புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 மே, 2015

இன்றோ அல்லது நாளையோ சம்பூர் விடுவிக்கப்பட்ட செய்தியை அறிவீர்கள்!- இரா.சம்பந்தன்


இன்றைய தினம் சம்பூர் மீள்குடியேற்றம் சம்பந்தமாக ஜனாதிபதியுடன் உயர்மட்டப் பேச்சுவார்த்தையொன்று நடைபெறவுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையின் போது முடிவொன்றை காண்பேன் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
சம்பூர் மீள்குடியேற்றம் சம்பந்தமாக பட்டித்திடல் கிளிவெட்டி முகாம்களில் தங்கியிருக்கும் சம்பூர் மக்களுடனான விஷேட சந்திப்பொன்று நேற்றைய தினம் இடம்பெற்றது. இச்சந்திப்பின் போதே சம்பந்தன்
மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மக்கள் மத்தியில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
சம்பூர் மக்களின் மீள்குடியேற்றப் போராட்டம் இறுதிக் கட்டத்துக்கு வந்துள்ளது. இது எவ்வாறு எனில் ஓட்டப்பந்தயமொன்றில் முடிவுப்புள்ளியை நோக்கி ஓடுவது போன்றதாகும். உங்களுடைய போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது. அடுத்த வார முதற் பகுதியில் நீங்கள் குடியேற்றப்படுவீர்கள்.
நாளை (இன்று) காலை ஜனாதிபதியுடனான உயர்மட்டப்பேச்சுவார்த்தையொன்று சம்பூர் மீள்குடியேற்றம் சம்பந்தமாக இடம்பெறவுள்ளது. நாமும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்ணான்டோ ஆகியோர் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளோம்.
ஜனாதிபதியுடனான இன்றைய சந்திப்பில் சம்பூர் மீள்குடியேற்றம் சம்பந்தமாக ஒரு முடிவைக்காண்பேன். நீங்கள் மறுவாரம் குடியேற்றப்படுவீர்கள். குடியேறும் போது நானும் அங்கு வருவேன்.
ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய நாளை அல்லது நாளை மறுதினம் முதலீட்டு வலயத்துக்கு தாரை வார்த்துக் கொடுக்கப்பட்ட சம்பூர் காணி 818 ஏக்கரும் வர்த்தமானி மூலம் இரத்து செய்யப்பட்டு பொதுமக்களுக்கு கையளிக்கப்படும்.
இதேபோன்றே இவ்வார முடிவிலோ அல்லது அடுத்த வார முற்பகுதியிலோ கடற்படை முகாமிருக்கும் காணிகளும் மக்களுக்காக விட்டுக்கொடுக்கப்படும்.
கடற்படையினர் கடற்கரையண்டிய பகுதிக்கு இடமாறிச் செல்லவிருக்கிறார்கள் என்ற நல்ல செய்தியையும் உங்களுக்கு தெரிவிக்க விரும்புகின்றேன்.
கடற்படையினருக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் காணி அரச காணியே தவிர மக்களுடைய காணிகள் அல்ல என்பதையும் தாங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
இன்னும் சில வாரங்களில் கடற்படை முகாமிருந்த 237 ஏக்கர் நிலத்திலும் மக்கள் குடியேற்றப்படுவார்கள்.
நீங்கள் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறீர்கள், பல்வேறு விதமான கஷ்டங்களுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறீர்கள். உங்களுக்கு வழங்கப்பட்ட உணவு வேண்டுமென்றே நிறுத்தப்பட்டது அப்படியிருந்தும் உங்கள் சொந்த மண்ணுக்கு போக வேண்டுமென போராடி வந்திருக்கிறீர்கள்.
நீங்கள் தொடர்ந்து போராடியதன் காரணமாகவே நல்ல முடிவொன்று கிடைத்திருக்கிறது. உங்கள் உறுதி குலைந்திருக்குமாயின் நீங்கள் வேறு இடத்தில் குடியேறியிருப்பீர்கள். ஆனால் நீங்கள் போராடி இன்றைய வெற்றியை பெற்றிருக்கிறீர்கள்.
நான் சம்பூர் குடியேற்றம் சம்பந்தமாக பாராளுமன்றத்தில் பலமுறை இறுக்கமாக பேசியிருக்கிறேன். நீங்கள் சம்பூர் மக்களை மீள் குடியேற்றவில்லையாயின் அந்த மக்களை ஏன் வற்புறுத்துகிறீர்கள் எனப் பாராளுமன்றத்தில் கேட்டிருக்கிறேன்.
அப்பொழுதெல்லாம் அரசாங்கம் எனக்கு வாக்குறுதியளித்தது. சம்பூர் மக்களை மீள்குடியேற்றுவோம் அவர்களை மாற்று இடத்துக்கு கொண்டு செல்லமாட்டோமென்று கூறினார்கள். நீங்கள் காட்டி வந்த உறுதியான நிலைப்பாடே இன்றைய இந்த வெற்றிக்கு காரணமாக இருக்கிறது.
நீங்கள் அமைதி காக்க வேண்டும், குழப்பி விடக்கூடாது, நீங்கள் உங்கள் சொந்தக்காணியில் குடியேறும் காட்சியை காண நானும் வருவேன். போராட்டத்தின் கடைசிக்கட்டத்துக்கு வந்திருக்கின்றோம். ஓட்டத்தின் முடிவை எட்டிக்கொண்டிருக்கிறோம் என்பதை சம்பூர் மக்களாகிய நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். எந்த விதமான பிரச்சினைகள் வருகின்ற போதும் அதை ஜனாதிபதியுடன் பேசித்தீர்க்க நான் தயாராக இருக்கின்றேன்.
சம்பூர் மீள்குடியேற்றம் சம்பந்தமாக பல்வேறு இடைஞ்சல்கள் ஏற்பட்டிருந்தபோதும் அதற்கு முடிவு காணப்பட்டுள்ளது. இன்றைய தினமோ நாளைய தினமோ வர்த்தமானி அறிவித்தல் மூலம் சம்பூர் விடுவிக்கப்பட்ட செய்தியை அறிவீர்கள் என சம்பந்தன் தெரிவித்தார்.
இவ்விஷேட சந்திப்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முன்னாள் க. துரைரட்ணசிங்கம் பிரதேச சபை உறுப்பினர் நாகேஸ்வரன் மற்றும் திருச்செல்வம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ad

ad