புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

7 மே, 2015

பிளஸ் 2 தேர்வில் திருப்பூர் பவித்ரா, கோவை நிவேதா முதலிடம்!
 பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாநில அளவில் திருப்பூரை சேர்ந்த மாணவி பவித்ரா, கோவையை சேர்ந்த மாணவி நிவேதா
ஆகியோர் 1200க்கு 1192 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர்.

பிளஸ் 2 தேர்வை தமிழகம், புதுச்சேரியில் 8 லட்சத்து 86 ஆயிரம் மாணவர்-மாணவியர்கள் எழுதினர். கடந்த மார்ச் 5 ஆம் தேதி தொடங்கி, 31 ஆம் தேதி வரையில் நடைபெற்ற இந்த தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது.
பிளஸ் 2 தேர்வு முடிவுகளை அரசு தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜன்,  சென்னையில் இன்று வெளியிட்டார். அப்போது அவர், தமிழகத்தில் 90.6 சதவீதம் பேர் தேர்வு பெற்றுள்ளனர். மாணவிகள் 93.4 சதவீதமும், மாணவர்கள் 87.7 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர் என தெரிவித்தார்.

இதில், திருப்பூர் மாணவி பவித்ரா (விகாஸ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி) மற்றும் கோவையை சேர்ந்த மாணவி நிவேதா (சவுடேஸ்வரி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி) ஆகியோர் 1,192 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்து உள்ளனர்.
விக்னேஸ்வரன் (ஆதர்ஷ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஈரோடு), பிரவீண் (எஸ்.கே.வி. மேல்நிலைப் பள்ளி, நாமக்கல்), சரண்ராம் (எஸ்.எஸ்.எம்.லக்ஷ்மியம்மாள்  மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, நாமக்கல்) மற்றும் வித்யா வர்ஷினி (சௌவுடாம்பிகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, திருச்சி) ஆகிய மாணவர்கள் 1190 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் 2 ஆம் இடத்தை 4 மாணவர்கள் பிடித்து உள்ளனர்.
நாமக்கல் டிரினிட்டி அகாடமிக் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி பாரதி 1189 மதிப்பெண்கள் எடுத்து 3 ஆம் இடம் பிடித்துள்ளார்.
பிளஸ் 2 தேர்வில் இயற்பியல் பாடத்தில்  124 மாணவர்கள் 200க்கு 200 எடுத்துள்ளனர். வேதியியல் பாடத்தில் 1049 மாணவர்கள்  200க்கு 200 எடுத்துள்ளனர். உயிரியல் பாடப்பிரிவில் 387 மாணவர்கள் 200க்கு 200 எடுத்துள்ளனர்.  தாவரவியல் பாடப்பிரிவில் 75 மாணவர்கள் 200க்கு 200 எடுத்துள்ளனர். 

மாணவர்கள் தங்களது பதிவு எண், பிறந்த தேதியைப் பதிவு செய்து தேர்வு முடிவுகளை இணையதளங்களில் அறிந்துகொள்ள www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge3.tn.nic.in. என்ற இணையதள முகவரி அறிவிக்கப்பட்டு இருந்தது. அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் உள்ள தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய, கிளை நூலகங்களிலும் கட்டணம் இல்லாமல் முடிவுகளை அறிந்துகொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. மேலும், மாணவர்கள் தங்களது பள்ளிகளிலேயே தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளவும் ஏற்பாடுகளை பள்ளிக்கல்வி துறை செய்திருந்தது.

மேலும், இணையதளங்களில் இருந்து தலைமை ஆசிரியர்கள் மூலம் பதிவிறக்கம் செய்த தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை மே 14 முதல் மாணவர்கள் பெற்றுக்கொள்ளலாம். மே 18 முதல் மாணவர்கள் தாங்களாகவே இந்த மதிப்பெண் சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மாணவர்கள், விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு வருகின்ற மே 8 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை பள்ளிகளின் மூலமாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. சிறப்புத் துணைத் தேர்வுக்கு மே 15 முதல் 20 வரை விண்ணப்பிக்கலாம்.

விடைத்தாள் நகல் பெற மொழி பாடங்களுக்கு தலா 550 ரூபாயும், பிற பாடங்களுக்கு தலா 275 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மறு கூட்டல் செய்வதற்கு மொழி பாடங்களுக்கு தலா 305 ரூபாயும், பிற பாடங்களுக்கு தலா 205 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த தேர்வில் தோல்வியடையும் மாணவர்களுக்கான சிறப்பு துணைத் தேர்வுகள் வருகின்ற ஜூன் மாத இறுதியில் நடைபெற உள்ளது. இதற்காக வருகின்ற 15 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை தோல்வியடையும் மாணவர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம் என அரசு தேர்வு இயக்குனர் தெரிவித்து உள்ளார்.