புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

15 அக்., 2019

கோத்தாபயவிற்கு எதிரான வழக்கு ஜனாதிபதி தேர்தலின் பின் 2020 வரை ஒத்திவைப்பு

டீ.ஏ. ராஜபக்ஸ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு அரச நிதியைப் பயன்படுத்தியதாக கோத்தாபய ராஜபக்ஸ உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக கொழும்பு விசேட நீதாய மேல் நீதிமன்றில் இடம்பெறும் வழக்கு 2020 ஆண்டு ஜனவரி 9 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வழங்கு இன்று (15.10.19) சம்பத் அபயகோன், சம்பத் விஜயரத்ன மற்றும் சம்பா ஜானகீ ராஜரத்ன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் சாட்சி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டது.

எனினும், சட்டமா அதிபர் சார்பாக முன்னிலையான அரச பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ், இந்த வழக்கின் பிரதிவாதி கோத்தாபய ராஜபக்ஸ சமர்ப்பித்த மனு ஒன்று உயர்நீதிமன்றினால் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள நாள் குறிக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி இந்த வழக்கு விசாரணையை தடுத்து உயர்நீதிமன்றினால் வழங்கப்பட்ட தடை உத்தரவை அன்றைய தினம் வரையில் நீடிக்குமாறு நீதிமன்றில் கோரியிருந்தார்.

இதன்போது, கோத்தாபய ராஜபக்ஸ ஷ சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, உயர் நீதிமன்றினால் இந்த வழக்கு விசாரணையை தடுத்து வௌியிடப்பட்ட தடை உத்தரவை எதிர்வரும் டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி வரை நீடிக்குமாறு கோரியிருந்தார்.

இதன் காரணமாக, அன்றைய தினத்தின் பின்னர் குறித்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு நாள் குறிக்கப்பட வேண்டும் எனவும் பிரதிவாதியின் சட்டத்தரணி நீதிமன்றில் கோரியிருந்தார்.

அதன்படி, இன்றைய தினத்தின் வழக்கு விசாரணையை ரத்துச் செய்த மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் எதிர்வரும் ஜனவரி மாதம் 09 ஆம் திகதி வரை குறித்த வழக்கினை ஒத்திவைத்தனர்.


இன்றைய தினம் சாட்சி வழங்குவதற்காக நீதிமன்றில் முன்னிலையான சாட்சியாளர்கள் நால்வரை விடுவிக்கப்பட்ட நிலையில், மீண்டும் அறிவிக்கும் போது நீதிமன்றில் முன்னிலையாக வேண்டும் என நீதிபதிகள் குழாம் சாட்சியாளர்களுக்கு அறிவித்துள்ளது.