புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஜூன், 2014




திர்ப்புகளுக்குப் பயப்படாமல் துணிச்சலாக செயல்படக்கூடியவர்  எனப் பெயரெடுத்தவர் குஷ்பு. ஆனால், அரசியலில் அவரது சொந்தக் கட்சிக்குள் தாக்குப்பிடிக்க முடியாமல் ராஜினாமா செய்திருக்கிறார். 

ஜூன் 16-ந் தேதி திங்களன்று தி.மு.க தலைவரான கலைஞருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், "என்னைத் தங்களின் இல்லத்தில் ஒருத்தியாகவே ஏற்றுக் கொண்ட -தாயுள்ளம் கொண்ட தமிழ் மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு கழக உறுப்பினராகப் பொதுவாழ்வில் என்னை ஈடுபடுத்திக்கொண் டேன். அந்த நாள் முதல் கழகத்தில் எனக்கு அளிக்கப்பட்ட பணியை நூறு சதவீதம் சிரத்தையுடன் நிறைவேற்றியதை கழகத்தில் பொறுப்பில் உள்ளவர்கள் முதல் அடிப்படைத் தொண்டர்கள் வரை அனைவரும் அறிவார்கள். ஆனால் என் அர்ப்பணிப்பும் உழைப்பும் ஒருவழிப் பாதையாகவே தொடர்ந்து நீடிக்கும் என்ற நிலை, கழகத்தில் உள்ள போது நான் தேர்ந் தெடுத்த பாதையும், பயணமும் தாங்க இய லாத மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. ஆகவே திராவிட முன்னேற்றக் கழகத்தி லிருந்தும் அதன் அடிப்படை உறுப் பினர் என்ற நிலையில் இருந்தும் விலகுவது என்ற முடிவை கனத்த இதயத்துடன் மேற்கொள் கிறேன்' என குஷ்பு சுந்தர் தெரிவித்திருக்கிறார். 

கற்பு சர்ச்சை, விழா மேடை யில் சாமி படத்திற்கு முன்பாக கால் நீட்டிய சர்ச்சை எனத் தனக்கு எதிராக வந்த வழக்குகளை பல நீதிமன்றங்களிலும் உறுதியோடு எதிர்கொண்டவர் குஷ்பு. அவரது இந்தத் துணிச்சல் ஜெ.வையும் கவர்ந்தது. கலைஞரையும் கவர்ந்தது. ஜெயா டி.வியில் ஜாக்பாட் என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார் குஷ்பு. இந்நிலையில், அவர் தி.மு.கவில் சேர, ஜாக்பாட் நிகழ்ச்சி யிலிருந்து உடனடியாகத் தூக்கப்பட்டார். இப்போது தி.மு.கவிலிருந்து தானாகவே விலகியிருக்கிறார். தனது விலகலுக்கு காரணம் என்ன என்பதை தனது சினிமா தோழி ஒருவரிடம் மனம் விட்டுப் பேசியிருக்கிறார் குஷ்பு. நாம் குஷ்புவைத் தொடர்புகொண்ட போது அவர் பேசும் சூழலில் இல்லை. அதன் பின் மிகுந்த முயற்சியின் தொடர்ச்சியாக அவரது சினிமா தோழியைத் தொடர்புகொண்டோம். குஷ்பு சொன்னதை அவர் நம்மிடம் தெரிவித்தார்.


""நான் நிறைய படிப்பேன். மனதில் பட்டதை தைரியமா பேசுவேன். "பெரியார்' படத்துல நடிச்சதோடு மட்டுமல்ல, பெரியார் பற்றியும் படிச்சேன். பொதுப்பணியில் ஈடுபடணும்ங்கிற ஆர்வம் அதிகமானது. எனக்குப் பணத் தேவை இல்லை. பங்களா, கார்னு வசதியா இருக்கேன். சினிமா மூலமா புகழும் இருக்குது. சின்னத்திரை யில் பிஸியா இருக்கேன். நான் தமிழ்நாட்டிலேயே செட்டிலாயிட்டேன். என் அம்மா என் கூடத் தான் இருக்காங்க. என் சகோதர, சகோதரிகளும் இங்கேதான் இருக்காங்க. அவங்களுக்கு நல்ல திருமண வாழ்க்கையை அமைச்சிக் கொடுத்து என்னோட கடமையை செஞ் சிருக்கேன். சுந்தர்.சியை விரும்பிக் கல்யாணம் செஞ்சிக்கிட்டு, இரண்டு பெண் குழந்தைகளோடு நல்லாவே வாழ்ந்துக்கிட்டிருக்கேன். 

எனக்கு வாழ்வு கொடுத்த தமிழ் நாட்டு மக்களுக்கு ஏதாவது செய்ய ணும்னு ஆசைப்பட்டுத்தான் அர சியலுக்கு வந்தேன். தி.மு.கவின் கொள்கைகள் பிடிச்சிருந்த தாலேயும், ஜனநாயகப் பூர்வ மான கட்சிங்கிறதாலேயும் தான் அதில் சேர்ந்தேன். கலைஞரோட வரலாற் றைப் படிச்சப்ப எனக்கு பிரமிப்பா இருந்தது. தி.மு.கவில் சேர்ந்து 3 தேர்தல் களங்களைப் பார்த்துவிட்டேன். மாநிலத்தில் தி.மு.க ஆட்சியில் இருந்தப்பவும் சரி, மத்திய அரசில் பங்கு வகித்தப்பவும் சரி, மத்திய- மாநில மந்திரிகள்கிட்ட சிபாரிசுக்குன்னு ஒருமுறைகூட போனது கிடையாது. தலைவர் கிட்டே கூட எதையும் கேட்டதில்லை. ஏன், ரயில் டிக்கெட்டுக்கான ஈ.க்யூ லெட்டர் கூட கட்சியிலே யார்கிட்டேயும் கேட்டு வாங்கியதில்லை.

தமிழகம் முழுக்க பிரச்சாரம் செய்திருக்கிறேன். ஒரு ரூபாயையாவது வேட்பாளர்கிட்டேயோ, மாவட்ட செயலாளர்கிட்டேயோ வாங்கியிருக்கிறேன்னு சொல்ல முடியுமா? எங்கெங்கே பிரச்சாரம் செய்யணும்னு தலைமைக் கழகம் லிஸ்ட் போட்டுத்தரும். கூடவே ஒரு செக் கொடுப்பாங்க. அதிலே இருக்கிற தொகை என்கூட உதவிக்கு வருபவர்களுக்குப் பயன்படக்கூடிய அளவுக்கு இருக்கும். நான் எதையும் எதிர்பார்த்ததில்லை.

கலைஞர் மேலே ரொம்ப மரியாதை வச்சிருக்கேன். அவரும் எனக்கு அந்த மரியாதையைக் கொடுத்தார். ஆனா, அதை சில பேர் வேறுவிதமா பேசினாங்க. அவர் வயது என்ன என்னோட வயது என்ன? அதைக்கூட பொருட்படுத்தாம செய்திகள் வெளியிட் டாங்க. நான் அதற்கெல்லாம் கவலைப்படலை. நான் சினிமா நடிகை. அவர் நாடறிந்த அரசியல் தலைவர். இப்படியெல்லாம் தான் வதந்திகள் பரவும்னு அலட்சியமா இருந்துவிட்டேன். ஆனா, கட்சிக்குள்ளே யேயும் குடும்பத்திலேயும் இதைப் பற்றி பேசுனப்ப எனக்கு வருத்தமா இருந்தது. கனிமொழி ஒரு பெரியாரிஸ்ட். அதனால் அவர் என்னுடைய அரசியல் பயணத்தில் சப்போர்ட்டாக இருப்பார் என்று எதிர்பார்த்தேன். ஆனால், அவர் தரப்பிலும் எனக்கான ஆதரவு இல்லை. புறக்கணிப்புதான் வெளிப் பட்டது.

கட்சியின் ஜனநாயகத்தன்மை பற்றியும் வாரிசு பற்றியும் நான் கொடுத்த பேட்டியை தப்பா எடுத்துக்கிட்டு, திருச்சி ஏர்போர்ட் டில் என் மேலே செருப்பை வீசி னாங்க. அதைக்கூடத் தாங்கிக்கிட் டேன். ஆனா, சென்னையில் குழந்தைகள் இருந்த வீட்டில் கல்வீசியதும் அதிர்ச்சியாயிட்டேன். அரசியல் வேண்டாம்னு அப்பவே முடிவு எடுத்துட்டேன். பலரும் சமாதானப் படுத்தினார்கள்.


தேர்தல் வந்தபோது உரிய அங்கீகாரம் கிடைக்கும்னு எதிர் பார்த்தேன். தென்சென்னை அல்லது கோவையில் சீட் கேட்டேன். ஆங்கிலமும் இந்தியும் சரளமாகப் பேசத் தெரியும் என்பதாலும் முஸ் லிம் சமுதாயத்தில் பிறந்த பெண் என்பதாலும் தலைவரும் நல்ல  சாய்ஸ் என்று நினைத்தார். சீட் பற்றி தளபதி ஸ்டாலின்கிட்டே பேசச் சொன்னார். அறிவாலயத்தில் அவரை சந்தித்து விவரத்தை சொன்னேன். "சீட்டெல்லாம் கேட்காதீங்க'ன்னு அவர் சொல்லிவிட்டார். இதற்குப்பிறகு தேர்தல் பிரச்சாரத்துக்கும் யாரும் கூப்பிடவில்லை. அதன்பிறகு, ரொம்ப தாமதமா சுற்றுப் பயண லிஸ்ட் போட்டுக்கொடுத்தாங்க. மன அழுத்த த்தோடுதான் பிரச்சாரத்துக்குப் போனேன். என் கவலையை எனக்குள்ளே வைத்துக்கொண்டு எனக்குக் கொடுக்கப்பட்ட பணியை அப்போதும் முழுமையாக செய்தேன். 

ஜூன் 3-ந் தேதி தலைவர் கலைஞரோட 91-வது பிறந்தநாள் விழாவிலும் நேரில் போய் வாழ்த்துச் சொன்னேன். ஆனா, தலைவரின் பிறந்தநாளுக்காக பட்டிமன்றம், வாழ்த்தரங்கம், நலத்திட்ட உதவிகள்னு பல விழாக்களை ஏற்பாடு செய்தவங்க எதிலேயும் என் பெயரைப் போடவில்லை. போடவேண்டாம் என்று உத்தரவு வந்ததால்தான் தவிர்த்திருக்காங்க. கட்சியை வழிநடத்துபவர்கள் ஏதோ முடிவு செய்துதான் செயல் படுகிறார்கள் என்பது தெரிந்தது. இனியும் நீடிக்க  வேண்டாம் என்று முடிவெடுத்துவிட்டேன். அரசியலில் ஈடுபடுவதால் என்னுடைய தொழிலும் பாதிப்படைந்தது. அரசியலிலும் உரிய அங்கீகாரம் இல்லை. அதனாலதான் இந்த முடிவை எடுத்தேன்'' என்பதுதான் குஷ்புவின் மனவெளிப்பாடு.


திங்களன்று குஷ்புவின் ராஜினாமா கடிதம் வந்தபோது, கலைஞருடன் இருந்த சீனியர்களுக்கே ஷாக். கட்சியில் பிரபலமா இருந்த ஒரே சினிமா ஸ்டார் குஷ்புதான். அவரும் இந்த முடிவை எடுத்தால் எப்படி? அவசரப்படவேண்டாம் என்று தகவல் அனுப்புவோம் என்பதுதான் அவர்களின் கருத்தாக இருந்திருக்கிறது. கலைஞருக்கும் இந்த நிலைமை புரிந்தது. எனினும்,  குஷ்பு இந்த முடிவை எடுத்ததன் பின்னணியை அவரும் உணர்ந்திருந்ததால் அடுத்த கட்ட முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. குஷ்புவின் விலகல் பற்றி மு.க.ஸ்டாலின் தரப்பின் கருத்தை அறிய முயன்றோம். "அவராக வந்தார். இப்போது அவராகப் போய்விட்டார். இது அவரது முடிவு' என்ற அளவிலேயே பதில் வந்தது. 

தி.மு.கவிலிருந்து விலகிய குஷ்பு, அ.தி.மு.கவில் சேருவாரா, பா.ஜ.கவுக்குப் போவாரா என எதிர்பார்ப்புகள் மிகுந்த நிலையில், "இப்போதைக்கு வேறெந்த கட்சிக்கும் போவதில்லை. குடும்பத்துடன் கொஞ்சகாலம் நிம்மதியாக இருந்துவிட்டு, அதன்பிறகு யோசிக்கலாம்' என்பதுதான் அவரது மனநிலையாக உள்ளது. இதனை ட்விட்டரிலும் பதிவு செய்த குஷ்பு, 19-ந் தேதி கனடா நாட்டிற்குப் பயணமாகிறார். அவரைப் பற்றிய செய்திகள் தமிழகத்தின் எல்லாத் திசைகளிலும் பயணிக்கின்றன.

ad

ad