புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 நவ., 2014

சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு

பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜையின்போது, லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் திரண்டு சுவாமி அய்யப்பனை தரிசனம் செய்வார்கள்.

இந்த ஆண்டு வருகிற டிசம்பர் மாதம் 27–ந்தேதி மண்டல பூஜை நடைபெறுகிறது. இதையொட்டி இன்று மாலை 5.30 மணிக்கு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. தந்தரி கண்டரரு ராஜீவரரு தலைமையில் மேல்சாந்தி நாராயணன் நம்பூதிரி கோவில் நடையை திறந்து வைக்கிறார்.

இன்று கோவில் தூய்மை பணியும் சுவாமி அய்யப்பனுக்கு தீபாராதனையும் மட்டும் நடைபெறும். அதை தொடர்ந்து இரவு 7 மணிக்கு சபரிமலை அய்யப்பன் கோவில் புதிய மேல்சாந்தியாக கிருஷ்ணதாஸ் நம்பூதிரியும், மாளிகைபுரத்து அம்மன் கோவில் மேல்சாந்தியாக கேசவன் நம்பூதிரியும் பதவி ஏற்கிறார்கள். அவர்களுக்கு தந்திரி கண்டரரு ராஜீவரரு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

நாளை அதிகாலை 4 மணிக்கு சுவாமி அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு அய்யப்பனுக்கு நெய் அபிஷேகம் உள்பட அனைத்து பூஜைகளும் நடைபெறும். 41 நாட்களுக்கு இந்த பூஜைகள் நடைபெறும்.

கோவில் நடை திறப்பையொட்டி இன்று காலை முதலே இருமுடி கட்டிய பக்தர்கள் சபரிமலையில் குவியத் தொடங்கி உள்ளனர். பக்தர்கள் வசதிக்காக தேவஸ்தானம் போர்டு பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது.

மேலும் அவர்களுக்கு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது.

* புனித நதியான பம்பையின் தூய்மையை பாதுகாக்க வேண்டும். புனித நீராடிய பிறகு ஆடைகளை ஆற்றில் போட்டு செல்லக்கூடாது.

* பத்மதீர்த்தத்தில் நீராடும் பக்தர்கள் சோப்பு, எண்ணை, சாம்பு போன்றவற்றை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது.

* வனப்பகுதியில் உணவுக்காக தீ மூட்டும்போது தீயை முழுவதுமாக அணைத்து விட்டதை உறுதி செய்து கொண்ட பிறகுதான் பக்தர்கள் செல்ல வேண்டும்.

* விதிமுறைகளை மீறும் பக்தர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் தேவஸ்தானம் போர்டு திட்டமிட்டுள்ளது.

பக்தர்கள் ஆன்லைன் மூலம் திருவிதாங்கூர் தேவஸ்தானம் போர்டில் பதிவு செய்தால் அரவணை, அப்பம், விபூதி பிரசாதம் தபால் மூலம் அனுப்பப்படும்.

மேலும் கேரள அரசு பஸ்கள் திருவனந்தபுரத்தில் இருந்து இலவுங்கல், சாலக்காயம், பம்பா, நீலிமலை, சுவாமி அய்யப்பன் சாலை, புல்மேடு போன்ற இடங்களுக்கு அதிகளவில் இயக்கப்படுகிறது.

சபரிமலை கோவிலுக்கு ஏற்கனவே தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் உள்ளதால் அங்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், சபரிமலை வரும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படும் என்றும், கேரள உள்துறை மந்திரி ரமேஷ் சென்னிதலா தெரிவித்துள்ளார்.

ad

ad