20 அக்., 2019

எஞ்சியிருக்கும் பயங்கரவாதிகளை எனது ஆட்சியில் இல்லாதொழிப்பேன் - கர்ஜிக்கிறார் சஜித்

நாட்டில் எஞ்சியுள்ள பயங்கரவாதிகளையும் எனது ஆட்சியில் இல்லாதொழிப்பேன் என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசா கர்ஜித்துள்ளார்.

பயங்கரவாதிகளை ஒழிப்பதற்கான அதிகாரங்களையும் பொறுப்புக்களையும் முன்னாள் படைத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு வழங்கியுள்ளேன். முப்பது வருட பயங்கரவாதத்தை ஒழித்த பொன்சேகாவுக்கு எஞ்சிய பயங்கரவாதிகளை ஒழிப்பது பெரும் சிரமமாக இருக்காது எனவும் சஜித் பிரேமதாசா தெரிவித்துள்ளார்.

நேற்று (19) சனிக்கிழமை மாலை அக்குரனை நகரில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் வேட்பாளர் சஜித் பிரேமதாச இதனைக் கூறியுள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடும் சகலருக்கும் மரண தண்டனை வழங்கும் சட்டத்தை எனது ஆட்சியில் கொண்டுவர நடவடிக்கை எடுப்பேன்.

எந்தவித பேதங்களுக்கும் அப்பால் இருந்துகொண்டு தாய் நாட்டை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுப்பேன். நாம் பயங்கரவாதத்தை ஒழிப்போம். நாம் பயங்கரவாதத்தை இல்லாமல் செய்வோம். இதன் கருத்து ஒரு மதத்தை இல்லாதொழிப்பது என்பதல்ல.

மதஸ்தலங்களை இல்லாதொழிப்பது என்பது அல்ல. ஒரு இனத்தை இல்லாதொழிப்பது அல்ல. இனவாதத்தையும், மதவாதத்தையும் தூண்டிவிட்டு நாட்டை தீ வைப்பதுவா தேசப்பற்று என்பது எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

நான் இந்த நாட்டில் பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதற்கு பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவுக்கு சுதந்திரத்தை வழங்கியுள்ளேன். 30 வருட யுத்தத்தை ஒழித்த சரத் பொன்சேகாவுக்கு, எஞ்சியுள்ள பயங்கரவாதிகளையும் ஒழிப்பதற்கு நான் பொறுப்பு வழங்கியுள்ளேன்.

பயங்கரவாதத்தை இல்லாதொழித்து எமது தாய் நாட்டில் காணப்படும் இனவாத, மதவாத என்பவற்றுக்கும் முற்றுப்புள்ளி வைப்பேன். – என்றார்