புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 அக்., 2013


         ""ஹலோ தலைவரே... ஜெ. மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக ஹைகோர்ட் ஏரியாவே கடந்த வாரக் கடைசியில் பரபரப்பா இருந்திருக்குது.''

nakeeran
""வழக்கு நடப்பது செஷன்ஸ் கோர்ட் வளாகத்தில் உள்ள ஸ்பெஷல் கோர்ட்டில்தானே, ஹைகோர்ட் ஏரியா ஏன் பரபரப்பாகணும்?''

""சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி சதாசிவத்துக்கு ஜெ. சார்பில் அவரோட வக்கீல்கள் அனுப்பிய ஒரு புகார்மனுதான் இந்த பரபரப்புக்கு காரணம். நான் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்னை வாய்தாதோறும் ஆஜராகச் சொல்லி ஒரு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். என் பணிச்சுமைகளை உணர்ந்து, நான் ஒவ்வொரு வாய்தாவுக்கும் ஆஜராகத் தேவையில்லை என சுப்ரீம்கோர்ட்டே உத்தரவிட்டுள்ளது. அதை மதிக்காமல் சிறப்பு நீதிமன்ற புதிய நீதிபதி முடிகவுடர் அக்டோபர் 30-ந் தேதி ஆஜராகவேண்டும் என்றும் இல்லையென்றால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என்றும் உத்தரவிட்டிருக்கிறார். இது சட்டப்படியும் நியாயப்படியும் தவறு' இதுதான் ஜெ. தரப்பிலான புகார் மனு. இதைப் பற்றி கர்நாடக ஹைகோர்ட் தலைமை நீதிபதி வகேலாவிடம் போன சனிக்கிழமையன்னைக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் விளக்கம் கேட்க, இது தொடர்பான அறிக்கைகளை அனுப்பும்படி ஹைகோர்ட் பதிவாளர், செஷன்ஸ் கோர்ட் பதிவாளர் குமுதினியிடம்  கேட்க அதைத் தொடர்ந்துதான் பரபரப்பு அதிகமானது.''

""என்ன பரபரப்பு?''

""ஸ்பெஷல்  கோர்ட் நீதிபதி முடிகவுடர் என்ன உத்தரவிட்டார் என 3ந் தேதி நடந்த கோர்ட் நடவடிக்கைகளின் அடிப்படையில் குமுதினி ஒரு ரெக்கார்டை ஹைகோர்ட் பதிவாளருக்கு அனுப்பினார். அதில் முடிகவுடர் பிறப்பித்த உத்தரவு தெளிவாக விளக்கப்பட்டிருந்தது. ஒரு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் ஒவ்வொரு வாய்தாவின்போதும் நேரில் ஆஜராக வேண்டும். அப்படி ஆஜரானால்தான் அவர் மீதான வழக்கில் என்ன நடக்கிறது என அவரால் புரிந்து கொள்ளமுடியும். குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 4 குற்றவாளிகளும் நேரில் ஆஜராவதற்கு விலக்கு அளித்து வேறெந்த உத்தரவும் இதுவரை வழங்கப்படவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர்களின் வழக்கறிஞர்கள் எப்படி வழக்கை நடத்துகிறார்கள் என்பதை நேரில் பார்ப்பது குற்றம்சாட்டப்பட்டோரின் நலன்களுக்கு நல்லது. எனவே அக்டோபர் 30-ந் தேதி குற்றம் சாட் டப்பட்ட 4 பேரும் நேரில் ஆஜராகவேண்டும்னு தெளிவா இருந்தது. செஷன்ஸ் கோர்ட் பதிவாளர் குமுதினி அனுப்பிய ரிப்போர்ட்டை கர்நாடக ஹைகோர்ட் தலைமை நீதிபதிக்கு ஹைகோர்ட் பதிவாளர் அனுப்பி வைக்க, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியிடம் ஜெ.வின் வக்கீல்கள் அனுப்பிய மனுவுக்கும் ஸ்பெஷல் கோர்ட் நீதிபதி முடிகவுடர் தன்னோட உத்தரவில் தெரிவித்திருப்பதற்கும் முரண்பாடு இருப்பதை ஹைகோர்ட் தலைமை நீதிபதி வகேலா  பார்த்துட்டு, அது உண்மையான்னு தெரிந்து கொள்ள ரெகார்டுகளைத் தேடச் சொல்லிட் டார்.''

""அதாவது, சொத்துக்குவிப்பு கேஸில் நேரில்  ஆஜராவதிலிருந்து ஜெ.வுக்கு விலக்கு அளித்து சுப்ரீம்  கோர்ட் உத்தரவிட்டிருக்கிறதாங்கிறது சம் பந்தமான ரெகார்டுகளை கர்நாடக ஹைகோர்ட் நீதிபதி கேட்டிருக்காரு.. அப்படித்தானே?''

""ஆமாங்க தலைவரே.. … இது சம்பந்தமா போன சனிக்கிழமை நைட் வரைக்கும் ஸ்பெஷல் கோர்ட் பதிவாளர் குமுதினி ஜெ. வழக்கு சம்பந்தப்பட்ட எல்லா ரெகார்டுகளையும் புரட்டி பார்த்தும் அப்படியொரு உத்தரவு சம்பந்தமான ரெகார்டு எதையும் கண்டுபிடிக்க முடியலையாம். இதையடுத்து, ஜெ.வின் வக்கீல்கள்கிட்டே கோர்ட் ஊழியர்கள் பேசி, அந்த உத்தரவு பற்றி விவரம் கேட்டிருக்காங்க. அதற்கு ஜெ. வக்கீல்கள், இந்த சொத்துக் குவிப்பு கேஸ் பெங்களூருவுக்கு மாற்றலாகி வந்தபிறகு இதுவரை விசாரித்த நீதிபதிகள் பச்சாபுரே தொடங்கி பாலகிருஷ்ணாவரை எல்லோரிடமும் ஜெ. நேரில் ஆஜராக சுப்ரீம்  கோர்ட் விலக்கு அளித்து உத்தரவிட்டுள்ளதுன்னு சொல்லித்தான் வாய்தா வாங்கியிருக்கோம். உத்தரவு நகல் எதுவும் இப்ப எங்ககிட்ட இல்லைன்னு சொல்லியிருக்காங்க. இந்த விவரம் அறிந்த குமுதினி, ஹைகோர்ட்டுக்கு முழுமையா ஒரு ரிப்போர்ட் கொடுத்திருக்கிறார். இதனடிப்படையில், தமிழக முதல்வர் ஜெ தரப்பின் புகாரில் உண்மையில்லை. நீதிபதி முடிகவுடர் சட்டப்படி   செயல்பட்டுள்ளார்னு சுப்ரீம் கோர்ட்டுக்கு கர்நாடக ஹைகோர்ட் ஒரு ரிப்போர்ட் அனுப்பியுள்ளது.'' 

""நீதிபதி முடிகவுடர் சட்டப்படியான கெடுபிடியுடன் செயல்படுவதில் ஜெ தரப்பு வக்கீல்கள் ஷாக் ஆகியிருப்பாங்களே.''…

""தற்காலிக நீதிபதியான முடிகவுடர் விரைவில் மாற்றப்பட்டு புது நீதிபதி நியமிக்கப்படுவாருங்கிற எதிர்பார்ப்பு அவங்களுக்கு இருக்குது. கர்நாடக அரசும் அம்மாநில ஹைகோர்ட்டும் சேர்ந்து ஆலோசித்து நியமிக்க வேண்டிய புது நீதிபதி களுக்கான பேனலில் 4 பேரின் பெயர்கள் இடம்பெற்றிருக்குது. அதில் முடிகவுடர் பேரு இல்லையாம். ஓய்வுபெற்ற நீதிபதி பாலகிருஷ்ணா பெயரும் இல்லை. அரசு வக்கீல் பவானிசிங் நீடிப்பார். புது நீதிபதி யாருங்கிறதைப் பொறுத்து இந்த கேஸில் அடுத்தகட்ட பரபரப்பு அதிக மாகும்.''

""எப்படியாவது இந்த வழக்கில் விரைவாகத் தீர்ப்பு வரணும், அது சாதகமா வரணும்ங் கிறதுதானே ஜெ. தரப்பின் எதிர்பார்ப்பு!''

""தலைவரே.. அதைப் பற்றி நாம ஏற்கனவே பேசியிருக்கோம். பிரதமர் வேட்பாளராக தன்னை முன்னிறுத்த இந்த வழக்கு ஒரு தடையா இருக்கக் கூடாதுங்கிறதுதான் ஜெ.வின் கணக்கு. வரும் 30-ந் தேதி  டெல்லியில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க அல்லாத தலைவர்களின் மாநாட்டை சி.பி.எம். கட்சி முன் னெடுக்குது. அதில் ஜெ. கலந்துக்கணும்னு பிரகாஷ் காரத் அழைச்சிருக்காரு. ஜெ.வோ தன்னை பிரதமர் வேட்பாளரா அறிவிக்கணும்ங்கிறதை வலியுறுத்தி யிருக்கார். இப்ப அதை அறிவிப்பதில் சிரமம் இருக் குதுன்னு இடதுசாரிகள் தரப்பில் சொல்லியிருக்காங்க. ஜெ.வோ பிரதமர் வேட்பாளரா தன்னை அறிவிச்சா தான் ஜனவரி முதல் ஆல் இண்டியா டூர் அடித்து பிரச்சாரம் செய்ய முடியும்னு நினைக்கிறாராம். இடதுசாரிகள் சாதகமான பதிலைச் சொல்லாததால் ஜெ.வும் அந்த மாநாட்டில் கலந்துக்கிறது சம்பந்தமா உறுதியான பதில் எதுவும் சொல்லலையாம். அதே நேரத்தில், மோடி தரப்பிலிருந்து அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணிக்கு தொடர்ந்து முயற்சிகள் மேற் கொள்ளப்படுது.''

""ஓ..'' …

""தமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணியில் ம.தி.மு.க.வும் பாரிவேந்தரின் ஐ.ஜே.கே.வும் இருப்பது உறுதியாயிடிச்சி. தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், பா.ஜ.க.வுடனான கூட்டணிக்கு பிடி கொடுக்கலை. அதற்கான சான்ஸ் இல் லைன்னு தன்னோட கட்சிக்காரங்க கிட்டே சொல்லிக்கிட்டிருக்காராம். அதனால தமிழகத்தில் அ.தி.மு.க.வுட னான கூட்டணிதான் சரியா இருக்கும்னு மோடி விரும்புறார். அவரிடமும் ஜெ.விடமும் நட்புறவுடன் இருக்கும் தமிழகத்தைச்  சேர்ந்த அந்த பத்திரிகை ஆசிரியர், அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வும் கூட்டணி சேர்ந்தால் மத்தியிலும் மாநிலத்திலும் எந்தளவுக்கு சாதகமாக இருக்கும்னு ஒரு ரிப்போர்ட்டை அனுப்பி அப்பாயிண்ட்மெண்ட் கேட்டும், கார்டனிலிருந்து  எந்தப் பதிலும் கிடைக்கலை. அதே நேரத்தில், ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்கள் கார்டனில் அப்பாயிண்ட் மெண்ட் வாங்கி சந்திச்சிருக்காங்க.''

""பத்திரிகை ஆசிரியருக்கே கிடைக்காத அப்பாயிண்ட்மெண்ட் எப்படி ஆர்.எஸ்.எஸ். பிர முகர்களுக்கு கிடைச்சுதாம்?''

""அ.தி.மு.கவின் ராஜ்யசபா எம்.பி. ஒருவர் மூல மாகத்தான் கிடைச்சிருக்குது. அந்த சந்திப்பின்போது  ஜெ., நான் வெறும் கூட்டணி கட்சியா இருக்க முடி யாது. எனக்கான அதிகாரம் இருக்கணும்னு சொல்லி யிருக்காரு. துணை பிரதமர் பதவியை அவர் எதிர் பார்க்கிறார்ங்கிறது ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்களின் கணிப்பு. அவங்க, எப்படியும் பா.ஜ.க. 200 சீட்டுக்கு மேலே ஜெயிச்சிடும். அதனால சொந்த கட்சிக்குத் தான் துணை பிரதமர் பதவியைக் கொடுக்க வேண்டியிருக்கும். மற்றபடி உங்களுக்கான முக்கியத்துவத்தில் எந்தக் குறைபாடும் இருக்காது. அமைச்சரவையில் நீங்க கேட்கிற முக்கிய இலாகாக் கள் உங்க கட்சிக்குக் கிடைக்கும்னு சொல்லியிருக்காங்க. கூட்டணி தொடர்பா ஜெ. எந்த பிடிமானமும் கொடுக்கலையாம்.''

""தமிழகத்தில் பெரிய கூட்டணிகள் எதுவும் இறுதி வடிவம் பெறாத நிலையில், சாதி அமைப்புகளை இணைத்து செயல்படும் முயற்சியில் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் இறங்கியிருக்காரே?''



""அனைத்து சமுதாய  பேரியக்கம்ங்கிற பேரில் தலித் அல்லாத சாதிகளின் அமைப் பினர் ராமதாஸ் தலைமையில் கூடி ஆலோ சிச்சிருக்காங்க. கொங்குநாடு முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் நாகராஜ், யாதவ மகாசபை தலைவர் தேவநாதன் உள்பட 15-க்கும் மேற்பட்ட சாதிய அமைப்புகளின் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துக்கிட்டாங்க. இதில் பேசிய எல்லோருமே, தலித் மக்களை பாதுகாக்கும் வன்கொடுமை  தடுப்புச் சட்டம் தவறா பயன்படுத்துதுன்னும் அதில்  திருத்தம் கொண்டு வர ஜனாதிபதியையும் பிரதமரையும் சந்தித்து முறையிடணும்னும் வலியுறுத்தினாங்க. அதோடு, இந்த பேரியக்கத்தை அரசியல் இயக்கமா மாற்றினாத்தான் ஒவ்வொரு சமூகத்தையும் பாதுகாக்க முடியும்னு சொல்லியிருக்காங்க.'' 

""அப்படின்னா, அனைத்து சமுதாய பேரியக்கம் நேரடி அரசியல் களத்தில் குதிக்கப்போகுதா?''

""முதலில்  பேசிய யாதவ  மகாசபையின் தேவநாதன் தான் இதை அதிகமா வலியுறுத்திப் பேசியிருக்காரு. அரசியல்  இயக்கமா மாற்றி அதிகாரத்திற்கு வராமல் எதை யும் சாதிக்க முடியாதுன்னு தேவநாதன் சொல்ல, மற்றவங்களும் அதையே வலி யுறுத்தியிருக்காங்க. ஆனா நிறைவாப்  பேசிய ராமதாஸ், பேரியக்கத்தை அரசியல்மயமாக்கணும்ங்கிற கருத்தி லிருந்து தான் மாறுபடுவதாகவும், எந்த ஒரு இயக்கத்தையும் பா.ம.க. தன்னோட அரசியல் லாபத்துக்காக பயன்படுத்திக் கொள்றதா தன் மேலே குற்றச்சாட்டு வைக்கப்படுவதாகவும், அதனால் இதனை அரசியல் இயக்கமாக மாற்ற தனக்கு விருப்பமில்லைன்னு சொல்லி யிருக்காரு. கலந்துகொண்ட சாதி அமைப்புகளிலேயே அரசியலில் நேரடியா ஈடுபடுபவர்களும் இருக்காங்க. ஒவ்வொருத்தருக்கும் ஒரு கொள்கை இருக் குது. அதையும்தாண்டி வன்கொடுமை தடுப்புச்சட்டத்துக்கு எதிரா எல்லோரும் ஒன்று கூடியிருந்தாங்க. அதையே முன் னெடுத்துச் செல்லணும்னு ராமதாஸ் சொல்லியிருக்காரு. இருந்தாலும், எம்.பி. தேர்தலில் பெரிய கட்சிகளோடு கூட்டணி சேராமல், பா..ம.க தனித்து நிற்கணும்ங்கிற ஐடியாவில் வேட்பாளர் தேர்வெல்லாம் நடந் திருக்கிற சூழலில், சாதி அமைப்புகளோட கூட்டணியைத் தவிர்க்க முடியாதுன்னு பா.ம.க நிர்வாகிகள் சொல்றாங்க.''

""தேர்தல் நெருங்கி வருவதால் எந்த ஒரு  நிகழ்ச்சியும் சந்திப்பும் அரசியல்  கோணத்தில் தான் பார்க்கப்படும். சிவகங்கையில் நடந்த நறுமணப் பொருட்களுக்கான தொழிற்பூங்கா திறப்பு விழாவில் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தோடு, மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் ஆனந்த் சர்மா கலந்துகொண்டது தமிழக வேளாண் துறை அமைச்சர் தாமோதரனும் அ.தி.மு.க மா.செ.க்கள் உள்ளிட்ட நிர்வாகிகளும் கலந்துகொண்டதுகூட அப்படித்தானே பார்க்கப்படுது?''


""தலைவரே..  ஸ்பைஸி பார்க்ன்னு சொல்லப்படுற பணப்பயிர்களான ஏலம், கிராம்பு, பட்டை உள்ளிட்ட தொழில்களுக்கான நறுமணப் பூங்காவைத் திறந்து வைப்பேன்னு அதே  மாவட்டத்தைச் சேர்ந்த மற்றொரு மத்திய அமைச்சரான சுதர்சன நாச்சியப்பன் சமீபத்தில் சொல்லியிருந்தாரு. ப.சியின் முயற்சியால்தான் கடந்த தி.மு.க ஆட்சியில் 70 ஏக்கர் பரப்பில் நறுமணப் பொருட்களுக்கான இந்தத்  தொழிற் பூங்கா உருவாக்கத் திட்டமிடப்பட்டது. அதைத் திறந்து வைக்கப் போறதா சுதர்சன நாச்சியப்பன் சொன்னதும் ப.சி. உஷாராகி, இணையமைச்சர் சுதர்சன நாச்சியப்பனின் துறைக்கு கேபினட் பொறுப்பு வகிக்கிற ஆனந்த் சர்மாவையே அழைச்சிட்டு வந்து திறந்துவச்சிட்டாரு. சுதர்சன நாச்சியப்பனோ அதே நாளில் கோவையில் வேறொரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து அதில் கலந்துக்கிட்டாரு.''

""ஆனா கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவரான மாநில வேளாண்துறை அமைச்சர்  தாமோதரன் உள்ளிட்ட அ.தி.மு.க.வினர் ப.சி.யுடன் ஒரே மேடை யில் கலந்துக்கிட்டு அரசியல் அரங்கில் ஆச்சரியத்தை யும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்காங்களே?''

""ஜெ.வின் உத்தரவுப்படிதான் அமைச்சர் தாமோதரன் இந்த விழாவுக்கு வந்தார். அவரோடு நீங்களும் போங்கன்னு மா.செக்களுக்கும் கட்சித் தலைமையிலிருந்து உத்தரவு வந்திருக்குது. அவங்களும் கலந்துக்கிட்டாங்க. அவங்களை வரவேற்பதிலிருந்து வழியனுப்புறவரை ப.சி.யும் அக்கறையா இருந்திருக்காரு. மேடையில் மாநில  அமைச்சர் வைத்த  கோரிக்கையை ப.சி.யும் ஆமோதிச்சி, மத்திய அமைச்சர் ஆனந்த்சர்மா இதையெல்லாம் நிறைவேற்றணும்னு வலியுறுத்தி னாரு. இதெல்லாம் ஆச்சரியத்தையும் அதிர்ச்சி யையும் ஏற்படுத்தத்தானே செய்யும்!'' 

""அரசியலில் ஜெ.வின் கடுமையான எதிர்ப் புக்குரியவர் ப.சி. அப்படியிருக்கையில்  அவரோட விழாவில் அ.திமு.க தரப்பு பங்கேற்றிருப்பதற்கு பலமான பின்னணி ஏதாவது இருக்கணுமே?''

""நான் அது சம்பந்தமா அ.தி.மு.க வட்டாரத்தில் விசாரிச்சிட்டு லைனில் வந்திருக்கேன்... பெங்களூரு நீதிமன்றத்தில் நடக்கும் சொத்துக் குவிப்பு வழக்கி லிருந்து எப்படியாவது விடுபடணும்னு நினைக்கும் ஜெ.வுக்கு மத்தியில் ஆட்சியிலிருக்கும் காங்கிரசின் தயவு தேவைப்படுதுன்னும், மார்க்ரெட் ஆல்வா மூலம் தொடங்கிய முயற்சி இப்ப ப.சி.யை கூல் செய்வதன் மூலம் தொடருதுன்னும் சொல்றாங்க. ப.சி. மீது தி.மு.க.வுக்கு வருத்தமும் கோபமும் இருப்பதால், அவரை தனக்கு சாதகமா பயன்படுத்திக்கொள்ள லாம்ங்கிறதும் ஜெ.வின் கணக்காம்.''

படங்கள் : ஸ்டாலின்



 லாஸ்ட் புல்லட்!

புகழ்பெற்ற ராமேஸ்வரம் கோவிலில் கடந்த திங்களன்று காலை 7.50 மணிக்கு ராகுகால நேரத்தில் பன்றி ஒன்று கிழக்கு வாசல் வழியாக நுழைந்து அம்மன் சன்னதிக்கு சென்றுவிட்டது. அங்கிருந்த நவராத்திரி கொலுபொம்மைகளை அது  துவம்சம் செய்ய, கோயில் ஊழியர்கள் அதை அங்கேயே அடித்து துவைத்துக்கொன்றுவிட்டனர். பரிகார பூஜைகள் நடத்தப்பட்ட பிறகே பக்தர்களை சாமி தரிசனத்திற்கு அனுமதித்தனர். கொழுத்த ராகுகாலத்தில் கோயிலுக்குள் பன்றி நுழைந்தது ஆட்சிக்கு நல்லதல்ல என்ற தகவல் மேலிடத்திற்குச் சென்றுள்ளதாம்.

இலங்கையில்  நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக்கூடாது என்பது உள்ளிட்ட 9 கோரிக்கைகளை வலியுறுத்தி வள்ளுவர் கோட்டம் அருகே தோழர் தியாகு தொடங்கிய உண்ணாவிரதப் போராட்டம் கடந்த திங்களன்று 7ஆம் நாளை எட்ட, அவரை பரிசோதித்த அரசு டாக்டர்கள், உடனடியாக மருத்துவ சிகிச்சை எடுக்கவேண்டும் என அறிவுறுத்த, தியாகு மறுத்தார். உடனிருந்த போலீசார், சிகிச்சை எடுக்காவிட்டால் கைது செய்வோம் என நெருக்கடி தர, மருத்துவமனைக்கு செல்ல உடன்பட்டார் தியாகு. இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தியாகு அங்கும் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்தார். 

ad

ad