புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 மார்., 2013




           தொண்டையில் சிக்கிய முள் அகற்றப்பட்ட உணர்வுடன் உரக்கப் பேசும் தி.மு.க தொண்டர்கள், ""காங்கிரஸ் கூட்டணி யிலிருந்து தி.மு.க வெளியேறப் போவதை முதன்முதலில்  சொன்னது நக்கீரன்தான். கலைஞர்  எடுத்திருக்கும் இந்த முடிவு  நன்றி நக்கீரன் எங்களைப் போன்றவர்களுக்கு மகிழ்ச்சி. நக்கீரன் செய்திகளின் நம்பகத்தன்மைக்கு மீண்டும் ஒரு வெற்றி'' என்றார்கள் உற்சாகமாக. கலைஞர் தன் நிலைப்பாட்டில் தீவிரமாக இருப்பதைக் கடந்த இதழிலேயே விரிவாக எழுதி யிருந்தோம். அதன் பின் நடந் தவை தொடர்கின்றன.

மார்ச் 18 (திங்கள் இரவு)

காங்கிரஸ் மேலிடத்தின் சார்பாக குலாம்நபிஆசாத், ஏ.கே.ஆன்ட்டணி, ப.சிதம்பரம்  மூவரும் வந்து சந்தித்து  சென்ற பின், தி.மு.க நிர்வாகிகளான பேராசிரியர், துரைமுருகன், மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு, பொன்முடி, எ.வ.வேலு ஆகியோரிடம் இந்த சந்திப்பு பற்றிய விவ ரங்களைப் பகிர்ந்துகொண்டார் கலைஞர். சந்திப்பில் உடனிருந்தவரான பேராசிரியர், "இலங்கைப் பிரச்சினையின் இன்றைய நிலையை எடுத்துச் சொல்லியும்  காங்கிரஸ்காரங்க அவங்க நிலையிலிருந்தேதான் பேசுறாங்க. சரியா வரமாட்டாங்க' என தன் மனதில் இருந்ததைப் பட்டெனச் சொல்லிவிட்டார். 

டி.ஆர்.பாலு உடனே, "இலங்கைப் பிரச்சினையில் மட்டுமா? கடந்த  ஒரு  வருசமா நான் எத்தனை  முறை டெல்லியில் பிரதமர் அலுவலகம், சோனியா வீடு என்று அலைந்தேன். அதற்கும் ரெஸ்பான்ஸ் இல்லை. அதையும் அந்த  மூணுபேர்கிட்டே பேசணும்னு நினைத்தேன். தலைவர் தான் தடுத்துவிட்டார்' என்று சொல்ல, கலைஞர் குறுக்கிட்டுள்ளார். 

"2ஜி, கனிமொழி கைது, ஆ.ராசா கைது ரெய்டு இதையெல்லாம் தான் ஒரு வருட அலைச்சல்னு பாலு சொல்றாரு. அதை அவங்ககிட்டே பேசுறதுக்கான நேரமா இது? அதையெல்லாம் சட்டரீதியாக கவனிச்சிக்க லாம். இப்ப நம்ம கவனமெல்லாம் இலங்கைப் பிரச்சினையிலேதான். நாம சொன்ன கோரிக்கையை அவங்க ஏற்றுக்கொள்கிற மாதிரி தெரி யலை. அவங்க வருகையைக்கூட நான்  விரும்பலை. கனிமொழிகிட்டே பேசியிருக்காங்க. சரி வாங்கன்னு சொன்னேன். திரும்பத் திரும்ப அவங்ககிட்டே பேசி என்ன ஆகப்போகுது' என்று தன் மனநிலையை வெளிப்படுத்தியுள்ளார். அருகிலிருந்த மு.க.ஸ்டாலின், "மத்தியில் உள்ள ஆட்சியிலிருந்து நாம வெளியேறி, ஆதரவை வாபஸ் வாங்காவிட்டால், நம்ம  கட்சித்  தொண்டர்களே ரொம்ப அதிருப்தியடைஞ் சிடுவாங்க' என்று சொல்ல, உடனிருந்த மற்ற தி.மு.க நிர்வாகிகளும், "காங் கிரசை நம்பி செயல்பட்டால் நமக்கு நியாயம் கிடைக்காது'’ என்பதை கலைஞரிடம் அழுத்தமாகச் சொல்லிவிட்டுச் சென்றார்கள். 

எல்லோரும் போன பிறகு கலைஞரை சந்திக்க தயாநிதி மாறன்  வந்தார். "தாத்தா... டெல்லியோடு நான் பேசிட்டேன். நீங்க சொன்ன கோரிக்கையில் இனப்படுகொலை என்ற வார்த்தை மட்டும் வருவது கஷ்டம். அதற்குப் பதிலா, கொத்துக் கொத்தாகத்  தமிழர்களைக் கொன்று குவித்ததற்கு நியாயம் வேண்டும் என்ற வாசகத்தை சேர்த்து தீர்மானம் கொண்டு  வர மத்திய அரசு ஆலோசிக்குது. அவங்க எடுக்கிற முடிவை நீங்க ஏற்றுக்கணும்' என்று சொல்ல, கலைஞர் எந்தப் பதிலும் சொல்லாமல் கேட்டுக்கொண்டார். 

கோபாலபுரம் வீட்டில் நள்ளிரவைத் தாண்டியும் கலைஞர் தூங்கவில்லை. யாருமின்றி, தனிமையில் இருந்த கலைஞர் பேப்பரையும் பேனாவையும் எடுத்து, அவரே எழுத ஆரம்பித்துவிட்டார். காங்கிரசுடனான தி.மு.க கூட்டணியின் முடிவுரைதான் அவர்  எழுதிய வாசகங்கள். 

மார்ச் 19 (செவ்வாய்க்கிழமை)

காலையில் தனது உதவியாளர் சண்முகநாதனிடம் அந்த பேப்பர்களைக் கொடுத்து, டைப் செய்யச் சொன்ன கலைஞர், போனில்  மு.க.ஸ்டாலினைத் தொ டர்பு  கொண்டு, "11  மணிக்கு அறிவாலயத்தில் பிரஸ் மீட் இருக்குது. கட்சி  நிர்வாகிகளுக்குத் தகவல் சொல்லிடணும். மீடியாக்களுக்கும் சொல்லிடணும்' என்ற கலைஞர், கூட்டணியிலிருந்து விலகுவது குறித்த தன்னோட அறிக்கை பற்றி அப் போதும் யாரிடமும் சொல்லவில்லை.

அறிவாலயத்தில் நடந்த பிரஸ் மீட்டில், "தி.மு.க. முன்மொழிந்த திருத்தங்கள் எவற்றையும் இந்திய அரசு ஒரு சிறிதும் பரிசீலனை செய்யவில்லை. இதற்குப் பிறகும் இந்திய மத்திய ஆட்சியில் தி.மு.க நீடிப்பது  தமிழினத் திற்கே இழைக்கப்படும்  பெருந்தீமை என்பதால் மத்திய அமைச்சரவையி லிருந்தும் ஐக்கிய முற்போக்குக் கூட் டணியிலிருந்தும் தி.மு.க உடனடியாக விலகிக் கொள்வதென முடிவு செய் யப்படுகிறது' என்பதை அறிவித்தார் கலைஞர். 


இந்த அறிவிப்பு மீடியாக்களில் வெளியானவுடனேயே தமிழகத்தின் அனைத்து  மாவட்டங்களிலும் தி.மு.க தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி னார்கள். அறிவாலயத்தில் ஒரு தொண்டர், கலைஞரின் காலைத் தொட்டுக் கும்பிட்டு, "உங்க வீரமும் தி.மு.க.வின் வீரமும் வெளியே வந்திடிச்சிங்க தலைவரே...' என்று உணர்ச்சிவசப்பட் டார். கலைஞரின் இந்த அறிவிப்பு வெளியான நேரத்தில், நாடாளுமன்றத் தில் சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங்யாதவ்வுக்கு தீவிரவாதி களுடன் தொடர்பு என காங்கிரசின் பேனி  பிரசாத் வர்மா சொன்ன கருத்துகளால் அமளி துமளி ஏற்பட்டு, எம்.பிக்களெல்லாம் சென்ட்ரல் ஹாலில் கூடியிருந்தார்கள். மத் திய அரசுக்கான ஆதரவை தி.மு.க வாபஸ் வாங்கிவிட்டது  என்ற தகவல் அங்கே வர, நாடாளுமன்றமும் பரபரப்பானது. 

காங்கிரஸ் எம்.பிக்கள் படு அப்செட் டானார்கள். தி.மு.க. எம்.பிக்களுக்கும் அப்போதுதான் விவரமே தெரியவந்தது. அவர்களிடம்  லாலுபிரசாத் யாதவ், "அவ சரப்பட வேண்டாம்னு கலைஞர்கிட்டே சொல்லுங்க. 2 மாதம் கழித்து நானும் உங்க ளோடு வருகிறேன்' என்று சொல்லியிருக் கிறார். எதிர்க்கட்சித்தலைவரான பா.ஜ.க வின் சுஷ்மா ஸ்வராஜ், "90 வயதிலும் தன் னோட இன்னிங்ஸை அசத்தலா ஆடுறாரே கலைஞர்' என்று சொல்ல, அருகிலிருந்த பா.ஜ.க எம்.பிக்கள், "எந்த நேரத்தில் கூட் டணியிலிருந்து விலகுவதுங்கிறதை உங்க தலைவர்கிட்டேதான்  கத்துக்கணும். அடுத்து நீங்க யாரோடு சேருறீங்களோ... அவங்கதான் ஆட்சி  அமைப்பாங்க' என்ற னர். தி.மு.க.வின் முடிவை நாடாளுமன்ற வளாகத்தில் இருந்த இடதுசாரி எம்.பி.க் களும் ஆதரிக்க, மத்திய அரசு கவிழுமா என்ற பரபரப்பு அங்கே பரவ ஆரம்பித்தது. 

தி.மு.க. தன் நிலையை அறிவிக்க இரண்டு  நாளாகும் என நினைத்திருந்தது காங்கிரஸ் மேலிடம். தயாநிதி, கனிமொழி தரப்பினர் மூலமாக காய்கள் நகர்த்தப்பட்ட தால் தங்களுக்கு சாதகமான  நிலையையே கலைஞர் எடுப்பார் என்றும் நம்பியிருந்தது. ஆனால்,  கலைஞரின் வாபஸ் முடிவு காங் கிரஸ் தலைமையை அதிரவைக்க, அடுத்த கட்டம் பற்றி காங்கிரஸ் மேல்மட்டத்தில் விவாதிக்க ஆரம்பித்தனர். 

அந்த நேரத்தில் டி.ஆர்.பாலுவிடம் கலைஞர், "மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுகிறோம்ங்கிற கடி தத்தை ஜனாதிபதிகிட்டே கொடுத்திடுங்க. மத்திய அமைச்சர்களின் ராஜினாமா கடிதத்தை பிரதமர்கிட்டே கொடுத்திடுங்க' என்று சொல்ல, அதற்கான ஏற்பாடுகளில் இறங்கினார் பாலு. அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய மு.க.அழகிரி யோ தன்னிடம் எதுவும் தெரிவிக்காமல் கலைஞர்  எடுத்த முடிவால் படு அப்செட் டில் இருந்தார். தயாநிதி, முரசொலி செல்வத்திடம் பேசினார். 

துரைமுருகனிடம் பேசிய செல்வம், "அழகிரிகிட்டே ஒரு வார்த்தை சொல்லியிருக்க வேண்டாமா? இந்த நேரத்தில் கூட்டணியிலிருந்து வெளியே வருவது சரியா இருக்குமா?' என்று கேட்டிருக்கிறார். தன்னுடைய எதிர்ப்பு நிலையை இப்படிப்பட்ட வழிகளில் வெளிப்படுத்தினால், கலைஞர் தன்னுடைய முடிவை மாற்றுவார் என அழகிரித் தரப்பு எதிர்பார்த்தது. ஆனால் இரவே மத்திய அரசுக்கான ஆதரவை வாபஸ் வாங்கும் கடிதத்தை ஜனாதிபதியிடம் கொடுத்தது, டி.ஆர்.பாலு தலைமையிலான தி.மு.க எம்.பிக்கள் டீம்.

மார்ச் 20 (புதன்கிழமை)

மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த தி.மு.க அமைச்சர்களின் ராஜினாமா கடி தத்தை நேரில் அளிப்பதற்காக பிரதமரிடம் அப்பாயிண்ட் மெண்ட் வாங்கியிருந்தார் டி.ஆர்.பாலு. இதுபற்றி அழ கிரியிடம் அவர் விவரம் சொன்னபோது, "நான் வரமாட் டேன்' என பதில் வந்திருக் கிறது. இணையமைச்சர்களான பழனிமாணிக்கம், ஜெகத்ரட்சகன், காந்திசெல்வன் ஆகி யோரோடு பிரதமரை சந்தித்தார்  டி.ஆர்.பாலு. ராஜி னாமா கடிதங்கள் கொடுக்கப்பட்டன. அழகிரியும்  நெப் போலியனும் 11.30 மணிக்கு வருவார்கள் எனச் சொல்லி தனியாக அப்பாயிண்ட்மெண்ட் வாங்கினார் பாலு. 

அழகிரி தாமதப்படுத்துவது பற்றிய தகவல்  கலைஞ ருக்குத் தெரிவிக்கப்பட அவர் கோபமாகி, "கட்சி எடுத்த முடிவுக்குக் கட்டுப்படலைன்னா அழகிரி, நெப்போலியன் இருவரும் நீக்கப்படுவதா முரசொலியில்  கட்டம் கட்டிட்டு, மீடியாக்கள்கிட்டேயும் சொல்லிடுங்க' எனக் குரலை  உயர்த்தியிருக்கிறார். டெல்லியில் இந்த விவரம் அறிந்த  அழகிரி  நெப்போலியனோடு கிளம்பினார். உடன் வந்த டி.ஆர்.பாலுவை வெளியே காத்திருக்கச் சொல்லி விட்டு, பிரதமரை சந்தித்து இருவரும் தங்கள் ராஜினாமா  கடிதத்தைக் கொடுத்தார்கள். 

""ஈழத்தமிழர் போராட்டத்தில்  நீண்ட வரலாறு கொண்ட கலைஞரின் நெஞ்சத்தில்  கடந்த சில ஆண்டு களாக அழுத்தியிருந்த பாரம், காங்கிரசைக் கை கழுவிய அவரது முடிவின் மூலமாக  நீங்கி, அவருக்கும் தி.மு.க. வுக்கும் நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது. தி.மு.க வினரிடம் புதுத் தெம்பும் விடுதலை உணர்வும் தெரி கிறது. சரியான  நேரத்தில் அரசியல் காயைக் கச்சிதமாக நகர்த்தியிருக்கிறார்  கலைஞர்'' என்கிறார்கள் உடன்பிறப்புகள்.

-காமராஜ்
படங்கள் : ஸ்டாலின்

ad

ad