வெள்ளி, செப்டம்பர் 07, 2012


தேங்காய் உடைப்பதை விடுத்து பேச்சுவார்த்தைக்கு செல்லுங்கள்!- கூட்டமைப்பினரிடம் பிரபா கணேசன் வேண்டுகோள்
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்காக 1008 தேங்காய்களை உடைப்பதை தவிர்த்து பாராளுமன்ற தெரிவுக்குழுவின் மூலமாக பேச்சுவார்த்தைக்கு வாருங்கள் என தமிழ் கூட்டமைப்பினருக்கு வேண்டுகோள் விடுக்கின்றேன் என கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் தெரிவித்தார்.
மேலும் தெரிவித்ததாவது,
இன்று தமிழ் அரசியல் கைதிகளின் நிலைமை மிகவும் மோசமான கட்டத்தில் உள்ளது. சிறைகாவலர்களை பணயக்கைதிகளாக பிடித்து வைத்த சில கைதிகளின் நடவடிக்கை காரணமாக ஏனைய கைதிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை சம்பந்தமாக நடிவடிக்கை எடுக்கபடவிருந்த சமயத்தில் இந்நடவடிக்கை காரணமாக இருவர் உயிரிழக்க நேர்ந்துள்ளது. இது சம்பந்தமாக அரசாங்கம் முழுமையான விசாரணை நடத்த வேண்டும்.
அதேநேரத்தில் கைதிகளின் விடுதலை சம்பந்தமாக அடிக்கடி தமிழ் ஊடக வாயிலாக எழுப்பப்பட்ட குரல்கள் ஓய்ந்து விட்டன.
இன்று அடுத்த பிரச்சினைக்காக குரல் கொடுப்பதற்கு சென்றுவிட்டார்கள். தமிழ் ஊடகங்களுக்கு அறிக்கை விடுவதன் மூலம் எவராலும் இவர்களுக்கு விடுதலை பெற்று தர முடியாது.
என்னைப் போன்று அரசாங்கத்திற்கு ஆதரவளித்துக் கொண்டிருக்கும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களுக்குக் கூட அரசியல் கைதிகளுக்கு விடுதலை வாங்கிக் கொடுக்ககூடிய நிலைமை இல்லை என்பது கசக்கும் உண்மையாகும்.
இந்நிலையில் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக கூட்டமைப்பினர் 1008 தேங்காய் உடைப்பதை பார்க்கும் பொழுது தமிழர்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்ற தந்தை செல்வாவின் வசனங்கள் தான் ஞாபகம் வருகின்றது.
2010ம் ஆண்டு மக்கள் அளித்த பெருவாரியான வாக்குகளால் பாராளுமன்ற கதிரையில் அமர்ந்திருக்கும் கூட்டமைப்பினர் யதார்த்த ரீதியாக அரசியல் கைதிகள் விடுதலை சம்பந்தமாக அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியதில்லை.
அரசியல் கைதிகளுக்கு சிறைச்சாலைகளுக்குள் அநீதி இழைக்கப்படும் பொழுது மட்டும் நேரடியாகவும் ஊடகங்களின் மூலமும் குரல் எழுப்பி வருகிறார்கள்.
இதை தவிர்த்து இனப்பிரச்சினை தீர்வுக்கான பேச்சுநுவார்த்தைக்கு பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்குள் கூட்டமைப்பினர் வர வேண்டும்.
பேச்சுவார்த்தைக்கு வருவதற்கான முன் நிபந்தனையாக அரசியல் கைதிகளின் விடுதலை முறையான மீள்குடியேற்றம் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை மீளப் பெறுதல் இவை போன்ற ஏனைய முக்கியமான விடயங்களை முன்வைக்க வேண்டும்.
இவ்விடயங்கள் உடனடியாக அமுல்படுத்தப்பட்ட பின்பே அதிகார பரவலாக்கல் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். அதை விடுத்து தேங்காய் உடைப்பதும் கோயில்களில் வேண்டுதல் வைப்பதும் ஒரு போதும் நடைமுறைக்கு சாத்தியமான விடயம் அல்ல.
தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுமேயாயின் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு தொடர்ந்து அரசியல் செய்ய முடியாது போய்விடும்.
அதேபோல் தமிழ் மக்களுக்கு அதிகாரப்ப பகிர்வினை வழங்கி விட்டால் அரசாங்கத்திற்கு சிங்கள பௌத்த வாக்குகள் குறைந்து விடும் என்ற பயம் இருக்கின்றது.
இவ்விடயத்தில் அரசாங்கமும் தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் தமது எதிர்கால அரசியலை தக்க வைத்துக் கொள்ள பரஸ்பர புரிந்துணர்வுடன் செயல்படுகிறார்களா என்ற சந்தேகம் எழுகின்றது.