வியாழன், மார்ச் 31, 2011


தமிழ் அகதிகளை திருப்பி அனுப்புவதை நிறுத்தக் கோரி சுவிஸ் - பேர்ண் பாராளுமன்றம் முன்பாக ஒன்று கூடல்!

சுவிசர்லாந்தில் உள்ள இலங்கை தமிழ் அகதிகளை திருப்பி அனுப்புவதை நிறுத்துமாறு கோரி எதிர்வரும் சனிக்கிழமை (02.04.2011) பிற்பகல் பேர்ண் பாராளுமன்றதிற்கு முன்னால் ஒன்று கூடல் ஒன்று நடைபெற உள்ளது. 

அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள இனங்களுக்கான சர்வதேச அமைப்பு மற்றும் சுவிஸ் தமிழர் அவை ஆகியன சுவிஸ் நாட்டில் உள்ள மனித உரிமை அமைப்புக்கள் தொழிற்சங்கங்கள் 16 அமைப்புக்களுடன் இணைந்து இந்த ஒன்று கூடலை நடத்த உள்ளன.

கடந்த 26.01.2011 அன்று சுவிஸ் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தினால் இலங்கை அகதிகள் விடயத்தில் புதிய சட்டத்திருத்தம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பாதுகாப்பு நிலைமைகள் முன்னேற்றமடைந்துள்ளதாக சுவிஸ் குடிவரவு, குடியகல்வு திணைக்களம் கருகிறது. இவர்களின் இந்த கருத்து தவறானது என இந்த அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன. 

சர்வதேச மன்னிப்புசபை, சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம், சர்வதேச அனர்த்தக்குழு மற்றும் ஏனைய மனித உரிமை அமைப்புக்களின் அறிக்கைகள் சுவிஸ் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் இக் கருத்திற்கு முரண்பாடானதாக உள்ளதாக இந்த அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இச் சட்டத் திருத்தம் எண்ணற்ற தமிழர்களின் வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாக உள்ளன.

எனவேதான் சுவிஸ் கூட்டாட்சித் தலைவர்களிற்கும், பாராளுமன்றத்திற்கும் இத் தீர்மானத்தை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் எனவும் இவ் ஒன்றுகூடலை ஏற்பாடு செய்யும் அமைப்புக்கள் பின்வரும் கோரிக்கைகளை விடுத்துள்ளன.

• இலங்கை அரசாங்கம் அனைத்துலக போர்க் குற்ற விசாரனைக்கு அனுமதியளிக்க வேண்டும்.
• இலங்கை அரசாங்கம் அவசரகால சட்டத்தை முற்றாக நீக்க வேண்டும்.
• அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திற்கு அனைத்து அரசியல் கைதிகளின் முகாம்களிற்கும் செல்வதற்கு அனுமதி வழங்க வேண்டும்.

என்ற கோரிக்கைகள் வரை அகதிகளை திருப்பி அனுப்ப கூடாது என்றும் அகதிகள் தொடர்பான சட்டத்தில் எவ்வித திருத்தங்களும் மேற்கொள்ளக் கூடாதெனவும் வலியுறுத்தி சுவிஸ் பாராளுமன்றம் முன்பாக கவனயீர்ப்பு ஒன்றுகூடலை சுவிஸ் தமிழரவையின் ஏற்பாட்டில் பொது அமைப்புக்கள் நடத்த உள்ளன.

பிரித்தானிய தமிழர் ஒருவருக்கு இன்டர்போல் பிடியாணையை பிறப்பித்துள்ளது
[ வியாழக்கிழமை, 31 மார்ச் 2011, 11:18.59 AM GMT ]
இன்டர்போல் பிரித்தானியாவில் வசிக்கும் தமிழர் ஒருவருக்கு எதிராக பிடியாணையை பிறப்பித்துள்ளது.
2009 ஆம் ஆண்டு கப்பலின் மூலம் கனடாவுக்கு 76 இலங்கையர்களை அனுப்;பிய குற்றச்சாட்டின் பேரிலேயே இந்த பிரித்தானியர் மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவர் ஆட்கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடையவர் என்று இன்டர்போல் குறிப்பிட்டுள்ளது.
40 வயதான சண்முகசுந்தரம் காந்தஸ்கரன் என்ற இவருக்கு எதிராக ஆட்கடத்தல்,சட்டவிரோத குடியேற்றத்துக்காக ஆட்களை அனுப்பியமை, மற்றும் பயங்கரவாதம் என்ற அடிப்படையிலேயே இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.