புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஆக., 2012



60 வருடம் காத்திருந்த கூட்டமைப்புக்கு 6 மாத பா.தெரிவுக்குழுவில் இடம்பெற முடியாததேன்?

கிழக்கு மாகாணசபை தேர்தல் என்பது அரசாங்கத்தை மாற்றும் தேர்தல் அல்ல. இது மாகாணத்தில் வாழும் மக்களின் அடிப்படை தேவைகளான கல்வி, சுகாதாரம், போக்குவரத்து போன்றவற்றை பூர்த்தி செய்யும் நடவடிக்கைக்கான தேர்தலேயாகும்.

எனவே தமிழ் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,
இத்தேர்தலின் மூலம் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வை காணமுடியாது. ஏற்கனவே மாகாணசபைக்குரிய காணி, பொலிஸ் அதிகாரங்களும் மாகாணசபைகளுக்கு வழங்கப்படவில்லை. பாராளுமன்ற தேர்தலில் தெளிவாக வாக்களிப்பதன் மூலமாகவே இவ்வுரிமைகளை பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.
அதே நேரம் மாகாணசபை தேர்தலிலே தமிழ் தேசிய உணர்வுகளுக்கு ஆளாகி வாக்களிப்பதன் மூலம் மாகாணசபை மூலமாக கிடைக்கப்பெறும் குறிப்பாக கல்வி, சுகாதாரம் போன்ற அபிவிருத்திகளை நாம் இழந்து விடக் கூடாது.
2010ம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலில் கிழக்கு மாகாண மக்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்பது எமக்கு தெரியும். இருப்பினும் தேர்தல் முடிவுற்று இரண்டு வருட காலத்திற்கு மேலாகியும் தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் ஊடக அறிக்கைகளையும் பாராளுமன்ற ஆவேச பேச்சுக்களை மட்டுமே காணக்கூடியதாக இருந்தது என்ற யதார்த்தத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
60 வருட கால இனப்பிரச்சினை தீர்விற்காக காத்திருந்த கூட்டமைப்பினருக்கு ஆறு மாதம் பாராளுமன்ற தெரிவுக்குளுவுக்குள் அங்கம் வகிக்க முடியாதது ஏன் என்பது விளங்கவில்லை. யுத்த கால பேச்சுவார்த்தைகளின் தோல்விகளை மனதில் கொண்டு கடந்த கால நிகழ்வுகளை முன்னிறுத்தி நிகழ்காலத்தை தொலைக்கும் நிகழ்ச்சியில் இவர்கள் ஈடுபட்டிருக்கிறார்களா? பாராளுமன்ற தெரிவுக்குழுவில் ஏன் அங்கம் வகிக்ககூடாது என்று மக்கள் அபிப்பிராயத்தையாவது இவர்கள் பெற்றுக்கொண்டார்களா?
பட்டதாரிகளுக்காக வேலைவாய்ப்பில் கூட மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டத்தில் 40ற்கும் அதிகமான பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பினை கொழும்பிலிருந்து கொண்டு என்னால் எப்படி பெற்றுக் கொடுக்க முடிந்தது என்பதை அம்மாவட்ட மக்கள் சிந்திக்க வேண்டும். கிழக்கு மாகாணசபையை முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்தாவது அரசாங்கமே கைப்பற்றப்போகிறது.
இந்நிலையில் அரசாங்க தரப்பில் தமிழ் மாகாணசபை உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படாவிட்டால் தமிழர்களுக்கு கிடைக்கவிருக்கும் முதலமைச்சர் பதவியோ மாகாண அமைச்சர் பதவியோ கைநழுவி போகக்கூடிய ஆபத்தை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆகவே கிழக்கு மாகாண தமிழ் மக்கள் அரசாங்கத்திற்கு வாக்களிப்பது மட்டுமின்றி அரசாங்க தரப்பில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர்களுக்கே தமது மூன்று விருப்பு வாக்குகளையும் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.

ad

ad