சனி, ஜனவரி 23, 2016

5 -வது ஒருநாள் கிரிக்கெட்: 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா சாதனை வெற்றி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பரபரப்பான போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியாவில் விளையாடி வரும் டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தொடர்ந்து சறுக்கலை சந்தித்து வருகிறது.5 போட்டிகள் கொண்ட ஒரு 

நாள் தொடரில் முதல் 4 ஆட்டங்களில் முறையே ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட், 7 விக்கெட், 3 விக்கெட் மற்றும் 25 ரன்கள் வித்தியாசங்களில் வெற்றி 

பெற்று தொடரை கைப்பற்றியதோடு 4-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி சிட்னியில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் 

வென்ற இந்திய அணியின் கேப்டன் தோனி, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களம் இறங்கி பேட் செய்த ஆஸ்திரேலிய அணி, ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 330 ரன்களை சேர்த்தது.

இதையடுத்து 331 எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி சிறப்பான தொடக்கம் பெற்றது. குறிப்பாக ஷிகர் தவான் ஆட்டத்தில் அனல் பறந்தது. ஆஸ்திரேலியே அணியின் பந்து வீச்சை ஒரு கை பார்த்த தவான் அவ்வப்போது பவுண்டரிகளை விரட்டி ரசிகர்களை குஷிப்படுத்தினார். அவருக்கு பக்க பலமாக நிதானத்துடன் ரோகித் சர்மா ஆடி வந்தார். 18.2 ஓவரில் 123 ரன்களை சேர்த்த போது இந்த ஜோடி பிரிந்தது. இறங்கி வந்த ஆப் திசையில்  தவான் அடித்த பந்தை எல்லைக்கோடு அருகே  வேட் அருமையாக தாவிப்பிடித்தார். இதன் மூலம் 56 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்கள் மூலம் 78 ரன்களை அடித்த தவானின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. 

இதையடுத்து களம் இறங்கிய துணை கேப்டன் விராட் கோலி இம்முறை நீண்ட நேரம் நீடிக்க வில்லை. 8 ரன்களில் ஹாஸ்டிங்ஸ் பந்தில் ஆட்டமிழந்து கோலி ஏமாற்றினார். இதையடுத்து ரோகித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்த மனிஷ் பாண்டே பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஜோடி 3 வது விக்கெட்டுக்கு 97 ரன்கள் சேர்த்து இருந்த நிலையில், சதம் அடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட  ரோகித் சர்மா 99 ரன்களில் ஆட்டமிழந்தார். 

ரோகித்சர்மா ஆட்டமிழந்த போது இந்திய அணியின் வெற்றிக்கு 91 பந்துகளில் 100 ரன்கள் தேவைப்பட்டது. நெருக்கடியான வேளையில், தோனி களம் இறங்கினார். மனிஷ் பாண்டேவுடன் ஜோடி சேர்ந்த தோனி , ஆமை வேகத்தில் ஆட்டத்தை துவங்கினார். இருப்பினும் மறுமுனையில் மனிஷ் பாண்டே துரிதமாக ரன்கள் சேர்ப்பதில் ஆர்வம் காட்டினர். இந்த ஜோடிக்கு அதிருஷ்டமும் கை கொடுத்தது. தோனி கொடுத்த அருமையான கேட்ச் வாய்ப்பை லய்ன் கோட்டை விட்டார். 

மனிஷ் பாண்டே மற்றும் தோனியின் பொறுப்பான ஆட்டத்தினால், இந்தியா வெற்றியை நோக்கி மெதுவாக பயணித்து வந்தது. இதனால் கடைசி நேரத்தில் ஆட்டத்தில் உச்ச கட்ட பரப்பரப்பு நிலவியது. கடைசி ஓவரில் இந்தியாவின் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது. இந்த ஓவரை தோனி எதிர்கொண்டார். மார்னே  மார்ஷ் கடைசி ஓவரை வீசினார். முதல் பந்தை வைடாக வீசினார். அடுத்த பந்தை  மார்ஷ் புல்டாசாக வீச தோனி அற்புதமாக சிக்சருக்கு விளாசினார்.  அதற்கு அடுத்த பந்தில்  தோனி (34 ரன்கள், 42 பந்துகள்) ஆட்டமிழந்தார். இதனால், ஆட்டத்தில் மீண்டும் பரபரப்பு தொற்றிக்கொண்டது. 

இருப்பினும் 96 ரன்களுடன் களத்தில் இருந்த மனிஷ் பண்டே பேட்டிங் முனைக்கு சென்றதால், சிறிது நம்பிக்கை ஏற்பட்டது. இந்திய அணிக்கு 4 பந்துகளில் 6 ரன்கள் தேவை என்ற நிலை இருந்த போது மனிஷ் பாண்டே பவுண்டரி அடித்தார்.  இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தனது முதல் சதத்தையும் பாண்டே பதிவு செய்தார். அடுத்த பந்தில்   வெற்றிக்கு தேவையான 2 ரன்களையும் சேர்த்த மனிஷ் பாண்டே இந்தியாவை சாதனை வெற்றிக்கு அழைத்துச்சென்றார். இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணியில் அதன் சொந்த மண்ணில் 300 ரன்களுக்கு மேல் வெற்றிகரமாக துரத்தி வெற்றி பெற்ற முதல் அணி இந்தியா என்ற பெருமையை இந்தியா பெற்றது. 

இந்த தொடரை 4-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி கைப்பற்றியது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வரும் 26 ஆம் தேதி நடைபெறுகிறது.