புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 மார்., 2013




          .நா.மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் நிறை வேறியிருக்கிறது. நிறைவேறிய தீர்மானத்தால் ஈழத் தமிழர்களுக்கு ஒரு அங்குல நன்மையும் ஏற்பட வாய்ப்பே இல்லை என்கிற துயரம் ஒரு புறமிருக்க... இதில் இந்திய அரசு ஆடிய ஆட்டம் தான் துரோகத்தின் உச்சம்.நக்கீரன் 

இது பற்றி நமது டெல்லி ஸோர்ஸ்களிடம் விசாரித்த போது,’’""கடந்த 18-ந்தேதி கலைஞரை சந்தித்து விட்டு கிளம்பிய மத்திய அமைச்சர்கள் மூவரும் சென்னை விமான நிலையத்தில் இருந்த படியே பிரதமர் மன்மோக னையும், சோனியாவையும் தொடர்பு கொண்டு கலைஞ ரின் வலிமையான கோரிக்கையை விவரித்தனர். அத்துடன் நாடாளுமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கூடுதலாக ஒரு டிமாண்டை முன்வைத்ததையும் எடுத்துச்சொன்னார்கள். இந்த விவரங்கள் பிரதமருக்கு பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது. பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனுடன் விவாதித்தார் பிரதமர். வெளியுறவு அதிகாரிகளோடும் விவாதிக்கப்பட்டது. இது ஒருபுறம் நடந்துகொண்டிருக்கும் போதே ஜெனீவாவில் இருக்கும் ஐ.நா.வுக்கான இந்திய பிரதிநிதியை தொடர்புகொண்டு இறுதி வடிவம் பெற்ற தீர்மானத்தை தாக்கல் செய்ய சொல்லுங்கள் என இந்தியா தரப்பில் சொல்லப்பட்டது. அதனால்தான் 20-ந்தேதி தாக்கல் ஆக வேண்டிய இறுதி தீர்மானம் 19-ந்தேதியே தாக்கலானது. காரணம், "இறுதி தீர்மானம் தாக்கல் செய்து விட்டது அமெ ரிக்கா; தாக்கலான பிறகு அதில் கருத்துச் சொல்லலாமே தவிர திருத்த முடியாது. காலம் கடந்து விட்டது என்று சொல்லிவிடலாம்' என்பதற்காகவே அந்த தில்லாலங்கடி வேலையை பார்த்தது இந்தியா. 

அதேசமயம் சென்னையிலிருந்து டெல்லி திரும்பினர் அமைச்சர்கள். அந்த நள்ளிரவிலும் விவாதம் நடந்தது. அந்த விவாதத்தில், "தி.மு.க. வின் கோரிக்கை கடுமையாக இருக்கிறது. அப்படிப்பட்ட திருத்தம் கொண்டு வருவது சாத்தியமில்லை' என்ற முடிவுக்கு வந்திருக் கிறார்கள்.
ஆனால், மறுநாள் கூட்டணியை விட்டு விலகுவதாக ஒரு அதிரடி அஸ்திரத்தை கலைஞர் எடுக்கவும்தான் ஆடிப்போனது காங்கிரஸ். இதனை சோனியா, மன்மோகன், ப.சிதம்பரம் யாருமே எதிர்பார்க்கவில்லை. இதற்குப் பிறகு மேலும் தி.மு.க.வையும் இந்திய அரசியல்வாதிகளையும் நம்ப வைப்பதற்காக ஒரு நாடகத்தை அரங் கேற்றியது காங்கிரஸ். அதாவது, தீர்மானத்தை தாக்கல் செய்யுங் கள் என முதல் நாள் இரவே அமெரிக்காவுக்கு ஐடியா கொடுத்துவிட்டு, இனி திருத்தம் செய்ய முடி யாது என தெரிந்திருந்தும் "திருத்தம் செய் வதற்காக ஐ.நா.வுக்கான இந்திய பிரதிநிதி டெல்லிக்கு அழைக்கப் பட்டிருக்கிறார்' என ப.சிதம்பரம் அறி வித்தார். 

இதன் மூலம் தி.மு.க.வின் கோரிக்கைகள் ஆராயப்படுகிறது என்கிற தோற்றத்தை உருவாக்கினார் ப.சி. உண்மையாகவே திருத்தம் கொண்டுவர இந்தியா நினைத் திருக்குமானால் என்னென்ன திருத்தம் கொண்டு வர வேண்டுமென்பதை ஈ-மெயில் மூலமாகவே தனது பிரதிநிதியான திலீப் சின்ஹாவுக்கு அறிவுறுத்த முடியும். இதற்காக அவரை டெல்லிக்கு வரவழைக்கத் தேவையில்லை. அதனால், அடிப்படையில் இலங்கைக்கு எதிராக திருத்தம் செய்ய இந்தியா விரும்பவில்லை என்பதுதான் உண்மை''’என்று சுட்டிக்காட்டினார்கள்.

மேலும் நம்மிடம் பேசிய டெல்லி அதிகாரிகள்,’’""டெல்லி வந்த திலீப் சின்ஹாவுடன் பிரதமர் ஆலோசனை நடத்தினார். இதில் ப.சிதம்பரம், சல்மான்குர்ஷித், சிவசங்கர் மேனன், வெளியுறவு செயலாளர் ரஞ்சன் மத்தாய் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில், "இனப்படுகொலை என்றோ போர்க்குற்றம் என்றோ சேர்க்க முடியாது. அது நமது வெளியுறவுக்கொள்கைக்கு எதிரானது' என்று விவரித்துள்ளனர் சின்ஹாவும் ரஞ்சன்மத்தாயும். அதன் பிறகு இந்திய தரப்பில் என்ன வலியுறுத்துவது என விவாதிக்கப்பட்டது. அப்போது, "உலக நாடுகள் ஏற்கும் வகையில் சுயாதீனமான நம்பகத்தன்மை கொண்ட விசாரணை வேண்டும், அனைத்து மக்களும் சம உரிமையுடன் வாழ இலங்கை நடவடிக்கை எடுக்க வேண்டும், 13-வது சட்ட திருத்தத்தை அமல் படுத்த வேண்டும்' என்பன போன்று இலங்கையை மென்மையாக அறிவுறுத்துவது போல வாசகங்களை தேர்ந்தெடுத்து பேச முடிவெடுக்கப்பட்டது''’என்கின்றனர்.

அதேபோலவே, ஓட்டெடுப்புக்கு விடுவதற்கு முன்பு இறுதி தீர்மானத்தின் மீது பல்வேறு நாடுகள் ஆதரித்தும் எதிர்த்தும் பேசின. விவாதத்தில் கலந்துகொண்ட இந்தியா, டெல்லியில் விவாதித்ததைப் போலவே பேசியது.. "தீர்மானத்தை திருத்த வேண்டும்' என்று ஒரு வார்த்தைகூட பேசவில்லை. 

இதுகுறித்து ஜெனீவாவிலிருந்து நம்மிடம் பேசிய நார்வே ஈழத் தமிழர் அவையின் செய்தி தொடர்பாளர் விஜய்அசோ கன்,’’""21-ந்தேதி மதியமும் தீர் மானத்தின் மீது விவாதம் நடத்தப் பட்டபோது இந்திய தரப்பி லிருந்து தீர்மானத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டுமென்று ஒரு வார்த்தைகூட பேசவில்லை. மாறாக, உலக நாடுகள் ஏற்கும் வகையில் நம்பகமான சுயாதீன மான விசாரணை வேண்டும் என்று மட்டும் சொல்லி விட்டு மற்றபடி இலங்கைக்கு அட்வைஸ் செய்வது போல, "நடவடிக்கை எடுக்க வேண்டும், செயல்படுத்த வேண்டும்' என்கிற பாணியிலேயே பேசிவிட்டு அமைதியாகி விட்டது இந்தியா.

மேலும் இறுதிக்கட்ட போரின் போது நடந்தவைகள் குறித்து பேசாமல் போருக்குப் பிறகான நிலையை மட்டுமே பேசியது. இந்தியா மட்டுமல்ல, சர்வதேச நாடுகளில் ஒன்றுகூட இலங்கையில் நடந்திருப்பது இனப்படுகொலை என்பதையோ போர்க்குற்றம் என் பதையோ தீர்மானத்தில் கொண்டு வர முயற்சிக்கவில்லை. தீர்மானத் தை ஆதரித்து 25 நாடுகளும், எதிர்த்து 13 நாடுகளும் வாக் களித்தன. 8 நாடுகள் நடுநிலை வகித்தன. இந்தியா உட்பட 25 நாடுகளின் ஆதரவில் தீர்மானம் நிறைவேறியது. நிறைவேறிய இந்த தீர்மானத்தால் ஒரு நன்மையும் இல்லை. இனப்படுகொலைக்கான நீதியைத்தேடி இன்னும் நாம் வெகு தூரம் போக வேண்டியதிருக்கிறது; போராட  வேண்டியதுமிருக் கிறது''’என்கிறார். பசுமைத்தாயகம் சார்பில் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் விவாதத்தில் கலந்து கொண்ட வழக்கறிஞர் கே.பாலுவை தொடர்பு கொண்டு பேசிய போது,’’""இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானம் இந்தியாவின் நெருக்கடியால் 4 முறை திருத்தப்பட்டிருக்கிறது. குறிப்பாக, போர்க்குற்றங்கள் குறித்து சுதந்திரமான சர்வதேச விசாரணை வேண்டும், போரின் போது சர்வதேச சட்டவிதிகள் மீறப்பட்டிருப்பது குறித்து சர்வதேச விசாரணை வேண்டும் என்கிற மனித உரிமை ஆணையத்தின் வலியுறுத்தல்கள் இறுதி தீர்மானத்தில் முற்றிலுமாக நீக்கப்பட்டன. 

ஐ.நா.பார்வையாளர்கள் தங்கு தடையின்றி இலங்கையில் பயணம் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டிருந்ததும் நீக்கப் பட்டது. அதிகாரப் பகிர்வு விவகாரத்தில் இலங்கை அரசு தோற்றுவிட்டதாக சுட்டிக்காட்டப்பட்டி ருந்த விவகாரமும் அறவே அகற்றப்பட்டுவிட்டன. சகல மனித உரிமைகள், மக்களின் சுதந்திரம் என் பனவற்றை உறுதி செய்வது இலங்கை அரசாங்கத் தின் பொறுப்பாகும் என்ற வாசகத்திலிருந்து ‘இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பாகும்’ என்பது அகற்றப்பட்டு அதற்குப் பதிலாக ஒவ்வொரு அரசினதும் நோக்கமாகும் என்று சேர்க்கப்பட் டுள்ளது. இப்படி நிறைய திருத்தங்கள் இலங்கைக்கு ஆதரவாக செய்யப்பட்டுள் ளன. பல்வேறு நெருக்கடி களை கொடுத்து தீர்மா னத்தை ஒட்டுமொத்தமாக நீர்த்துப்போக வைத்து இலங்கைக்கு சாதகமான வடிவத்தைக்கொண்டு வந்துவிட்டு அதன்பிறகே இறுதி தீர்மானத்தை தாக் கல் செய்ய அனுமதித் துள்ளது இந்திய அரசு.

இவ்வளவு நடந்தும் இலங்கையுடனான தூதரக உறவை முறித்துக்கொள்ள முடியாது என்று பகிரங்க மாக கவுன்சிலில் அறிவித் தது இந்தியா. தமிழகத் தின் உணர்வுகளை கவ னத்தில் கொள்வோம், தீர்மானத்தை திருத்த இந்தியா முயற்சிக்கும் என்றெல்லாம் கதை யளந்து ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோனியா, மன்மோகன், ப.சிதம்பரம் வகையறாக்கள் ஏமாற்றிவிட்டனர்''’’ என்கிறார் பாலு.

அம்னெஸ்டி இண்டர்நேசனலின் இந்திய தலைமை இயக்குநர் அனந்தபத்மநாபன், ""இலங் கைக்கு எதிரான தீர்மானம் மிக மிக பலவீனமான தன்மையை அடைய இந்தியாவின் தலையீடே கார ணம். இலங்கைக்கு எதிராக தீர்மானத்தை வலுமை யாக்கும் திருத்தங்களை செய்வதற்கு பதிலாக ஆதர வான திருத்தங்களை செய்திருக்கிறது''’’என்கிறார்.

""அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட மேற்குலக நாடுகள் அனைத்தும்... இலங்கையில் தங்களுக்குச் சாதகமான ஆட்சி மாற்றம் கொண்டு வருவதற்கு நீண்ட கால செயல் திட்டத்தை வகுத்து வைத்திருக்கின்றன. அதனை நோக்கிச்செல்லும் வழிமுறைகளுக்குத்தான் தற்போது நிறைவேற்றப் பட்ட தீர்மானம் உதவும்'' என்கிறார்கள் சர்வதேச மனித உரிமை ஆர்வலர்கள். 

தீர்மானம் குறித்து கருத்து தெரிவித்துள்ள கலைஞர், ""உருக்குலைந்த தீர்மானம். நாம் வலியுறுத்தியவைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. நீர்த்துப் போக வைக்கப்பட்டுள்ளது. திருப்தியளிக்க வில்லை தீர்மானம்'' என்கிறார். 

இலங்கைக்கு எதிராக வலுவான திருத்தங் களுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என தமிழகத்திலுள்ள அரசியல் கட்சிகள், அமைப்புகள், மாணவர்கள், வழக்கறிஞர்கள், வியாபாரிகள், மருத்துவர்கள் என அனைத்துத் தரப்பினரும் போராடினர். ஆனால், அனைவரையும் ஏமாற்றிவிட்டனர்.

-ஆர்.இளையசெல்வன்


 தீர்மானம் என்ன?

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தில் சொல் லப்பட்டிருப்பது என்ன? தீர்மானத்தில், "நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற இலங்கை கவனம் செலுத்த வேண்டும். மறுவாழ்வு பணிகளில் இலங்கை அரசு முன்னேற்றம் கண்டிருப் பதை வரவேற்கிறோம். மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சி தொடர்பான கவலைகளை எதிர் கொள்ள எல்.எல்.ஆர்.சி. பரிந்துரைகளையும் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் பரிந்துரைகளையும் இலங்கை மேற்கொள்ள ஊக்கப்படுத்துகிறோம். இந்தப் பணிகளுக்காக உதவி செய்ய அமெரிக்கா தயாராக இருக்கிறது. மேலும் இதனை நடைமுறைப்படுத்த ஐ.நா. மனித உரிமை ஆணையம் தொழில்நுட்ப பங்களிப்பை வழங்க வேண்டும். சர்வதேச சமூகமானது இலங்கை எதிர்கொண்டுள்ள சவால்களுக்கு உதவ வேண்டும். மக்கள் நலன் சார்ந்த அமைப்புகளை இலங்கை அரசு வலுப்படுத்த வலியுறுத்தப்படும்!'' என்று சொல்லப்பட்டிருக்கிறது.

ad

ad