புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 மார்., 2013


யுத்தக் குற்றமும் கறியும்!- ஈழம் –சாட்சியமற்ற போரின் சாட்சியங்கள்” என்ற நூலின் ஆசிரியர் பிரான்சிஸ் ஹாரிசன்
ஆயிரக்கணக்கில் மக்களைப் பலியெடுத்த மிகவும் ஆக்ரோஷமான இனப் பிரச்சினையைப் பற்றிய புத்தகம் ஒன்றை வெளியிடுதல் என்பது அமைதியான வாழ்க்கையொன்றைத் தேடும் பாதையல்ல.
இலங்கையர்கள் அடிக்கடி பார்க்கும் இணையத்தளங்களில் இருக்கும் “உங்கள் கருத்துக்கள்” என்ற பகுதிகளை ஒருமுறை சென்று பார்த்தால் அவர்கள் எவ்வாறு கீழ்த்தரமான, இனரீதியான இழிவுபடுத்தல் மற்றும் தூஷண வார்த்தைப் பிரயோகங்கள் போன்றவற்றில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று புரியும். இது இலங்கைப் பிரச்சினை தொடர்பில் உணர்வுகள் இன்னமும் கொதிப்படைந்த நிலையில் இருப்பதனையே எடுத்துக்காட்டுகிறது.
இலங்கை தொடர்பாக பத்திகள் எழுதும் ஏனையோரைப் போலவே நானும் எனக்குரிய பங்கிற்கு இரண்டு சாராரிடமிருந்தும் இழிவு படுத்தலுக்கு உள்ளானேன். நான் கொலைக்களத்தில் கொல்லப்பட்ட குழந்தைகளின் குருதியில் மூழ்கியிருப்பதாகவும், கொல்லப்பட்டோரை வைத்துப் பணம் சம்பாதிப்பதாகவும் மறுபுறத்தில் ஒரு “வெள்ளைப் புலி” என்றும், மனநோயால் பாதிக்கப்பட்ட பொய்காரி என்றும் தூஷிக்கப்பட்டிருக்கிறேன்.
ஆனால் உலகளாவிய ரீதியில் வாசகர்கள் எனக்கு அனுப்பும் பிரத்தியேக செய்திகள் என்ன என்பது பொதுமக்களிற்குத் தென்படாத விடயம். ஒரு சில தினங்களுக்கு ஒருமுறை எங்காவதிருந்து ஒரு இலங்கைப் பிரஜையிடமிருந்து வாழ்த்துச் செய்தி ஒன்று எனக்குக் கிடைக்கிறது. இவர்களில் அநேகமானோர் தமிழர்கள், சிலர் சிங்களவர்கள். சிலர் நான் நீண்ட ஆயுளுடன் வாழவேண்டுமென்று வாழ்த்தும் போது வேறு சிலர் நான் ஆயுளுள்ளவரை தங்கள் இதயத்தில் இடம்பிடித்திருப்பேன் என்று ஆசீர்வதிக்கிறார்கள்.
எனது புத்தக வெளியீட்டு நிகழ்வுகளில் சந்திக்கும் ஆண்களும் பெண்களும் என்னை ஆரத்தழுவி ஆராதிக்கிறார்கள். வேறு சிலர் தாம் எனது புத்தகத்தினை வாங்கி வைத்திருப்பதாகவும், ஆனால் முன்னர் இடம்பெற்ற யுத்தத்தின்போது அகதிகளாகத் தாங்கள் பட்ட வேதனைகள் ஆறாத ரணமாக அவர்களை வாட்டிவதைத்துக் கொண்டிருப்பதால், அந்தப் புத்தகத்தை வாசிக்கும் துணிவு தங்களுக்கு இல்லை என்று தெரிவிக்கிறார்கள்.
நான் சில சமயங்களில், இவர்களின் இந்தச் செய்திகளையும், ஆசிகளையும் இந்தப் புத்தகத்தில் வரும் உண்மையான கதாபாத்திரங்களுடன் பகிர்ந்து கொள்வதுண்டு. ஏனெனில் இந்தப் புகழ்ச்சிக்கும், வாழ்த்துக்கும் உண்மையாக உரித்துடையவர்கள் அவர்களேயொழிய, நானல்ல. இடம்பெற்ற பேரனர்த்தத்திற்குச் சாட்சியாக இருக்கும் தங்களின் தலையாய பொறுப்பை உணர்ந்து அவர்கள் பலத்த சவால்களையும், ஆபத்துக்களையும் துணிச்சலுடன் எதிர்கொண்டு என்னுடன் மனம்விட்டுப் பேசியிருக்கிறார்கள்.
“ஈழம் – சாட்சியமற்ற போரின் சாட்சியங்கள்” நூலில் வரும் வைத்தியரின் அசாத்திய துணிச்சலை மெச்சுகின்ற பெருவாரியான வாசகர்கள் அவரை வானளாவப் புகழுகிறார்கள். கனடாவைச் சேர்ந்த தமிழ் அமைப்பொன்று அவருக்கு “வாழ்நாள் சாதனையாளர்” என்ற விருதினை வழங்கிக் கௌரவித்திருக்கிறது. இது தன்னுயிரைத் துச்சமென மதித்துப் பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிரைக் காப்பாற்றியதற்காக முதல் முதலாக அவருக்குக் கிடைத்த பகிரங்க அங்கீகாரமாகும்.
அவரது சுயபாதுகாப்புக் கருதி அந்த வைத்தியர் அநாமதேயமாக இருக்கவேண்டிய ஒரு சூழ்நிலை காரணமாக அந்த விருது லண்டனில் என்னிடம் கையளிக்கப்பட்டது. அதனைப் பின்னர் நான் அவரிற்கு அனுப்பி வைத்தேன். துரதிஷ்டவசமாக அந்த விருது கண்ணாடியினால் செய்யப்பட்டிருந்த போதிலும், அதிஷ்டவசமாக அது பாதுகாப்பாக அவரிடம் சென்றடைந்துவிட்டது.
கடந்த வாரம், தலை நரைத்த தமிழ்ப் பெரியவர் ஒருவர் எனக்கருகில் வந்து இந்தப் புத்தகம் எவ்வாறு தன்னை இரண்டு நாட்களாக ஆட்கொண்டிருந்தது என்றும் ஒவ்வொரு சம்பவங்களும் இரத்தத்தை உறையவைப்பதாக இருந்தது என்றும் கூறினார். “எனக்கு இப்போது 70 வயது ஆனால், இந்தப் புத்தகத்தில் ஒவ்வொரு சம்பவங்களையும் அழுகையுடன் தான் வாசித்தேன்,” என்று பெருமையுடன் கூறினார். இன்னொரு நபர் மெல்போனில் இருந்து எனது முகப்புத்தகத்தினூடாக ஒரு மடலை அனுப்பியிருந்தார்.
“அது பனம்பழமல்ல, ஒரு குழந்தையின் தலை என்ற வரியை வாசித்தபோது என்னை அறியாமல் அழுதுவிட்டேன். நான் அப்போது ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தேன். ஆனாலும் நான் அதனை ஒரு அவமானமாகக் கருதவில்லை. இதேபோலவே, தனது தாயார் குண்டடிபட்டு இறந்திருப்பதை அறியாத பச்சிளங்குழந்தை அவளிடம் பால்குடித்துக் கொண்டிருந்தது என்ற வாக்கியத்தை வாசித்தபோதும் நான் அழுதுவிட்டேன். உங்களால் மட்டும் எவ்வாறு உணர்ச்சிகளைத் தக்கவைத்துக்கொண்டு இந்தப் புத்தகத்தை முழுமைசெய்ய முடிந்தது,” என்று அவர் அந்த முகப்புத்தக மடலில் கேட்டு எழுதியிருக்கிறார்.
இலங்கையர்கள் மட்டுமல்ல, அயல்நாட்டிலுள்ள இந்தியாவிலிருந்துகூட தமிழர்கள் தாம் இலங்கையில் என்ன நடந்துகொண்டிருந்தது என்பது பற்றி அதிக அக்கறை கொள்ளாமல் இருந்துவிட்டோமே என்பதையெண்ணி வெட்கித் தலைகுனிவதாக எனக்கு எழுதியிருக்கிறார்கள். தென்னிந்தியாவில் இருந்து ஒரு பட்டதாரி, தான் பல்கலைக்கழகத்தில் இந்த நூல் குறித்த கலந்துரையாடலொன்றை ஒழுங்கு செய்திருந்ததாகவும், அதன்பின்னர் இதனை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லும் நோக்கில் மாணவர்களை ஏற்பாடு செய்ததாகவும் தெரிவித்தார். அந்த மாணவர்கள் இந்த நூலை இலங்கை ஏதிலிகள் தங்க வைக்கப்பட்டிருக்கும் முகாம்களுக்கும் எடுத்துச் சென்று அவர்களிடம் அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். “அங்கிருந்த ஏதிலி ஒருவர் இந்த நூலையும் அதிலுள்ள வரைபடங்களையும் கண்டதும், அவரது முகத்தில் ஒருவித பூரிப்பைக் கண்டேன். அந்த நூலை எடுத்துத் தனது மனைவிக்கு இலங்கையின் விபரங்களை விலாவாரியாக, குறிப்பாக வடக்கின் செழுமை குறித்து விளக்கமளிக்கத் தொடங்கினான்,” என்று அந்தப் பட்டதாரி என்னிடம் கூறினான்.
முன்னர் அகதியாக இருந்து தற்போது லண்டனில் வசிக்கும் தமிழரொருவர், இந்த நூலின் சுமார் 100 தமிழ்ப் பிரதிகளை இந்தியாவின் தமிழ் நாடு மாநிலத்திலுள்ள நூலகங்களிற்கு அன்பளிப்புச் செய்திருக்கிறார். இந்த நபர் தற்போது, தனது உறவினர் மற்றும் நண்பரொருவருடன் சேர்ந்து இந்த நூலின் 90 பிரதிகளை ஐ.நா வின் இராஜதந்திரிகளுக்கு அனுப்பிவைத்துக் கொண்டிருக்கிறார். கனடாவிலும், லண்டனிலும் வசிக்கும் ஏனைய சிலர் தாம் இந்த நூலின் பிரதிகளை அரசாங்கத்தின் அமைச்சர்கள் குழாமிற்கும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பிவைத்து அவர்களை அதனை வாசிக்கும்படி வலியுறுத்தியிருக்கிறார்கள்.
Still Counting the Dead வெளியிடப்பட்ட மூன்றாவது தினம், லண்டனில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஒரு தமிழரைச் சந்தித்தேன். இவர் அருகிலுள்ள புத்தகசாலை ஒன்றிற்குச் சென்று எனது கையொப்பமிடப்பட்ட சுமார் 50 பிரதிகள் தேவைப்படுவதாகத் தனக்குதெரிந்த ஆங்கிலத்தில் கேட்டிருக்கிறார். அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த பெண்மணி இவர் இந்த நூலை வியாபார நோக்கம் கருதிக் கொள்வனவு செய்ய முயற்சிக்கிறார் என்றும், விற்கப்படாத பிரதிகளை மீளளித்து பணத்தை மீளப்பெறும் நோக்கிலேயே கொள்வனவு செய்கிறார் என்றும் தவறாக விளங்கிக்கொண்டார். ஆனால், நல்லுள்ளம் படைத்த ஒருவர் தலையீட்டால் விடயம் தெளிவுபடுத்தப்பட்டது. பின்னர் தனது வங்கிக் கடனட்டையின் உதவியுடன் சுமார் 50 பிரதிகளைக் கொள்வனவு செய்த அந்த நபர், தமிழர்கள் செறிவாக வசிக்கும் பிரதேசங்களில் வீடு வீடாகக் காவிச்சென்று எனது இந்த நூலை வாங்குமாறு வேண்டியிருக்கிறார். இதனை அவர் இலாப நோக்கமேதுமின்றி, ஒரு சமூக சேவையாகவே செய்திருக்கிறார்.
எனது நூலின் ஆங்கிலப் பதிப்பு இலங்கையின் தலைநகர் கொழும்பிலுள்ள புத்தகசாலைகளில் வெளிப்படையாகவே விற்பனை செய்யப்படுகின்றபோதிலும், வடக்கில் வாழும் தமிழர்கள் அதனைக் கொள்வனவு செய்து தம்முடன் எடுத்துச் செல்ல மிகவும் அச்சப்படுவதாக நான் அறிகிறேன். ஏனெனில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்குச் செல்லும் வழியில் படையினரின் சோதனை நடவடிக்கைகளுக்கு முகம்கொடுக்க வேண்டியிருப்பதால், அவர்களுக்கு இருக்கக்கூடிய இந்த அச்சம் நியாயமானதே. ஆனாலும் அங்குள்ளவர்கள் இதனை வாசித்திருக்கிறார்கள் என்பதுடன் இதுகுறித்துக் கலந்துரையாடியும் இருக்கிறார்கள். இதனது லண்டன் வெளியீட்டீன் போது, யாழ்ப்பாணத்திலுள்ள தமது உறவினர்களுக்கு அனுப்பி வைக்கவென, பலர் ஒன்றுக்கு மேற்பட்ட பிரதிகளைக் கொள்வனவு செய்வதனை அவதானித்தேன். சிங்களவர்கள் உள்ளிட்ட இலங்கையர்கள் பலர் என்னைப் பிரத்தியேகமாக அணுகி, கொடிய யுத்தத்தின் இறுதிக் காலகட்டத்தில் இடம்பெற்ற சம்பவங்களை வெளிக்கொணர்ந்திருப்பது மிகவும் அளப்பரிய விடயமென்று எனக்கு நன்றி நவின்றார்கள்.
இலக்கிய இதிகாசங்கள், கட்டுக்கதைகள் போன்றவற்றை உள்ளடக்கிய நூல்களைப் பிரசுரம் செய்வதில் அதிக அனுபவம்கொண்ட எனது பிரித்தானிய வெளியீட்டாளர்கள், இந்தப் புத்தக்தின் மவுசு மற்றும் அது கிளப்பியிருக்கும் உணர்வலைகள் குறித்து ஆச்சரியம் தெரிவித்தார்கள். லண்டனில் இந்த நூல் முதன்முறையாக வெளியிடப்படவிருந்த நிகழ்விற்குரிய அனுமதிச் சீட்டுக்கள் முன்கூட்டியே விற்பனை செய்யப்பட்டமையையும், சுமார் 250 பேர் அரங்கத்தை நிறைத்திருந்ததையும் கண்டு அவர்கள் வாயடைத்துப் போனார்கள். எழுத்தாளருக்குரிய விலைக் கழிவுடன் சுமார் 100 பிரதிகளைத் தொகையாக இப்போதெல்லாம் நான் அவர்களிடம் கொள்வனவு செய்யும்போது அவர்கள் வியப்படைவதில்லை.
ஒவ்வொருநாளும் யுத்த குற்றங்கள் குறித்து எழுதுவதும், உரையாற்றுவதும் கடினமானது மட்டுமல்ல, உயிரை உருக்கும் ஒரு கருமமாகும். ஆனாலும் யுத்தத்தினை நேரடியாக அனுபவித்தவர்களின் வேதனையோடு ஒப்பிடும்போது, இதனையொரு பொருட்டாகக் கருதவே முடியாது. இதன்மூலம் எனக்குக் கிடைக்கும் சில சௌகரியங்களையும் தட்டிக்கழிக்க முடியாது. சாதாரண மக்களிடமிருந்து கிடைக்கும் தூயஅன்பும், அரவணைப்புமே எனக்குக் கிடைக்கும் அந்த மிகப்பெரிய சௌகரியங்களாகும். இப்போது ஆஸ்திரேலியாவின் அடலெயிட் புத்தகக் கண்காட்சி விழாவிற்காக இங்கு வந்திருக்கும் நான், இந்த நிகழ்ச்சி முடிவடைந்ததும், இங்குள்ள சில இலங்கைத் தமிழர்களுடன் கதைக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அடுத்த ஒரு சில விநாடிகளுக்குள்ளேயே அவர்கள் எனக்காக இராப்போசன விருந்தொன்றினையும் ஏற்பாடு செய்துவிட்டார்கள். எனது ஆஸ்திரேலியாவின் பிரசுரிப்பாளரால் இதனை நம்பவே முடியவில்லை. இவ்வாறான நிகழ்வுகள் என்னைப் பொறுத்தவரை மிகவும் சர்வசாதாரணம் என்று அவருக்கு விளக்கமளிக்க முற்பட்டேன், ஆனால் இவ்வாறான வரவேற்பும், மரியாதையும் வேறெந்த நூலாசிரியருக்கும் கிடைத்ததை இதுவரை தான் காணவில்லை என்றாள் எனது நூலின் ஆஸ்திரேலியப் பிரசுரிப்பாளர்.

ad

ad