புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஜூன், 2014


கர்நாடகா காடுகளில் யானை வேட்டையாடி வந்த “குட்டி” வீரப்பன் கைது 
கடந்த பத்தாண்டுகளுக்கு முன்புவரை பாதுகாப்புடன் இருந்த வீரப்பன் காடு இப்போது வேகமாக அழிந்து வருகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான். அரியவகை மரங்களும்,
யானை, மான், புலி வனவிலங்குகள் வேட்டையாடப்பட்டு வருவதை அவ்வப்போது நடக்கும் சம்பவங்கள் உறுதிப்படுத்துகின்றது.

கடந்த நான்கு ஆண்டுகளில், தமிழக எல்லையில் உள்ள மாதேஸ்வரன் மாலை, கவுதல்லி வனப்பகுதியில் பத்துக்கும் அதிகமான ஆண் யானைகள் தந்த வேட்டைக்காரர்களால் சுட்டுக்கொல் லப்பட்டது. கொஞ்சம் கொஞ்சமாக விசாரணை மேற்கொண்ட கர்நாடக வனத்துறையினர் சரவணன் என்பவர் தலைமையில், 11,பேர் கொண்ட ஒரு குழுவினர் 15, வேட்டை நாய்களுடன் காட்டுக்குள் தங்கியிருந்து யானை மற்றும் புலி, சிறுத்தை, மான் போன்ற விலங்குகளை வேட்டையாடுவதை கண்டுபிடித்துள்ளனர்.
சரவனனுடன், கோவிந்தராஜ், கோவிந்தபாடி சரவணன், மாட்டல்லி ராவணன், ராமராஜ், வேலுச்சாமி, தங்கராஜ், மஞ்சு, இன்னொரு கோவிந்தராஜ் உள்ளிட்ட 11 வேட்டைகாரர்கள் யானை வேட்டையாடுவதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
சாவணன் மீது கவுதள்ளி, மாதேஸ்வரன் மலை வன எல்லையில் யானையை கொன்றதாக ஏழு வழக்குகளும், மாதேஸ்வரன் மாலை காவல் நிலையத்தில், அடிபாலற்று பகுதியை சேர்ந்த ஒரு மலைவாழ் சமூகத்தை சேர்ந்த பெண்ணை அடித்து உதைத்து, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியது என ஒரு வழக்கும் உள்ளது.
தமிழகத்தில் மேட்டூர் வனச் சரகத்தில் உள்ள தார்க்காடு என்ற இடத்தில் 2010-ல் ஒரு யானையை சுட்டுக்கொன்று தந்தம் வெட்டிஎடுத்தது தொடர்பான ஒரு வழக்கும் இவன் மீது நிலுவையில் உள்ளது. யார் இந்த சரவணன் என்று கடந்த ஒரு வருடமாக தேடிக்கொண்டிருந்த கர்நாடக வனத்துறையினர்,  சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், கோவிந்தபாடி அருகிலுள்ள ஊஞ்சக்கொறையை சேர்ந்தவர் என்பதை கடந்த சில நாட்களுக்கு முன்பாக கண்டுபிடித்தனர்.

சரணவன் குடியிருக்கும் இடம் சேலம், தருமபுரி மற்றும் கர்நாடக வனப்பகுதியை ஒட்டியிருப்பதால், இவனை தேடிச்சென்று வனத்துறையினரால் கைது செய்ய முடியவில்லை. பெரும்பாலும் வனப்பகுதிக்குள்ளே தங்கியிருந்த சரவணன் யானை தந்தத்துக்கு நல்ல கிராக்கி இருப்பதால் வேகமாக வேட்டையாடி வந்துள்ளான்.
கர்நாடக காடுகளில் யானைத் தந்த வேட்டையில் கைவரிசையை காட்டிவந்த சரவணனை பிடிக்க முடியாமல் வனத்துறையினர் திணறியபோது, கர்நாடக மாநில நக்சல் கண்காணிப்பு மற்றும் தடுப்பு பிரிவு போலீசார் சரவணனை வளரவிடக்கூடாது, அது நமக்கு பெரிய ஆபத்தை கொண்டுவந்துவிடும் என்ற முடிவில், சரவணனை போட்டுத்தள்ள தேவையான ஆட்களையும், ஆயுதங்களையும் கொடுத்து சில போலிசாரையும் சேர்த்து காட்டில் இறக்கிவிட்டனர்.

இந்த குழுவினர், ஏப்ரல்-20,ம் தேதி ஒகேனக்கல் அருகில் சரவணனை மடக்கி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். அதில் இரு தரப்புக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. சரவணன் கும்பல் வனத்துறையினரிடமிருந்து தப்பித்து வந்துவிட்டது.

அடுத்து, மே-24, அன்று சுரக்காய் மடுவு பகுதியில் சரவணன் கூட்டத்தினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில், கோவிந்தராசு, கணேசன் என்ற இருவர் காயங்களுடன் கர்நாடக வனத்துறையினரிடம் சிக்கிக்கொண்டனர். மீதி ஆட்கள் தப்பித்து வந்துவிட்டனர். பாலாறு, கோபிநத்தம், ஒகேனக்கல் பகுதிகளை உள்ளடக்கிய வனப்பகுதியை வன உயிரின சரணாலயமாக அறிவித்துள்ள கர்நாடக வனத்துறையினர், இந்தப்பகுதியில் யாராவது துப்பாக்கியுடன் சென்றால் விசானையில்லாமல் சுட்டுக்கொள்ளப்படுவார்கள் என்று கடந்த மாதம் தண்டோரா போட்டு அறிவிப்பு செய்தது.
இது குறித்து, கர்நாடக பத்திரிகைகள் பரபரப்பு செய்தியாக வெளியிட, கர்நாடகா போலீசில் சிக்கினால் நமக்கு ஆபத்து என்ற பயத்தில், தமிழகத்துக்கு தப்பி வந்த சரவணன்உஞ்சக்கொரையில் சுற்றிக்கொண்டு இருந்துள்ளான்.
தகவலறிந்த கொளத்தூர் போலீசார் சரவணனுக்கு போன் போட்டு, உன்னை கொஞ்சம் விசாரிக்கவேண்டும் ஸ்டேசனுக்கு வா...என்று கூப்பிட்டுள்ளனர். மூன்று நான்கு தடவை போன் போட்டும் சரவணன் வராமல் போகவே, கடுப்பான இன்ஸ்பெக்டர் மனோகரன் மிரட்டும் தோரணையில் பேசியுள்ளனர்.
தப்பா நினைக்காதீங்க சார், ஏன்னாலே கொளத்தூருக்கு வர பஸ்சுக்கு காசில்லை, நீங்களே வந்து கூட்டிக்கிட்டு போனா நல்லது என்று கிண்டலாக சொல்லியுள்ளான் சரவணன். வேறு வழியில்லாத நிலையில், கொளத்தூர் போலீசார் நேற்று, கோவிந்தபாதிக்கு “ஜீப்”பை அனுப்பி சரவணனை கூட்டிக்கொண்டு வந்து விசாரித்துள்ளனர்.
பிறகு, இன்று காலை மேட்டூர் துணை ஆட்சியர் அனீஸ்சேகர் முன்பாக ஆஜர் செய்து இனிமேல், குற்ற செயல்களில் ஈடுபடமாட்டேன் என்று இருபது ரூபாய் பத்திரத்தில் எழுதிக்கொடுத்துவிட்டு வெளியே அனுப்பிவிட்டனர். வெளியே வந்த சரவணனை தார்காடு பகுதியில் யானையை கொன்ற வழக்குக்காக மேட்டூர் ரேஞ்சர் கைது செய்துள்ளார்.
“அதிரடிப்படை” என்ற பெயர் இன்னும் மறையும் முன்பாகவே எப்படி இன்னொரு வேட்டைக்காரன் தோன்றியிருக்க முடியும் என்ற சந்தேகத்துடன் அந்தப்பகுதியில் நாம் விசாரணை செய்தோம், வீரப்பன் என்ற ஒருவன் உருவாக எப்படி வனத்துறையினர் முக்கிய காரணமாக இருந்தார்களோ அது போலவே, இந்த சரவணன் பெரிய அளவில் வளர அதிரடிப்படை போலீசார் தான் காரணமாக இருந்தார்கள் என்ற ஒரு தகவலை சொன்னார்கள்.
சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், கோவிந்தபாடி அருகிலுள்ள ஊஞ்சக்கொறையை சேர்ந்தவர் இருசார். பாலாறும், காவேரி ஆறும் இணையும் இடத்தில் உள்ள இந்த ஊரை சேர்ந்த இவர், வீரப்பனை பிடித்துக்கொடுக்கும் முக்கிய தகவலாளியாக (இன்பார்மர்) செயல்பட்டு வந்துள்ளார்.

1993, ஆண்டு ஏப்ரல்,9-ம் தேதியன்று தமிழ்நாடு சிறப்பு அதிரடிப்படையின் தலைவராக இருந்த எஸ்.பி.கோபாலகிருஷ்ணன் தலைமையில் காட்டுக்குள் சென்றவர்கள் மீது, சுரைக்காய் மடுவு என்ற இடத்தில் வீரப்பன் குழுவினர் நடத்திய கண்ணிவெடிதாக்குதலில், சங்கரன், ராமன், சூரியகாந்தன், ரகு, சின்னக்குழந்தை, மேட்டூரான், ரங்கன், ரத்தினம், பழனியப்பன், குருநாதன், மணி, குழந்தையப்பன், சடையன், பழனி, அம்மாசி என 15 தகவலாளிகளும், தமிழ்நாடு சிறப்புக்காவல் படை போலீசார் சுகுமாரன், தயாளன், சுவாமிநாதன், ரமேஷ், பஞ்சலிங்கம் என ஐந்துபேரும், தமிழ்நாடு வனத்துறை காவலர்கள் சண்முகம், சிறீரங்கன் என இருவர் ஆக மொத்தம் 22,பேர் கொல்லப்பட்டனர்.
அந்த வண்டியில் போயிருந்த இன்பாமர்களில் இருசார் மட்டும் இலேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். அதற்கு பிறகு, வீரப்பன் சாகும் வரை இருசார் குடும்பத்தினர் அனைவருக்கும் தனி மரியாதையும், சலுகையும் கொடுத்து வந்தது தமிழ்நாடு அதிரடிப்படை. இந்த சம்பவத்துக்கு பிறகு, இருசர், அவரது மகன் ராஜா, சரவணன், மூவருமே காட்டுக்குள் போய் மான் வேட்டையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
யார் கேட்டாலும், வீரப்பனின் நடமாட்டத்தை கண்காணிக்கத்தான் போனோம் என்று சொல்லி வந்துள்ளனர். இவர்கள் ஊரில் எந்த அடாவடி செய்தாலும், யாரும் தட்டிக்கேட்ட முடியாது. அதிரடிப்படையினரின் முழு ஆதரவுடன் ஊருக்குள்ளும், காட்டுக்குள்ளும் இவர்கள் சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
வீரப்பன் மறைந்த பிறகு, இருசாருக்கும் வயதாகிவிட்ட காரணத்தால் காட்டுக்குள் போவதை குறைத்துக்கொண்டார். அதிரடிப்படையின் ஆதரவில்  சரவணனின் அண்ணன் ராஜா என்பவர் தமிழ்நாடு வனத்துரையில் தற்காலிக ஊழியராக வேலைக்கு சேர்ந்துள்ளார். சரவணன் மட்டும் வன விலங்குகளை வேட்டையாடுவதிலேயே குறியாக இருக்கிறான்.
கோவிந்தபாடி பகுதியில் சரவணனை பற்றி விசாரித்ததில், இவன் காசுக்காக எதையும் செய்ய தயங்காதவன். 2002-ல் சென்னம்பட்டியில், புருசன்-பொண்டாட்டிக்கு ஏற்பட்ட தகராறில் புருஷனிடம் ஒரு இலச்சம் ரூபாய் பணத்தை வாங்கிக்கொண்டு பொண்டாட்டியை கொலை செய்து பிணத்தை கொண்டுபோய் காட்டில் எரித்துள்ளான்.
கோட்டையூர் மாரியம்மன் கோவில் திருவிழாவின் போது, இவனது அண்ணன் மாமனாரை கூட்டிக்கொண்டு காட்டுக்குள் மான் வேட்டைக்கு போனவன், கடைசியில், பாம்பு கடித்து அவர் இறந்து போய்விட்டதாக சொல்லி கதையை முடித்துவிட்டனர்.
அதிரடிப்படை போலீசார் சப்போர்ட் இருந்ததாலே, சரவணன் இந்த பகுதியில், யார்மீது வேண்டுமானாலும் கை வியக்கும் அளவுக்கு அதிகாரம் இருந்தது,  கோவிந்தபாடியில் உள்ள “ரைஸ்”மில் உரிமையாளரை அடித்துப்போட்டுவிட்டு ஒரு இலச்சம் ரூபாய் பணத்தை பிடுங்கிக் கொண்டு போனபோது, அதிரடிபடையினரின் தடையையும் மீறி அப்போது கொளத்தூர் போலிஸ் இன்ஸ்பெக்டராக இருந்த துரைப்பாண்டியன் சரவணனை புரட்டியெடுத்து கைது செய்து கொண்டுவந்து உள்ளே தள்ளியுள்ளார். அதற்கு பிறகு தான், ஊருக்குள் கொஞ்சம் அடக்கி வாசித்த சரவணன் காட்டுக்குள் சென்று யானை வேட்டையை துவக்கியதாக சொல்கிறார்கள்.
சரவனனையும், அவனது கூட்டாளிகளியும் பிடித்து முறையாக விசாரித்தால் என்னும் ஏராளமான தகவல்கள் வெளியே வரும் என்கிறார்கள் அந்தப்பகுதி மக்கள். ஒரு வீரப்பனை கொன்றுவிட்டு இன்னொரு வீரப்பனை உருவாக்குகிறது தமிழக அதிரடிப்படை.

ad

ad