தற்கொலைக்கு முன்பு ஷீபா எழுதி வைத்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சிறு வயதிலேயே சிவப்பாக இருப்பேன். என்னை பார்ப்பவர்கள் எல்லோரும் இவ்வளவு அழகாக இருக்கிறாயே என்று கூறுவார்கள். இதை கேட்கும்போதெல்லாம் எனக்கு சந்தோஷமாக இருக்கும். ஆனால் இது எவ்வளவு ஆபத்து என்பது நான் வளர்ந்து பருவமடைந்த பின்பு தெரிந்தது. வெளியே சென்றால் தப்பு, வாலிபர்களை பார்த்தால் தப்பு, பேசினால் போச்சு என்று எல்லாவற்றிற்கும் கண்டிக்கப்பட்டேன். இதுவே எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
ஊர் முழுவதும் என்னை பற்றி அவதூறு பரப்பப்பட்டது. இதை என் தாயாரே என்னிடம் கேட்டார். அவரே என்னை நம்பவில்லை. இப்படிப்பட்ட உலகில் எப்படி வாழ்வது என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. எனவேதான் தற்கொலைக்கு முடிவு எடுத்தேன். நான் இறந்த பின்பு எனது மகளுக்கும் இதேநிலை ஏற்படும் என்று எண்ணினேன். எனவே அவளையும் என்னோடு அழைத்துச்செல்ல முடிவு செய்தேன். வாழ பிடிக்காததால் நாங்கள் இந்த உலகை விட்டு செல்கிறோம்.
இவ்வாறு கடிதத்தில் எழுதி வைத்துள்ளார்.
மேலும் அவரது அழகு வாழ்க்கையில் ஏற்படுத்திய பாதிப்புகள் பற்றியும் பக்கம் பக்கமாக வர்ணித்திருந்தார். இதை படித்துப் பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
ஷீபா வீட்டின் பின்புறம் விறகு கட்டைகள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டி ருந்தன. அது சுடுகாட்டில் பிணங்களை எரிக்க வைத்திருப்பது போல் காணப்பட்டது. ஷீபா வீட்டுக்குள் தீக்குளித்ததும் நேராக விறகு கட்டைகள் மீது விழுந்து தீயில் சமாதியாகி உள்ளார்.
ஷீபா வீட்டில் சோதனை செய்த போலீசார் அங்கிருந்து அவரது போட்டோ ஆல்பம் ஒன்றையும் கைப்பற்றினர். அதில், ஷீபா பூப்பெய்தியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் முதல் அவர் இளம்பெண்ணாக இருந்தது வரையிலான படங்கள் காணப்பட்டன. அந்த படங்களில் ஷீபாவின் முகம் மட்டும் கறுப்பு மையால் அழிக்கப்பட்டிருந்தது. நேற்று இரவு ஷீபா தற்கொலை முடிவை எடுத்ததும் அவர் தனது போட்டோ ஆல்பத்தில் இருந்த புகைப்படங்களை ஆத்திரத்தில் அழித்திருப்பது தெரிய வந்தது.