புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 மார்., 2022

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கு சஜித் ஆதரவு!

www.pungudutivuswiss.com


பயங்கரவாத தடுப்புச் சட்டம் முற்று முழுதாக நீக்கப்பட வேண்டும் என்பதுடன்  சர்வதேச நியமங்களுக்கு ஏற்புடைய சட்டமொன்றின் மூலமாக அதனை பிரதியீடு செய்ய வேண்டுமென எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரனிடம் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடுப்புச் சட்டம் முற்று முழுதாக நீக்கப்பட வேண்டும் என்பதுடன் சர்வதேச நியமங்களுக்கு ஏற்புடைய சட்டமொன்றின் மூலமாக அதனை பிரதியீடு செய்ய வேண்டுமென எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரனிடம் தெரிவித்துள்ளா

எதிர்க்கட்சி தலைவர் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு என்ன என்பதை கடிதம் மூலமாகவும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு கையளித்துள்ளார்.

பயங்கரவாத தடை சட்டத்தை முழுமையாக நீக்கக்கோரி பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தலைமையில் இலங்கை தமிழரசு கட்சியின் இளைஞர் அணி நாடு பூராகவும் சென்று கையெழுத்து பெரும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருகின்ற நிலையில், வியாழக்கிழமை காலையில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவையும் சந்தித்த சுமந்திரன் எம்.பி இந்த வேலைத்திட்டத்திற்கான ஒத்துழைப்புகளை பெற்றுக்கொண்டிருந்தார்.

சுமந்திரன் முன்னெடுக்கும் இந்த வேலைத்திட்டத்தை தாம் ஆதரிப்பதாக தெரிவித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, ஐக்கிய மக்கள் சக்தியும் பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரனுக்கு கையளித்துள்ள கடிதத்தில் அவர் கூறியுள்ள விடயங்களானது,

1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தை நீக்குவதற்காக நீங்கள் முன்கொண்டு செல்லும் பிரசாரத்தை நான் வரவேற்கின்றேன். அது குறித்து கூறுவதாயின், ஐக்கிய மக்கள் சக்தியினால் கடந்த 2021 ஜூன் மாதம் வெளியிடப்பட்ட அறிக்கையில், மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தாத வகையில் உறுதியானதும்,பயனுள்ளதுமான தேசிய பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்க உறுதிபூண்டுள்ளது என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது. எமது இந்த நிலைப்பாடானது எந்தவித அச்சமும் இன்றி ஐக்கிய மக்கள் சக்தியினால் பாதுகாக்கப்படும் என்பதை தெரிவித்துள்ளோம்.

பயங்கரவாதத் தடைச் சட்டம் 1979ஆம் ஆண்டு ஆறு மாத காலத்திற்கு தற்காலிக ஏற்பாடுகளாக கொண்டுவரப்பட்டது. ஆனால் இச் சட்டம் இலங்கையின் சட்டப் புத்தகங்களில் 43 வருடங்களாக உள்ளது. இப்போது வரையில் பயங்கரவாதத் தடைச் சட்டம் பாரிய பலவீன தன்மைகளை கொண்டுள்ளது என்பதே எமது நிலைப்பாடாகும்.

இந்தப் பலவீனங்களினால் அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள், சட்டத்தரணிகள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் துன்புறுத்தப்படுவதற்கு வழிவகுக்கப்படுகின்றது. உண்மையில், யுத்தம் முடிவடைந்து பன்னிரெண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், இந்த செயற்பாட்டாளர்களுக்கு எதிராக பயங்கரவாதத் தடைச் சட்டம் செயற்பட்டுள்ளது.

அரசியலமைப்பு மற்றும் பொதுச் சட்டத்தின் மூலம் நீதித்துறைக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பறித்து, அரசாங்கத்தின் நிறைவேற்று அதிகாரத்திற்கு தேவையற்ற அதிகாரத்தை வழங்குவதால், பயங்கரவாதத் தடைச் சட்டம், இலங்கையின் சுதந்திரமான நீதித்துறைக்கு அவமானம் என நம்புகிறோம்.

உதாரணமாக, பொதுச் சட்டத்தின் கீழ், நீதவான் ஒருவரிடம் மாத்திரமே குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை அளிக்க முடியும், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ், ஒரு பொலிஸ் உத்தியோகத்தரிடம் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை அளிக்க முடியும். அதுமட்டுமன்றி, பொதுச் சட்டத்தின் கீழ், சந்தேக நபர் ஒருவரின் பிணை விண்ணப்பத்தை பரிசீலிக்கும் அதிகாரம் வழக்கை விசாரிக்கும் நீதிபதிக்கு உள்ளதுடன் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ், வழக்கை விசாரணை செய்யும் நீதிபதி அந்த அதிகாரத்தை இழக்கிறார்.

அரசியலமைப்பின் வரம்பிற்குள் பொருத்தமான முடிவுகளை எடுக்கும் நீதித்துறை அதிகாரிகளின் தகுதி மற்றும் திறன் மீதான தேவையற்ற மற்றும் முற்றிலும் அரசியலமைப்பிற்கு எதிரான அவ நம்பிக்கையை இந்த ஏற்பாடுகள் பிரதிபலிக்கின்றன.

பாராளுமன்ற ஒழுங்குப்பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள திருத்தங்கள் மூலம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் காணப்படுகின்ற பல குறைபாடுகள் எதனையும் நிவர்த்தி செய்யவில்லை என்பதையும் நாம் காண்கிறோம்.

எனவே, ஐக்கிய மக்கள் சக்தியானது இவ்வாறு முன்மொழியப்பட்ட திருத்தங்களை முற்றாக நிராகரிக்கிறது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை பூச்சுவேலை மூலம் சீர்படுத்த முடியாது என்பதே எமது நிலைப்பாடாகும். இது இல்லாதொழிக்கப்பட்டு இதற்குப் பதிலாக சர்வதேச நியமங்களுக்கு ஏற்ப பொதுமக்கள், தேசிய பாதுகாப்பு மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்தை ஆக்கத்திறன் வாய்ந்ததாக சமப்படுத்தும் ஒரு சட்டத்தால் தாபிக்கப்படல் வேண்டும்.

தற்போதுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதற்கான முதல் படியாக, இலங்கை சட்டத்துறையின் பிரசித்திபெற்ற உறுப்பினர்களின் அமைப்பான இலங்கையின் சட்ட ஆணைக்குழுவின் 2016 ஆம் ஆண்டின் பரிந்துரைகளுக்கு இணங்க அவை நிறுவப்பட வேண்டும் என்று நாங்கள் பரிந்துரைக்கிறோம்.

தேசிய பாதுகாப்பை பேணல் சட்ட மூலத்தின் முன்மொழிவுகள் சுருக்கமானவை மற்றும் பயனுள்ளவை என்பதுடன் சர்வதேச சிறந்த நடைமுறைகள் மற்றும் நமது தேசிய பாதுகாப்பு அத்துடன் மனித உரிமைகளின் அபிலாஷைகளுக்கு ஏற்புடையதாகவும் உள்ளன என்பதை அவர் குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ad

ad