புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 பிப்., 2014

ஈழத்தின் விடியலுக்காக ஒன்றுகூடிக்குரல் எழுப்ப இருக்கும் நிகழ்வில் கட்சிக் கொடிகளைத் தவிர்க்க வேண்டுகிறேன் : வைகோ
இலங்கையில் நடந்த தமிழ் இனப்படுகொலைக்கு நீதிகேட்டு 26–ந்தேதி ஒன்று கூடி குரல் எழுப்புவோம் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அழைப்பு விடுத்துள்ளார்.இதுகுறித்து, ம.தி.மு.க. பொதுச்செயலாளர்
வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’கடந்த 60 ஆண்டு களில் இலங்கைத்தீவில், ஈழத்தமிழ் மக்களுக்கு, சிங்களப் பேரினவாத அரசு நடத்திய தமிழ் இனப்படு கொலையால் நேர்ந்த அழிவு, மனித மனங்களைத் துடிதுடிக்க வைக்கும் கொடுந்துயரம் ஆகும்.

உலகெங்கும், தமிழகத்திலும் நீதிக்காகத் தமிழர்கள், குறிப்பாக மாணவர்கள், இளந்தலைமுறையினர் நடத்திய அறவழிக் கிளர்ச்சிகளால், மனித குலத்தின் மனசாட்சி மெல்ல மெல்ல விழித்துக்கொண்டது. சிங்கள அரசு நடத்திய இப்படுகொலைக்கு, அமெரிக்கா, இங்கிலாந்து அரசுகளும் ஆயுத உதவி செய்து உள்ளன என்று கூறியதோடு, இந்திய அரசு இலங்கை அரசுக்குச் செய்த அனைத்து உதவிகள் குறித்தும் ஆய்வு நடத்துவதாகவும் அறிவித்துள்ளது.
எனவே, நடந்தது தமிழ் இனப்படுகொலை; இனி நடக்க வேண்டியது கொலைகாரக் கொடியோரைக் கூண்டில் நிறுத்தும் விசாரணை என்பதை, உலகெங்கும் உள்ள தன்மானத் தமிழர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் உரத்த குரலில் சொல்வோம்.சுதந்திரத் தமிழ் ஈழத்தை மீட்க வேண்டிய கடமை, உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு உண்டு. ஐரோப்பா வாழ் தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டு, மார்ச் 10–ந்தேதி, ஜெனீவா முருகதாசன் திடலில் ஒன்றுகூடிக்குரல் எழுப்ப, முத்துக்குமார் நினைவு நாளான ஜனவரி 29–ல் நீதிக்கான ஒரு நடைபயணத்தையும் தொடங்கி உள்ளனர்.
தரணி வாழ் தமிழர்கள் அனைவரும், சாதி மதம், கட்சி, தேச எல்லைகளைக் கடந்து, ஒன்றாகச் சங்கமித்து, ஈழத்தமிழர் விடியலுக்கும் நீதிக்கும் ஓங்கிக்குரல் கொடுப்போம்.


தமிழர்களின் அறப்போர்க் குரல் ஒலிக்க வேண்டிய தினமாக பிப்ரவரி 26–ந் தேதியை அறிவிக்க லண்டன் மாநகரிலும், புலம்பெயர் நாடுகளிலும் வாழும் தமிழர்கள் தீர்மானித்து உள்ளனர்.  எனவே, பிப்ரவரி 26–ந்தேதி, உலகம் எங்கிலும் தமிழர்களின் நீதிக்கான முழக்கம் வீறுகொண்டு எழட்டும். தாய்த் தமிழகத்திலும், நீதி கேட்கும் முழக்கம் விண்ணை எட்டட்டும். தலைநகர் சென்னையிலும், மாவட்ட, வட்டத் தலைநகரங்களிலும், நீதி கேட்கும் குரல் எட்டுத் திசையிலும் ஒலிக்கட்டும். ஈழத்தின் விடியலுக்காக, நீதி கிடைப்பதற்காக, நாம் ஒன்றுகூடிக்குரல் எழுப்ப இருக்கும் நிகழ்வில், கட்சிக் கொடிகளைத் தவிர்க்க வேண்டுகிறேன்’’ என்று  கூறியுள்ளார்.

ad

ad