புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 மார்., 2013


மத்திய அரசில் இருந்து விலகுவதாக திமுக தலைவர் கருணாநிதி அறிவித்த நிலையில், வெளியில் இருந்தும் ஆதரவு கிடையாது என்று தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் கருணாநிதி, செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அளித்த பதிலின் முழு விவரம்,

கருணாநிதி : - தமிழ் ஈழத்தில் சிங்களப் பேரினவாதிகளால் நடத்தப்பட்ட - அதிலும் குறிப்பாக ராஜபக்ஷே அரசின் போர்க் குற்றங்கள் மலிந்த - இரு கருத்துக்கு இடமில்லாத வகையில் இனப் படுகொலையே நடத்தப்பட்டு - உலக அரங்கில் உள்ள நாடுகளின் விவாதத்திற்கு உரியதாக ஆகி விட்ட இந்தச் சூழலில் உலகில் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்று மார் தட்டிக்
கொள்ளும் இந்தியத் திருநாடு, இந்தப் பிரச்சினையின் ஆழத்தை உணராமல், விளைவுகளைக் கருதாமல், ஒதுங்கி நிற்பதோ; அல்லது எதிர் மறை கருத்துரைப்பதோ - இந்தியாவில் காந்தியடிகளும், இலங்கையில் தந்தை செல்வநாயகமும் சுதந்திரப் போராட்டத்திற்காகத் தேர்ந்தெடுத்து நடத்திய அறவழிகளை - அறவே மூடிவிடுவதற்கான; ஜனநாயக விரோதச் செயல் களாகும். இவைகளையெல்லாம் ஐ.நா. மன்றத்திலும், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்திலும் நீதி நெறியோடு ஆய்ந்து பார்த்து - அனைத்து நாட்டு மக்களின் இதயத்தையும் குளிர வைக்கும் முடிவுகளை மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அதற்கு மாறாக இழப்பின் உச்சத்திற்கே தள்ளப்பட்ட இலங்கையும், அந்த இலங்கையின் “தொப்புள் கொடி” உறவு கொண்ட தமிழகம் இடம் பெற்றுள்ள இந்தியாவும், இந்த ஜனநாயக விரோதச் செயல்களுக்கு கதவுகளைத் திறந்து விட்டிருப்பதை இன உணர்வுள்ள எந்த ஒரு தமிழனும் ஏற்றுக் கொள்ள இயலாது.
எனவே “குதிரை குப்புறத் தள்ளியதும் அல்லாமல், குழியும் பறித்த கதை”யாக, அமெரிக்காவின் வரைவுத் தீர்மானத்தை பெருமளவுக்கு நீர்த்துப் போக விட்டதோடு; திராவிட முன்னேற்றக் கழகம் முன்மொழிந்த திருத்தங்கள் எவற்றையும் இந்திய அரசு சிறிதும் பரிசீலனையும் செய்யவில்லை. எனவே, ஈழத் தமிழருக்கு எந்த வகையிலும் பயன்படாத சூழ்நிலைகளே உருவாக்கப் பட்டுள்ள நிலையில், இதற்குப் பிறகும் இந்திய மத்திய ஆட்சியில் திராவிட முன்னேற்றக் கழகம் நீடிப்பது தமிழினத்திற்கே இழைக்கப்படும் பெரும் தீமை என்பதால், திராவிட முன்னேற்றக் கழகம் மத்திய அமைச்சரவையிலிருந்தும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்தும் உடனடியாக விலகிக் கொள்வதென முடிவு செய்து அறிவிக்கப்படுகிறது.
செய்தியாளர் :- இனிமேல் பிரச்சினை அடிப்படையில் மத்திய அரசுக்கு ஆதரவு தரப்படுமா?
கருணாநிதி :- பொதுவாக பிரச்சினை அடிப்படையில் ஆதரிப்பது என்பது எல்லா கட்சிகளுமே கடைப்பிடிக்கின்ற முறை தானே!
செய்தியாளர் :- அமைச்சரவையில் பங்கேற்காமல், வெளியே இருந்து அரசுக்கு ஆதரவு தரப்படுமா?
கருணாநிதி :- எதுவும் கிடையாது.
செய்தியாளர் :- ஆட்சிக்கு மதவாத சக்திகள் வந்து விடக் கூடாது என்பதற்காகத் தான் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக ஏற்கனவே சொல்லியிருந்தீர்கள்.
நீங்கள் ஆதரவைத் திரும்பப் பெறுவதால் மதவாக சக்திகள் ஆட்சிக்கு வரக் கூடுமல்லவா?
கருணாநிதி :- அதற்கு நாங்கள் பொறுப்பாளி அல்ல.
செய்தியாளர் :- நேற்றைய தினம் உங்களை மத்திய அமைச்சர்கள் சந்தித்து விட்டுப் போன பிறகு, மத்திய அரசிலிருந்து உங்களுக்கு ஏதாவது தகவல் வந்ததா?
கருணாநிதி :- பத்திரிகைகளில் வந்த செய்திகள் தான் தகவல்.
செய்தியாளர் :- இது தாமதமாக எடுக்கப்பட்ட முடிவு என்று நினைக்கிறீர்களா? ஏனென்றால் 2009ஆம் ஆண்டிலேயே நீங்கள் ஒன்றும் செய்யவில்லை என்று குற்றச்சாட்டு கூறப்பட்டதே?
கருணாநிதி :- 2009ஆம் ஆண்டில் நாங்கள் என்ன செய்யவில்லை? அப்போது நாங்கள் ஒன்றும் அமைதியாக இல்லை.
செய்தியாளர் :- பொதுவாக அப்படி ஒரு குற்றச்சாட்டு உங்கள் மீது சொல்லப்பட்டதே?
கருணாநிதி :- “பொது” என்பதே ஒரு நல்ல சொல் அல்ல.
செய்தியாளர் :- டெசோவின் அடுத்த கட்ட செயல்பாடுகள் எப்படி இருக்கும்?
கருணாநிதி :- டெசோ சார்பில் ஏற்கனவே நடந்த செயல்பாடுகள் மேலும் தொடரும்.
செய்தியாளர் :- நீங்கள் குறிப்பிட்ட திருத்தங்களைக் கொண்டு வராத பட்சத்தில் இந்திய அரசு ஈழத் தமிழர்களுக்கு துரோகம் செய்து விட்டதாக நினைக்கிறீர்களா?
கருணாநிதி :- தற்போது ஐ.நா. மன்றமே அப்படி துரோகம் இழைத்து விட்டதோ என்று கருதுகிறேன். இந்திய அரசும் கூட.
செய்தியாளர் :- 2009ஆம் ஆண்டில், இந்திய அரசு இலங்கை அரசுக்கு உதவி செய்ததாக ஒரு குற்றச்சாட்டு கூறப்படுகிறதே?
கருணாநிதி :- அது உண்மையாக இருந்தால், எதிர்காலத்தில் விசாரிக்கப் பட வேண்டியவற்றில் அதுவும் ஒன்றாக அமையலாம்.
செய்தியாளர் :- அப்படிப்பட்ட நிலையில் இந்திய அரசும் சேர்ந்து போர்க் குற்றம் செய்ததாக கருதலாமா?
கருணாநிதி :- அது உண்மையா இல்லையா என்பது முதலில் தெரியட்டும்.
செய்தியாளர் :- நாடாளுமன்றத்தில் நீங்கள் கேட்டபடி திருத்தங்களோடு தீர்மானம் கொண்டு வரப்பட்டால், உங்களுடைய தற்போதைய முடிவை மீண்டும் பரிசீலனை செய்வீர்களா?
கருணாநிதி :- அதற்கு நேரம் அதிகமாக இருக்கிறது. இன்று மாலை வரையிலே நேரம் இருக்கிறது, நாளைக்கும் இருக்கிறது, 21ஆம் தேதிக்கு முன்பும் இருக்கிறது. அதற்குள் பாராளுமன்றத்தில் நாங்கள் எண்ணியவாறு இந்தத் தீர்மானம் திருத்தங்களோடு முன்மொழியப்பட்டு, விவாதத்திற்குக் கொண்டுவரட்டும்.
செய்தியாளர் :- உங்களுடைய மத்திய அமைச்சர்கள் எப்போது ராஜினாமா செய்வார்கள்?
கருணாநிதி :- இன்று அல்லது நாளை என்று கூறினார்.

ad

ad