27 பெண்ணை ஏமாற்றிய விவகாரம் : திண்டுக்கல் வாலிபரின் லேப்டாப் சோதனை
 மதுரை, ஆனையூர் முடக்காத்தான் சாலையை சேர்ந்தவர்  ரெஜினா (24). இவர் திண்டுக்கல் எஸ்பியிடம் அளித்த புகாரில்,  திண்டுக்கல் மாசிலாமணிபுரம் ஸ்ரீநகரைச் சேர்ந்த 
பொன்சிபி (19)  தன்னை காதலிப்பதாகக் கூறி குளிர்பானத்தில் மயக்க மருந்து  கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததுடன், பல பெண்களை ஆபாச  படம் பிடித்து மிரட்டுகிறார் என தெரிவித்திருந்தார்.இதற்கு அவரது தாயார், நண்பரும் உதவினர் என புகாரில் கூறியிருந்தார். இதன் பேரில் பொன்சிபி, அவரது தாயார் ஹேமமாலினி மற்றும் ராஜா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, நேற்றுமுன்தினம் பொன்சிபியை கைது செய்தனர்.
பொன்சிபி தனது 18 வயதிலேயே ரெஜினாவை திருமணம் செய்து  ஏமாற்றிய வழக்கில் கைதாகியுள்ளதால், தற்போது அவருக்கு 19  வயதானாலும், நீதிபதி உத்தரவின் பேரில் மேலூர் சிறுவர்  சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டார். பல பெண்களை ஆபாச படம்  பிடித்து மிரட்டியது குறித்து போலீசார் அவரிடம் தீவிர விசாரணை  நடத்தி வருகின்றனர். பொன்சிபியின் இமெயில் முகவரி, செல்போன்  மெமரி கார்டு, லேப்டாப், ஐ பேடு போன்ற அவர் பயன்படுத்தும்  பல்வேறு சாதனங்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். 
இமெயிலில் ஆபாச படங்களை யாருக்கும் அனுப்பினாரா என்றும்,  வீட்டில் இதுபோன்ற படங்களை வைத்துள்ளாரா என்றும் விசாரணை  நடந்து வருகிறது. மகாலட்சுமி, சித்ரா ஆகிய 2 பெண்களை  பெங்களூரில் உள்ள ஒரு விடுதியில் விற்பனை செய்ததாக கிடைத்த  தகவல் குறித்தும் விசாரணை நடக்கிறது. விற்கப்பட்டதாக கூறப்படும்  பெண்கள் பெங்களூரிலிருந்து தப்பி திண்டுக்கல்லுக்கு வந்துவிட்டதாக  கிடைத்த தகவ லையடுத்து, அவர்களை விசாரணைக்காக போலீ சார்  தேடி வருகின்றனர்.
பொன்சிபி பயன்படுத்தி வந்த  செல்போன் எண்கள் மூலம் யார்,  யாருடன் தொடர்பு வைத்திருந்துள்ளார் எனவும் தனிப்படையினர்  விசாரணை நடத்தி வருகின்றனர். அவசியம் ஏற்படும் நிலையில் பொன்சிபியை காவலில் எடுத்து  விசாரிக்கவும் போலீசார் தயாராகி வருகின்றனர். பொன்சிபியின் தாயார்  ஹேமமாலினி மற்றும் ராஜா ஆகியோரை தேடி வருகின்றனர்.