புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 பிப்., 2015

நீதி கேட்டு அணி திரள்க - மாணவர் ஒன்றியம்

ஐ.நா விசாரணை அறிக்கையை விரைவாக வெளியிடுமாறு வலியுறுத்தி நாளைமறுதினம் இடம்பெறும் பேரணியில் அனைவரையும்
கலந்துகொள்ளுமாறு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கேட்டுக்கொண்டுள்ளது.
 
இது தொடர்பில் மாணவர் ஒன்றியம் விடுத்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
 
இறுதிப் போரிலே எம் இனத்தின் மீது இலங்கை அரசு அதன் இராணுவ இயந்திரத்தைக் கொண்டு ஈவிரக்கமின்றி நிகழ்த்தப்பட்ட மனிதப் பேரவலங்களுக்கு ஆறு வருடங்களை எட்டிய நிலையிலும் நீதி கிடைக்கவில்லை. 
 
இருப்பினும் ஒவ்வொரு ஆண்டும் நம்பிக்கை ஊட்டும் வகையில் ஐ.நா. மனித உரிமைச் சபையிலே இது தொடர்பான பிரேரணைகள் சர்வதேச நாடுகளின் பேராதரவுடன் நிறைவேற்றப்பட்டு வந்தன. 
 
ஆனால் அதற்கெல்லாம் கடுகளவும் அசையாத நிலையிலேயே மஹிந்த தலைமையிலான இலங்கை அரசு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் இவ்வருட மார்ச்சில் இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கை திட்டமிடப்பட்டபடி சமர்ப்பிக்கப்பட இருந்தபோதும் இலங்கையின் புதிய அரசு விடுத்த வேண்டுகோளின்படி விசாரணை அறிக்கை செப்ரெம்பருக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 
 
இத்தீர்மானம் ஆனது ஈழத் தமிழர்களாகிய எமக்கு வெந்த புண்ணிலே வேலைப் பாய்ச்சுவது போன்ற மிகப் பெரிய வேதனையுடனான ஏமாற்றத்தை அளித்துள்ளது.
 
இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் வடக்கு, கிழக்கு இராணுவ கட்டமைப்பிலே எதுவித மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை. இராணுவத்தினரின் தலையீடுகள் தமிழர் பிரதேசம் எங்கும் தொடர்ந்த வண்ணமே உள்ளன. 
 
அச்சுறுத்தல், பின்தொடர்வது, கண்காணிப்புக்கள் என இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கும் இச்சூழ்நிலையை சர்வதேசம் பாராமுகப்படுத்துவதாகவே இவ் விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டமையை நாம் நோக்குகிறோம். 
 
தற்போதைய அரசாங்கத்தினால் கூறப்படுகின்ற உள்ளக விசாரணையானது குற்றவாளிகளை காப்பாற்ற முற்படுவதோடு ஈழத் தமிழர்களாகிய எமக்கு அடிப்படை மனித உரிமை பிரச்சினைகளை நீர்த்;துப் போகச் செய்வதற்கான முன்னேற்பாடுகளே அன்றி வேறல்ல. 
 
எனவே எமது நீதிக்கான ஒருமித்த குரலை சர்வதேசத்திற்கு அமைதி வழியில் முரசறைய தமிழ் மக்களின் உரிமைக் குரலாக விளங்கும் யாழ்.பல்கலைக்கழக சமூகத்தின் ஏற்பாட்டில் நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை முற்பகல் 9.30 மணியளவில் பல்கலை முன்றலில் ஆரம்பமாகும் பேராட்டத்தில் அனைவரையும் அணிதிரளுமாறு அதில் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் உரிமையுடன் கேட்டுக்கொண்டுள்ளது. 

ad

ad