புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 மார்., 2013


ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இந்தியா அறிக்கை தாக்கல்!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், இலங்கையின் உலகளாவிய காலமுறை ஆய்வறிக்கை மீது இந்தியா சார்பில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 
அதில், இலங்கையின் போர் குற்றங்களை விசாரிக்குமாறு கோரிக்கை எழுப்பப்படவில்லை. ஐ.நா. மனித உரிமைகள் பேரவை மாநாடு கடந்த மாதம் 22ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில், இலங்கை செயல்பாட்டின் மீதான உலகளாவிய காலமுறை ஆய்வறிக்கையை அந்நாட்டின் பிரதிநிதி மகிந்த சமரசிங்க நேற்று முன்தினம் தாக்கல் செய்து பேசினார்.
இலங்கையின் இந்த அறிக்கைக்கு சீனா, பாகிஸ்தான், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகள் ஆதரவு தெரிவித்து பேசினர்.
ஆனால், அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பொது மன்னிப்பு சபை பிரதிநிதிகள் எதிர்ப்பு தெரிவித்து பேசினர்.
இலங்கையின் இந்த காலமுறை ஆய்வறிக்கை மீது இந்தியா சார்பில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதில் கூறப்பட்டதாவது:
2வது சுற்று காலமுறை ஆய்வறிக்கை தாக்கல் செய்ததற்காக இலங்கைக்கு நன்றி.
தமிழர் மறுவாழ்வு பணிக்கான குழு (எல்எல்ஆர்சி)  பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டும் என்ற எங்கள் கோரிக்கையை இலங்கை ஏற்றதை பாராட்டுகிறோம்.
அத்துடன், மறுவாழ்வு பணிகள், வடக்கு மாகாணத்தில் படைகளை குறைத்தல் போன்றவற்றையும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சிறப்பாக செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.
இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் மற்றும் உயிரிழப்புகள் குறித்து சுதந்திரமாகவும், நியாயமாகவும் விசாரணை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.
தமிழர்கள் மீள்குடியேற்றம் மற்றும் மறுவாழ்வு பணிகள் வேகமாக நடக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
வரும் செப்டம்பர் மாதத்திற்குள் வடக்கு மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும் என்ற இலங்கையின் உறுதிமொழியை வரவேற்கிறோம்.
இலங்கை அரசியல் சட்டத்தில் உள்ளபடி, அனைத்து மக்களும் வாக்களிக்கும் ஜனநாயக கடமையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.
மறுவாழ்வு பணிகள் தொடர்பான பரிந்துரைகளை அமுல்படுத்துவதில் இலங்கை வெற்றி பெற வாழ்த்துகிறோம்.
அதேபோல், தேசிய புனரமைப்பு பணியில் தீவிரமாக ஈடுபடவும், அரசியல் தீர்வு காணும் பணியை விரைவுபடுத்தவும் இலங்கை அரசை வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
போர் குற்றங்கள் குறித்து விசாரிக்க வேண்டுமென எந்த கோரிக்கையும் அறிக்கையில் இடம்பெறவில்லை. இந்நிலையில், வரும் 20, 21 தேதிகளில் அமெரிக்காவின் தீர்மானம் தாக்கல் செய்யப்படும் என்றும், அதை இந்தியா ஆதரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

ad

ad