அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கு முன்னதாக, ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸுக்கும் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்புக்கும் இடையே முதலாவது நேருக்கு நேர் விவாதம் செவ்வாய்க்கிழமை அன்று நடந்தது.
சுமார் 90 நிமிடங்கள் நீடித்த 'தி ஏபிசி நியூஸ் பிரசிடென்ஷியல் டிபேட்' (The ABC News Presidential Debate) நிகழ்ச்சியில், கமலா ஹாரிஸும், டிரம்பும், ஒருவருக்கொருவர் மற்றவரின் கொள்கைகளை கடுமையாக விமர்சித்தனர்.
இதன்போது ரஷ்யா-யுக்ரேன் போர், இஸ்ரேல்-ஹமாஸ் மோதல், எல்லைப் பிரச்னைகள், சட்டவிரோத குடியேற்றம், பொருளாதாரம், கேபிடல் ஹில் கலவரம், கருக்கலைப்பு போன்ற விவகாரங்களில் இரு வேட்பாளர்களுக்கும் இடையே கடும் விவாதம் நடந்தது.
இந்த விவாதத்தின்போது சீனா, ரஷ்யா, இஸ்ரேல் மற்றும் இரான் போன்ற நாடுகள் பற்றி பல முறை குறிப்பிடப்பட்டன.
”அமெரிக்காவின் எதிர்காலம் குறித்து எனக்கும் டிரம்புக்கும் முற்றிலும் மாறுபட்ட கருத்துகள் உள்ளன. என் கவனம் எதிர்காலத்தின் மீது உள்ளது. டிரம்ப் கடந்த காலத்தில் சிக்கிக்கொண்டுள்ளார்,” என்று விவாதத்தின் முடிவில் கமலா ஹாரிஸ் குறிப்பிட்டார்.
"கமலா ஹாரிஸின் கொள்கைகள் அர்த்தமற்றவை. ஏனென்றால் கடந்த 4 ஆண்டுகளில் அவர் எதையும் சாதிக்கவில்லை", என்று டிரம்ப் கூறினார்.
"நம் நாடு அழிவின் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. உலகமே நம்மைப் பார்த்து சிரிக்கிறது. நவம்பரில் நடைபெறவுள்ள தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றால், மூன்றாம் உலகப்போர் ஏற்பட வாய்ப்புள்ளது”, என்றும் அவர் தெரிவித்தார்.
டிரம்ப் மீது நடந்து வரும் வழக்கின் விசாரணைகள் மற்றும் 2020-ஆம் ஆண்டின் தேர்தலில் அவர் தோல்வியை ஏற்க மறுத்தது ஆகியவை தொடர்பாக கமலா ஹாரிஸ் டிரம்பை தாக்கி பேசினார்.
கமலா ஹாரிஸின் இன அடையாளம் குறித்து டிரம்ப் பேசிய சர்ச்சைக்குரிய கருத்துகள் குறித்து நெறியாளர்கள் டிரம்பிடம் கேட்டபோது அவர் அந்த கேள்வியைத் தவிர்ப்பது போல் இருந்தது.
"கமலா ஹாரிஸ் எப்படிப்பட்டவர் என்பது பற்றி எனக்கு கவலையில்லை" என்று டிரம்ப் கூறினார்.
“அமெரிக்காவை எப்போதும் இனரீதியாக பிரிக்க முயற்சிக்கும் டிரம்ப் அதிபராக விரும்புவது சோகமான விஷயமாக இருக்கிறது", என்று ஹாரிஸ் குறிப்பிட்டார்.
விவாதத்தில் ஆதிக்கம் செலுத்தியது யார்?
பிபிசி-யின் வட அமெரிக்க நிருபர் ஆண்டனி ஸச்சரின் பகுப்பாய்வு:
''90 நிமிட விவாதத்தின் போது கமலா ஹாரிஸ் டொனால்ட் டிரம்பை பலமுறை சிக்கல்களில் ஆழ்த்தினார்.
டிரம்ப்பின் பேரணியில் வரும் கூட்டத்தின் அளவு மற்றும் கேபிடல் ஹில் மீதான தாக்குதல் ஆகிய விஷயங்களை குறிப்பிட்டு கமலா ஹாரிஸ் டிரம்பை தாக்கி பேசினார்.
ஒரு காலத்தில் டிரம்புடன் இருந்த அதிகாரிகள் இப்போது அவரையே கடுமையாக விமர்சிப்பதை பற்றி கமலா ஹாரிஸ் குறிப்பிட்டார்.
அந்த அதிகாரிகளின் விமர்சனங்களுக்கு பதிலளிக்குமாறு கமலா ஹாரிஸ் டிரம்பை கேட்டுக்கொண்டார்.
வாக்காளர்களுடன் நேரடியாக தொடர்புடைய விஷயங்களை, ஒரு வேட்பாளர் எவ்வளவு சிறப்பாக அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டார் என்ற அடிப்படையில் ஒரு விவாதத்தின் வெற்றி தோல்வி நிர்ணயிக்கலாம் என்றால், இந்த விவாதத்தில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றார் என்றே சொல்லலாம்.
விஷயங்களை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்வதிலும் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றார்.
விவாதம் முன்னேற முன்னேற கமலா ஹாரிஸின் கருத்துகளை டிரம்ப் சமாளிக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார்.
கமலா ஹாரிஸ் டிரம்ப்பை தாக்கி பேசினார், அவரை கிண்டலும் செய்தார். அதற்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயத்திற்கு டிரம்ப் ஆளானார்.
கமலா ஹாரிஸ் டிரம்ப்பை பலவீனமானவர் என்று கூறினார். வெளிநாட்டுத் தலைவர்கள் அவரைப் பார்த்து சிரிக்கிறார்கள் என்றும் அவர் சொன்னார்.
சோர்வு மற்றும் சலிப்பு காரணமாக மக்கள் அவரது பேரணிகளில் இருந்து சீக்கிரமே கிளம்பிச் செல்வதாக கமலா ஹாரிஸ் கூறினார்.
விலைவாசி உயர்வு, சட்டவிரோத குடியேற்றம் மற்றும் ஆஃப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க துருப்புகளின் வெளியேற்றம் போன்ற விஷயங்களில் கமலா ஹாரிஸ் பலவீனமாக இருப்பார் என்று பல அமெரிக்கர்கள் நினைத்தனர்.
பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தனது விவாதங்களை டிரம்பால் திறம்பட முன்வைக்க முடியவில்லை.
பைடன் நிர்வாகம் விலைவாசி உயர்வு மற்றும் பொருளாதாரத்தை கையாண்ட விதம் பல அமெரிக்கர்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என்பதை கருத்துக் கணிப்புகள் காட்டுகின்றன.
ஆனால், இந்த விவாதத்தை டிரம்ப் பக்கம் திருப்பிய கமலா ஹாரிஸ், டிரம்ப் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட வரிகளே இதற்கு காரணம் என பதிலளித்தார்
விவாதத்தின் போது கமலா ஹாரிஸின் முகபாவனைகள் அனைவரையும் கவர்வது போல இருந்தது.
விவாதத்தின் பெரும்பகுதி நேரத்தில் டிரம்ப் பதில் கூறும்போது, கமலா ஹாரிஸ் அவரை நேருக்கு நேராகப் பார்த்தபடி இருந்தார். டிரம்ப் கூறிய கருத்துகளுக்கு உடன்படவில்லை என்ற போது கமலா ஹாரிஸ் தலையை அசைத்தார் அல்லது புன்னகைத்தார்.
கமலா ஹாரிஸை 'மார்க்சிஸ்ட்' என்று டிரம்ப் கூறிய போது கமலா ஹாரிஸ் தனக்குப் புரியவில்லை என்பதைக் குறிக்கும் வகையில் தனது கன்னத்தில் கை வைத்த படி இருந்தார்.
ஆனால் பொருளாதாரம் அல்லது கருக்கலைப்பு போன்ற பிரச்னைகள் பற்றிப் பேசும்போது கமலா ஹாரிஸ் வாக்காளர்களிடம் நேரடியாக பேசுவது போல் கேமராவை பார்த்து பேசினார்.
அதே நேரத்தில் டிரம்ப் விவாதம் முழுவதும் கமலா ஹாரிஸை கண்ணோடு கண் பார்ப்பதை தவிர்த்தார். கமலா ஹாரிஸ் கேள்விகள் கேட்டபோது அவரை நோக்கி டிரம்ப் விரலைக் காட்டியபடி பேசுவதை பார்க்க முடிந்தது.
கருக்கலைப்பு குறித்த விவாதத்தின் போது டிரம்ப் கோபத்தில் ஆவேசமாகப் பேசியதையும் பார்க்க முடிந்தது.''
விவாதத்தின் முக்கிய அம்சங்கள்
குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் குடியேறிகளுக்கு எதிராக சில குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதை நிகழ்ச்சியின் நெறியாளரே தவறு என்று கூறினார்.
குடியேறிகள் 'தங்களது செல்லப்பிராணிகளை சாப்பிடுகிறார்கள்' என்று டிரம்ப் அபத்தமான கூற்றுக்களை முன்வைத்தார்.
"குடியேறிகள் செல்லப்பிராணிகளான நாய்களை சாப்பிடுகிறார்கள்," என அவர் கூறினார்
இதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று ஸ்பிரிங்ஃபீல்டின் நகர நிர்வாக மேலாளரே கூறியுள்ளார் என்று விவாதத்தின் நெறியாளர் டேவிட் முயர் குறிப்பிட்டார்.
"எங்கள் நாயை திருடி சாப்பிட்டுவிட்டனர் என்று மக்கள் தொலைக்காட்சியில் கூறுவதை நான் கேட்டேன்" என்றார் டிரம்ப்.
இதற்கு பதில் அளித்த கமலா ஹாரிஸ், ''டிரம்ப் மிகைப்படுத்தி பேசுகிறார்'' என்று கூறினார். இது உண்மையில் நடந்தது என்பதற்கான நம்பகமான தகவல்கள் எதுவும் இல்லை என்று ஸ்பிரிங்ஃபீல்ட் அதிகாரிகள் பிபிசி வெரிஃபையிடம் தெரிவித்தனர்.
ரஷ்யா-யுக்ரேன் போர்
விவாதத்தின் போது, ரஷ்யா - யுக்ரேன் போர் குறித்தும் பேசப்பட்டது.
"அப்போரில் யுக்ரேன் வெற்றி பெற வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா?" என்று டொனால்ட் டிரம்பிடம் வினவப்பட்டது.
"போர் நிறுத்தப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்று டிரம்ப் பதில் அளித்தார்.
யுக்ரேன்-ரஷ்யா போர் அமெரிக்கா மீது ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்துப்பேசிய டிரம்ப், ''ஐரோப்பாவை ஒப்பிடும்போது அமெரிக்கா மீதான தாக்கம் அதிகம்,” என்று குறிப்பிட்டார்.
யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலென்ஸ்கி மற்றும் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் ஆகிய இருவரையும் தனக்கு நன்றாகத் தெரியும் என்று அவர் கூறினார்.
ஜோ பைடனை ’எங்கும் காணப்படாத அமெரிக்க அதிபர்’ என்று டிரம்ப் அழைத்தார்.
இதற்கு பதில் கொடுத்த கமலா ஹாரிஸ், "நீங்கள் பைடனுக்கு எதிராகப் போட்டியிடவில்லை. எனக்கு எதிராகப் போட்டியிடுகிறீர்கள்" என்றார்.
யுக்ரேன் போர் குறித்த கேள்விக்கு பதில் அளித்த கமலா ஹாரிஸ் யுக்ரேன் அதிபருடன் தனக்கு வலுவான நல்லுறவு இருப்பதாக தெரிவித்தார்.
அவர் டிரம்பிடம், "நீங்கள் அமெரிக்க அதிபராக இல்லை என்பதால் நேட்டோ நட்பு நாடுகள் மிகவும் நிம்மதியாக இருக்கின்றனர். இல்லையென்றால் புதின் கீவில் (யுக்ரேன் தலைநகர்) அமர்ந்திருந்து மற்ற ஐரோப்பிய நாடுகளை பார்த்துக்கொண்டிருப்பார்" என்று கூறினார்.
"புதின் ஒரு சர்வாதிகாரி" என்றார் கமலா ஹாரிஸ்.
இது குறித்து கருத்து தெரிவித்த டிரம்ப், ''இதுவரையிலான மிகவும் மோசமான துணை அதிபர் கமலா ஹாரிஸ்'' என்று கூறினார்.
படையெடுப்பிற்கு முன்னர் யுக்ரேனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தி போரைத் தடுக்க அவர் தவறிவிட்டதாக டிரம்ப் குற்றம் சாட்டினார்.
இஸ்ரேல்-ஹமாஸ் மோதல்
விவாதத்தின்போது கமலா ஹாரிஸ் இஸ்ரேல்-காஸா பிரச்னையில் இதற்கு முன் அவர் தெரிவித்த கருத்துகளையே மீண்டும் கூறினார்.
"தன்னை தற்காத்துக்கொள்ள இஸ்ரேலுக்கு உரிமை உள்ளது. ஆனால் இஸ்ரேல் அதை எப்படிச்செய்கிறது என்பதும் முக்கியம்," என்றார் அவர்.
இந்தப் போர் உடனடியாக முடிவுக்கு வர வேண்டும் என்றார் கமலா ஹாரிஸ். போர் நிறுத்தம் மற்றும் ’இரு நாடு’ தீர்வு குறித்தும் அவர் பேசினார்.
"தான் அதிபராக இருந்திருந்தால் இந்த மோதல் ஒருபோதும் தொடங்கியிருக்காது" என்றார் டிரம்ப்.
"கமலா ஹாரிஸ் இஸ்ரேலை வெறுக்கிறார். கமலா ஹாரிஸ் அதிபரானால் இன்னும் இரண்டு ஆண்டுகளில் இஸ்ரேல் என்ற நாடே இருக்காது" என்றும் ”இந்தப் பிரச்னைக்கு நான் விரைவில் தீர்வு காண்பேன்,” என்றும் டிரம்ப் கூறினார்.
”நான் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால், ரஷ்யா- யுக்ரேன் போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வருவேன்,” என்றார் டிரம்ப்.
இஸ்ரேலின் பாதுகாப்பை ஆதரிப்பதாக கமலா ஹாரிஸ் வலுவாக தெரிவித்தார். டிரம்பின் கூற்றை நிராகரித்த அவர், உண்மையை திசை திருப்பவும் பிரிக்கவும் டிரம்ப் விரும்புவதாகத் தெரிவித்தார்.
“டிரம்புக்கு சர்வாதிகாரிகளை பிடிக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். முதல் நாளிலிருந்தே ஒரு சர்வாதிகாரியாக மாற அவர் விரும்புகிறார்,” என்றும் கமலா ஹாரிஸ் குறிப்பிட்டார்.
பொருளாதார கொள்கைகள்
விவாதத்தின் தொடக்கத்திலேயே கமலா ஹாரிஸ் டிரம்பின் பொருளாதாரக் கொள்கைகளை தாக்கி பேசினார்.
"நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட அமெரிக்கா தற்போது நல்ல நிலையில் இருப்பதாக நினைக்கிறீர்களா?" என்று டிரம்ப் கமலா ஹாரிஸிடம் கேட்டார்.
அனைவரும் பொருளாதார சுதந்திரத்தை அடையும் திட்டத்தை உருவாக்க தான் திட்டமிட்டுள்ளதாக கமலா ஹாரிஸ் அதற்கு பதில் அளித்தார்.
"பணக்காரர்கள் மற்றும் தொழிலதிபர்களுக்கு கடந்த முறை போல் வரிச்சலுகை அளிக்க டிரம்ப் திட்டமிட்டுள்ளார்" என்று கமலா ஹாரிஸ் குறிப்பிட்டார்.
"நோபல் பரிசு பெற்ற 16 பொருளாதார வல்லுநர்கள், டிரம்ப் முன்வைக்கும் திட்டத்தை விமர்சித்துள்ளனர். இவை செயல்படுத்தப்பட்டால் அடுத்த ஆண்டு பொருளாதாரத்தில் மந்தநிலை ஏற்படும் என்று அவர்கள் கருதுகின்றனர்,” என்றும் கமலா ஹாரிஸ் கூறினார்.