புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 பிப்., 2015

வனவியல் கல்லூரி மாணவர்கள் கோரிக்கையை தமிழக அரசு ஏற்க வேண்டும்!: வைகோ

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை:

’’காடுகளின் வளத்தைக் காப்பதையும் பெருக்குவதையும் குறிக்கோளாகக் கொண்டு, வனத்தொழில்நுட்பம் அறிந்த பட்டதாரிகளை உருவாக்க இந்திய அரசின் 1972 தேசிய வனக்கொள்கையின் அடிப்படையில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் அங்கமாக கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் 1985-இல் வனவியல் கல்லூரி தொடங்கப்பட்டது. இதில் வனவியல் பட்டப் படிப்பு நான்கு ஆண்டு காலமாகும். தமிழ்நாடு வனத்துறையில் வனச்சரகர், வனவர் பணியிடங்களுக்கு வனத்துறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.

2009-ஆம் ஆண்டில் தமிழக அரசு வனச்சரகர் பணிக்குக் கல்வித் தகுதியாக வனவியல் படிப்பை அறிவித்து, அரசு ஆணை எண் 118 ஐ வெளியிட்டது. அதன் அடிப்படையில் கடந்த ஆண்டில் 74 பேர் வனச்சரகர் பணி வாய்ப்பைப் பெற்றார்கள். வனவர் பணி நியமனத்துக்கு இவ்விதமான அரசு ஆணை இதுவரை வெளியிடப்படவில்லை. அந்தப் பணியிடங்களுக்கும் வனவியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் அரசு ஆணை வெளியிட வேண்டியது தமிழக அரசின் கடமையாகும்.

நிலைமை இவ்வாறு இருக்க ஏற்கனவே வனச்சரகர் பணி நியமனத்துக்கு 2009-இல் வெளியிடப்பட்ட அரசு ஆணை எண் 118 ஐ இரத்து செய்து, இன்றைய தமிழக அரசு வனவியல் பட்டதாரிகளின் எதிர்காலத்தையே பாழாக்கும் விதத்தில் புதிய அரசு ஆணை எண் 76 ஐ வெளியிட்டது.

தமிழ்நாடு வனத்துறை சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் கடந்த டிசம்பரில் 181 வனவர் பணி நியமனத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதில் வனவியல் பட்டதாரிகளுக்கு எந்த முன்னுரிமையும் இல்லை என்பது மிகப் பெரிய அநீதியாகும்.

தமிழ்நாட்டில் ஒரே ஒரு வனவியல் கல்லூரியில் பொருட்செலவு செய்து, நான்கு ஆண்டுகள் பயிலுகிற பட்டதாரிகளின் எதிர்காலத்தையே சூனியமாக்கும் விதத்தில் அரசின் நடவடிக்கை அமைந்து விட்டதால், இக்கல்லூரியில் பயிலுகிற 200 மாணவ-மாணவிகள் கடந்த 26 நாட்களாகத் தங்களை வருத்திக் கொண்டு அறப்போராட்டம் நடத்துகின்றனர்.

புதிய நியமனங்களுக்காக வனத்துறை பணியாளர் தேர்வுக் குழுமம் பிப்ரவரி 22-ஆம் நாள் தேர்வையும் அறிவித்துவிட்டது. இந்தத் தேர்வை இரத்துச் செய்ய வேண்டும் என்ற மாணவர்களின் நியாயமான கோரிக்கையை அரசு உதாசீனம் செய்துவிட்டது. உண்ணாவிரதம் இருந்த மாணவ-மாணவிகள் 67 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் பெரும்பாலோரை அரசு மருத்துவமனை கட்டாயப்படுத்தி வெளியேற்றிவிட்டது. தற்போது 22 மாணவ-மாணவிகளின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிப்ரவரி 20-ஆம் தேதி மாலை 3 மணிக்கு முதலமைச்சர் அவர்களும், வனத்துறை அமைச்சர், விவசாயத்துறை அமைச்சரும் மாணவர்களின் பிரதிநிதிகளை சந்திப்பார்கள் என்று அறப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களுக்கு 19-ஆம் தேதி மாலை 7 மணிக்கு வனக்கல்லூரி முதல்வரால் தெரிவிக்கப்பட்டது. மாணவர்கள் நம்பிக்கையோடு இருந்தனர். ஆனால், இரவு 12 மணி அளவில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களோடு அறிவிக்கப்பட்ட சந்திப்பு இரத்து செய்யப்பட்டுவிட்டது என தெரிவிக்கப்பட்டது.

வனக்கல்லூரி மாணவர்களின் வாழ்வோடு விளையாடும் தமிழக அரசின் போக்கு நியாயமற்றது; மிகவும் கண்டனத்துக்குரியது. வனவியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு கொடுக்காமல், பணியிடங்களை நிரப்ப அனைவரையும் அழைத்து கண்துடைப்புக்காக ஒரு தேர்வு நடத்துவதன் மர்மம் என்ன? என்ற கேள்வி எழுகிறது.

வெறும் 200 மாணவர்கள்தானே, அவர்களுக்கு வேறு என்ன நாதி இருக்கிறது? என்ற மனப்பான்மையோடு அரசு செயல்படுவது மிகவும் தவறான போக்கு ஆகும். புதிய அரசு ஆணை 76 இரத்து செய்யப்பட வேண்டும், பழைய அரசு ஆணை 118ஐ அமுல்படுத்த வேண்டும். வனவர் பணி நியமனத்துக்கும் இதுபோன்ற முன்னுரிமை தந்து அரசு ஆணை வெளியிடப்பட வேண்டும்.

வனவியல் மாணவர்களின் பிரதிநிதிகளை உடனடியாக அழைத்து தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அப்படி உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தாவிட்டால், மாணவர்களின் கோரிக்கைகளை ஆதரித்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞர் அணி, மாணவர் அணி சார்பில் பிப்ரவரி 25-ஆம் தேதி புதன்கிழமை காலை 10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இளைஞர் அணிச் செயலாளர் வே.ஈசுவரன் தலைமையில், மாணவர் அணிச் செயலாளர் தி.மு.இராசேந்திரன், கோவை புறநகர் மாவட்டச் செயலாளர் குகன்மில் செந்தில் ஆகியோர் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.’’

ad

ad