில் அரும் பணியாற்றி வந்த நீதிபதி இளஞ்செழியன் அவர்களுக்கு நீண்ட ஆயுள் ஆரோக்கியம் கிட்ட வேண்டும் என நாம் அனைவரும் பிரார்த்தனை செய்கின்றோம்.

இலங்கையராக, தமிழராக,  யாழ் மண்ணின் மைந்தராக நீதித்துறைக்கும் மனிதாபிமான செயல்பாடுகளுக்கும் இளஞ்செழியன் ஐயா வழங்கி வரும் அளப்பரிய பங்களிப்பு வார்த்தைகளால் வரையறுத்து விட முடியாது, எங்கள் சமகாலத்தில் இவ்வாறு நீதியை போற்றும் நீதியின் வழி நடந்து கொள்ளும் ஒழுக்க சீலர்களை காண்பது பெருமிதம் அளிக்கின்றது.

சட்டத்தின் ஆட்சியை நிலை நாட்டுவதற்கு சற்றும் வளைந்து கொடுக்காத போக்குடன் நேர்மையாக நிமிர்ந்து நின்று கடமையை செய்து வீறு நடை போடும் எங்கள் இளஞ்செழியன் ஐயாவின் சேவையை பாராட்டி மகிழ்வதில் பெரு உவகை கொள்கின்றோம்.

எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் பாதிக்கப்பட்ட சமூகத்தினருக்கு உதவும் அந்த உயரிய குணம் அவரை என்றென்றும் கீர்த்தியுடன் திகழச்செய்யும் என்பதில் துளியும் ஐயமில்லை.

இளஞ்செழியன் ஐயா உங்களின் கடமையுணர்வு, மனித நேயம், சக மனிதர்கள் மீதான உங்கள் கருணை, இன்னும் எத்தனையோ உயரி பண்புகளை போற்றிப் புகழ்வது எம் தலையாய கடமையாகும்.

எதிர்கால தலைமுறையினர் உங்களிடம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளம் ஏராளம்.

இலங்கை தேசத்திற்கு இன்னும் பல சேவைகளை நீதித்துறையின் ஊடாக செய்வதற்கும் சந்தர்ப்பம் கிட்ட வேண்டும் என்பதே எம் அனைவரினதும் அவா. வாழ்க வளமுடன்.

ad

ad