புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஆக., 2012


காலத்தின் தேவையில், கடமையை உணர்த்தும் கிழக்கு மாகாணத்தேர்தல்.
தமிழர் எழுச்சியில்,தமிழ்த்தேசியத்தை உயர்த்தி,தமிழ்மக்களின் உரிமைக்கும், பாதுகாப்புக்கும் குரல் கொடுக்கத் தொடங்கி சுமார் 64 ஆண்டுகளைக் கடந்த நிலையில் கிழக்கு மாகாணத்தேர்தலை தமிழ் மக்கள் சந்திக்கின்றனர்.
இலங்கைத்தீவில் சிங்கள மேலாதிக்கத்தின் கீழ் பலதேர்தல்களை தமிழ் மக்கள் சந்தித்திருக்கின்றனர், சில தேர்தல்களைப் புறக்கணித்திருக்கின்றனர். என்றாலும் தமிழரின் உரிமைப்போர் உயர்ந்துநின்றவேளையில் ஒருமித்த அடிப்படையில் தேர்தலில் வாக்களித்து உணர்வையும், விடுதலைப்பற்றையும் வெளிப்படுத்தினர் என்பது வரலாற்றில் நாம் கண்ட தமிழர் எழுச்சியாகும்.
தமிழர் தாயகத்தில் தமிழ் மக்களின் விடுதலைப்பற்றை எப்போதும் குறைத்து மதிப்பிட முடியாது. ஆனால் சிறிய தொகையினரான தமிழ் மக்கள் தொடந்தும் சுயநலம் கருதி சிங்கள தேசியக் கட்சிகளுக்கு ஆதரவளித்துவந்ததையும் கண்டிருக்கின்றோம்.எமது தாய் மண்ணில் விடுதலைப் போராட்டம் உக்கிரமடைந்த வேளையிலும் தமிழ்த் தேசியத்தை சிதைத்து தேர்தலில் மக்களிடம் வாக்குக் கேட்டு குறைந்த வாக்குகளில் சிங்கள பாராளுமன்ற கதிரைகளை நிரப்பியவர்களையும் பார்த்திருக்கின்றோம். இந்த வகையில் தேர்தலும், வாக்களிப்புகளும் இருக்கின்ற நிலையில் கிழக்கு மாகாணத் தேர்தலை எமது மக்கள் சந்திக்கின்றனர்.
கிழக்கு மாகாண மூன்றுமாவட்டங்களிலும் திருகோணமலை மாவட்டத் தமிழ் மக்களும், அம்பாறை மாவட்டத் தமிழ் மக்களும் நிட்சயம் தமிழ்த்தேசியத்தையும் தமிழ்மக்களின் விடுதலையையும் முன்னிறுத்தி வாக்களிப்பார்கள் என்பதை கண்கூடாக கடந்த காலங்களில் பார்த்திருக்கின்றோம். ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்தில்தான் தமிழ் மக்கள் விழிப்புணர்வுடன் செயல்படவேண்டியதை இங்கு சுட்டிக்காட்டுகின்றோம். ஏனெனில் தமிழ்த் தேசியத்தை குழிதோண்டிப் புதைத்தவர்கள் சிங்களத் தேசிய கட்சியுடன் கூட்டுவைத்து தேர்தலில் நிற்கின்றார்கள். அது மட்டுமல்லாது தமிழர்களுடைய வரலாறுபற்றி எள்ளளவும் அறியாதவர்கள், தமிழ்த் தேசியத்தின் எழுச்சியில் தங்களை உயர்த்தி நின்றவர்கள், சிங்களத் தேசியத்தின் காலடியில் மண்டியிட்டு தேர்தலில் மக்களிடம் வாக்கு கேட்டு நிற்கின்றனர். தமிழ்தேசியத்தின் புதைகுழியில் நின்று சிங்கள மேலாதிக்கத்தில் தமிழ் மக்களை அடிமையாக்கி சொந்தமண்ணில் உரிமையிழந்து வாழும்நிலையை உருவாக்குவதற்காக தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டுமா ? என்பதை ஒவ்வொரு தமிழ் வாக்காளரும் உணர்ந்து செயல்பட வேண்டியகாலமாகும்.
தமிழ்த் தேசியத்தின் எழுச்சியில் தமிழ்த் தேசியத்தை மிதித்து நிற்பவர்கள், தங்களின் சொந்த வாழ்வு மேம்பாட்டுக்காக ஆயிரமாயிரம் தமிழர்களின் தற்கொடையை உதாசீனம் செய்பவர்கள், காலம் கனிந்த வேளையில் களத்தில் சிங்களத்திற்கு உதவி விடுதலைப் போராட்டத்தைச் சிதைத்தவர்கள், தமிழர் அரசியல் அரங்கிலிருந்து முற்றாக அகற்றப்பட வேண்டும் என்பதை தமிழ் மக்கள் உணர்ந்து செயல்படும் காலம் இதுவாகும்.
தமிழ்மக்கள் சந்தித்த தேர்தல்களில் மூன்று தேர்தல்களை முக்கியமாக இங்கு குறிப்பிடுகின்றோம். இத்தேர்தல்களில் தமிழ்மக்கள் எவ்வாறு வாக்களித்தார்கள் என்பதையும் வெளிப்படுத்துகின்றோம். தமிழ்மக்களின் உரிமைப்போர் உச்ச நிலையிலிருந்த வேளைகளில் ஒன்றுபட்டு, உணர்வுடன் வாக்களித்து தமிழ்த் தேசியத்தை நிலை நிறுத்தியதையும் எமது மக்களுக்கு தெரியப்படுத்துகின்றோம்.
1977 ம் ஆண்டுத் தேர்தல் முக்கியமான ஒன்றாகும்.தமிழரின் ஒன்றுபட்ட அரசியல் தலைமைத்துவம் விடுதலையை மாத்திரம் நோக்காகக் கொண்டு, ``தமிழீழம்`` என்ற தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்து தமிழ்மக்களிடம் வாக்குக் கேட்டபோது தமிழ்மக்களின் ஆணை என்ற அடிப்படையில் பொது வாக்கெடுப்பாக அமைந்த இத்தேர்தலில் அமோக ஆதரவைத் தமிழ் மக்கள் வழங்கினர். இதன் போது கிழக்கு மண்ணில் தொகுதியடிப்படையில் பார்க்கின்றபோது, எல்லாத் தொகுதிகளிலும் தமிழ் மக்களின் வாக்குகள் பெரும்பான்மையாக தமிழ்த் தேசியத்திற்கு அளிக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டுகின்றோம்.
1989 ம் ஆண்டு நடந்த தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசியத்தை வலியுறுத்தி ஈழ மாணவர் புரட்சிகர அமைப்பு (ஈரோஸ்) தேர்தலில் போட்டியிட்டவேளையில், ஏனைய தமிழ்க்கட்சிகளில் இந்தியப் படையினரின் ஆலோசனை,அனுசரணையுடன் நான்கு கட்சிகள் இணைந்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட போது தமிழ் மக்கள் தங்கள் பெரும்பான்மை ஆதரவை (EROS) இயக்கத்திற்கு வழங்கி தமிழ்தேசியத்தின் பலத்தை வெளிப்படுத்தினர். இத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 46,419 வாக்குகள் பெற்று ஒரு ஆசனமும் திருகோணமலையில் 25,239 வாக்குகள் பெற்று இரண்டு ஆசனங்களும் பெற்றனர். அம்பாறை மாவட்டத்தில் ஈரோஸ் சார்பாக எவரும் போட்டியிடவில்லை.TELO , EPRLF , ENDLF ஆகிய இயக்கங்களின் தமிழ்த் தேசியவிரோத கடும்போக்குக்கு மத்தியில் நடந்த தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று ஆசனங்களை இவர்கள் பெற்றபோதும், தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளர்கள் புறந்தள்ளப்பட்டனர். எவ்வாறாயினும் தமிழ்மக்களின் வாக்குகள் தமிழ் கட்சிகளுக்கு கிடைக்கப்பெற்றிருந்தன. தன்மானம் காக்கும் தமிழர்கள் வாழும் கிழக்கு மண்ணில் இம்முறையும் தமிழ்தேசியம் தோர்த்துப் போகாமல் மக்கள் வாக்களித்து பாதுகாப்பார்கள் என்று நம்புவோம்.
2004 ம் ஆண்டுத் தேர்தலில் எமது தேசிய விடுதலை இயக்கத்தின் முழுமையான ஆதரவோடு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு களமிறங்கியது. இத்தேர்தலில் கிழக்கில் வாழ்கின்ற தமிழ்மக்கள் பெரும்பான்மையாக வாக்களித்து தங்கள் அதிகப்படியான பிரதிநித்துவத்தை உறுதிபடுத்தினர். மட்டக்களப்பில் நான்கும், திருகோணமலையில் இரண்டும், அம்பாறையில் ஒன்றும் என்றடிப்படையில் தெரிவு அமைந்திருந்தன.
தேர்தலில் நம்பிக்கை கொண்டதாக தேசிய விடுதலை இயக்கமான தமிழீழ விடுதலைப் புலிகள் இல்லாத போதும், ஒற்றுமையைக் கருத்தில் கொண்டு உண்மையும்,உணர்வும் வெளிப்படுத்த படவேண்டும் என்பதனாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை களமிறக்கி தமது முழுமையான ஆதரவைக்கொடுத்தனர். இதன்மூலம் ஒன்றுபட்ட தமிழ்மக்களின் தேசிய விடுதலை இயக்கமாக தமிழீழ விடுதலைப்புலிகள் தம்மை நிலைநிறுத்திக் காட்டினர். இத் தேர்தல் மூலம் தமிழர் தாயகத்தின் வட - கிழக்கு மாகாணங்களில் 22 உறுப்பினர்களை பெற்றுக்கொண்ட தமிழ்த்தேசிய கூட்டமைக்கு அரசியல் ரீதியான அங்கீகாரத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் பெற்றுக்கொடுத்தனர்.
சிங்களப் பாராளுமன்றத்தினூடாக தமிழ்ப் பேசும் மக்களின் உரிமைகளை பெற்றுக்கொள்ளமுடியாது என்ற நிலையிருந்தும் தமிழ்மக்களின் அரசியல் தலைமை விடுதலை இயக்கம் சார்ந்ததாக இருக்க வேண்டுமென்பதற்காக இத் தேர்தலில் தமிழ் மக்கள் முழுமையாக வாக்களித்தனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் முடிவுகளின் படி தமிழ்மக்களின் வாக்குகள் பெரும்பான்மையாக அளிக்கப்பட்டிருந்தன. 161, 011 வாக்குகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைக்கப்பெற்றதனால் நான்கு ஆசனங்கள் பெறப்பட்டன .
இந்த வாக்களிப்பு வீதம் அடுத்து வந்த 2010 ம் ஆண்டுத் தேர்தலில் இடம்பெறவில்லை. இதனால் மூன்று ஆசனங்களை தமிழ்தேசியக் கூட்டமைப்பினால் பெறமுடிந்தது. தேசிய விடுதலை இயக்கத்தின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட நிலையில் நடந்த தேர்தல் என்றபடியால் தமிழ்மக்கள் சோர்வடைந்து போயிருந்தனர். சுமார் 66, ௦௦௦ தமிழ் வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிப்பதற்கு முன்வராதது ஒரு ஆசனத்தை இழந்ததற்கு காரணமாக அமைந்தது என்பது வெளிப்படையான கருத்தாகும்.
எனவே நடைபெற இருக்கின்ற கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த்தேசியத்தின் எழுச்சியுடன் ஒன்றுதிரண்டு தமிழ்தேசியத் கூட்டமைப்புக்கு முழுமையாக வாக்களித்து பெரும்பான்மையை உறுதிப்படுத்த முடியும். இதன் மூலம் தமிழரின் அரசியல் விடுதலைப்பயணத்திற்கு மேலும் வலுவூட்டமுடியும் என்பது தமிழ் உணர்வாளர்களின் நம்பிக்கையாகும்.
இவ்வாறாக கிழக்குத் தமிழர்களின் உணர்வுகள் இருக்கின்றநிலையில், அபிவிருத்தி என்ற சொல்லைவைத்து, தமிழ்த்தேசியத்தை அசைத்துவிடுவதற்கு தேசிய விரோதிகள் நினைத்தால் தோற்றுப்போகும் என்பதை தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தும்.
தமிழ்த் தேசியபற்றோடு வாழ்ந்து தங்களை அர்ப்பணித்தவர்கள் சார்பாக தாய் மண்ணிலும், தாய் மண்ணுக்கு வெளியேயும் வாழ்பவர்கள், விடுதலைப் போராளிகளின் தற்கொடைகளை முன்னிறுத்தி மக்களிடம் விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால் முழுமையாக தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்து, தமிழ் தேசியத் பற்றாளர்களான தமிழரசுக் கட்சி வேட்பாளர்களை தெரிவுசெய்து தமிழ்த் தேசியத்தை நிலைநிறுத்துவதோடு, தமிழ் மக்களின் தன்னாட்சி உரிமையையும், பாதுகாப்பையும் அரசியல் அரங்கில் அரங்கேற்றுங்கள், முடிவில் அது வெற்றியாக அமையும்.
சோரம் போகாமல், சொந்தலாபங்களைத்துறந்து, அர்பணிப்போடமைந்த அரசியலை தமிழ்மக்களின் விடுதலையில் வெளிப்படுத்துங்கள்.உரிமையும், தமிழ்த்தேசியமும், தமிழ்மக்களின் பாதுகாப்பும் உறுதிப்படுத்துகின்ற அரசியல், அபிவிருத்தியைப் பெற்றுத்தரும் என்பதை தமிழ்த் தேசிய விரோதிகளுக்கு உணர்த்துங்கள்.
நாடு, நாடாக அலைந்து திரிந்து, நாதியற்று வாழ்ந்த போதும், தமிழன் என்று சொல்லுமளவுக்கு, தமிழீழத் தாய் நாட்டின்பற்றோடு, மக்கள் தாய் மண்ணில் உணர்வோடு இன்னும் வாழ்கின்றதை ஒவ்வொரு தேர்தல்களும் உறுதிப்படுத்துகின்றன. இத் தேர்தலிலும் எமது மக்கள் தன்மானம் காத்து, தலை நிமிர்ந்து, தங்கள் வாக்குகளை தமிழ்த் தேசியத்திற்கு வழங்குவார்கள்.
இந்த உணர்வு ஒரு போதும் உறங்காது, இன்னும் எமது மண்ணில் விடுதலை தாகம் தீரவில்லை என்பதை இத் தேர்தலின் மூலம் மக்கள் உணர்த்துவார்கள்.
உண்மை , சத்தியம் என்றும் அழியாது. தமிழனின் தன்மானம் என்றும் சோரம்போகாது.
தனித்துவமும், தன்னாட்சி உரிமையும் நிலைநிறுத்தப்படும்காலம் வெகுதூரத்தில் இல்லை என்பதை இத்தேர்தல்மூலம் மக்கள் வெளிப்படுத்துவார்கள்.
தேனாடான்
theennadu@yahoo.com

ad

ad