புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 நவ., 2012


அன்று குட்டிமணி தங்கதுரை இன்று சிங்களவர் ? இறைவன் நின்று கொல்வானோ ?

வெள்ளைக் கொடிச் சம்பவத்தை நிரூபிக்கும் வகையில் வெலிக்கடைச் சம்பவம் அமைந்துள்ளது - தேசிய பிக்குகள் முன்னணி!


இறுதிக்கட்ட யுத்தத்தின்போது வெள்ளைக்கொடியேந்தி சரணடைய வந்தவர்கள் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டனர் என்ற பயங்கரமான குற்றச்சாட்டு தேசிய ரீதியில் மட்டுமல்ல, சர்வதேச ரீதியிலும் படையினருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நிலையில்,
அந்தக் குற்றச்சாட்டை நிரூபிக்கச் செய்யும் வகையிலேயே வெலிக்கடைச் சிறைச்சாலைத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது எனத் தேசிய பிக்குகள் முன்னணி தெரிவித்துள்ளது.

அத்துடன், சர்வதேசப் பிடிக்குள் இறுகிவிட்டோம் என்பதை உணராத வகையிலேயே அரசின் செயற்பாடுகள் உள்ளன. ஆட்சியாளர்களால் நாட்டின் திருநாமத்திற்குக் களங்கம் ஏற்பட்டுள்ளது என்றும் அந்த முன்னணி கூறியுள்ளது.

வெலிக்கடைச் சிறைச்சாலையில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கலவரம் தொடர்பில் கருத்து வெளியிடும்போது மேற்கண்டவாறு தெரிவித்த பிக்குகள் முன்னணியின் தலைவர் தம்பர அமில தேரர் இது தொடர்பாக மேலும் கூறியவை வருமாறு:

இலங்கை அரசுக்கு எதிராக சர்வதேச ரீதியில் இன்று பாரிய பிரச்சினைகள் இருக்கின்றன. இவற்றை உணராமல் ஆட்சியாளர்கள் செயற்படுகின்றனர். வெலிக்கடைச் சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவம்இதனையே எடுத்துக்காட்டுகின்றது. சிறைச்சாலையில் அடைத்துவைக்கப்பட்டுள்ள கைதிகளை சிறைச்சாலை அதிகாரிகளே சோதிக்கவேண்டும். இதற்காகப் பயிற்சி பெற்ற அதிகாரிகள் இருக்கின்றனர்.

குறிப்பாக, சிறைச்சாலைக்குள் சட்டவிரோதப் பொருட்கள் இருப்பின் அவை எப்படி அதற்குள் கொண்டுசெல்லப்பட்டன என்பதை அரசு தேடியறிய வேண்டும். அதிகாரிகளின் உதவியில்லாமல் அவை எப்படி உள்ளே சென்றிருக்கும்? பூதங்கள் கொண்டு சென்று கொடுத்தனவா?

சிறைச்சாலை அதிகாரிகள் இருக்கையில் தேடுதல் நடவடிக்கைக்கு விசேட அதிரடிப்படையினரும், இராணுவத்தினரும் ஏன் அழைத்து வரப்பட்டனர்? இதற்கான கட்டளையைப் பிறப்பித்தது யார்?

அதேவேளை, சிறைச்சாலைக் கைதிகள் தப்பிச்செல்ல முயல்கையில் இவ்வாறு துப்பாக்கிச்சூடு நடத்தப்படுவது முறையான செயலா என்பது தொடர்பிலும் தேடிப்பார்க்க வேண்டியுள்ளது.

அத்துடன், இன்று நீதித்துறையில் பாரிய நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன.  இது விடயம் தொடர்பில் சர்வதேச ரீதியிலும் விவாதிக்கப்படுகின்றது. இந்நிலையில், நீதித்துறையுடன் ஏதோவொரு அடிப்படையில் தொடர்புபட்ட சிறைச்சாலைமீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை குறித்தும் பலத்த சந்தேகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

வெள்ளைக்கொடியேந்தி சரணடைய வந்தவர்கள், நந்திக்கடற்பரப்பில் தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டமை ஆகிய குற்றச்சாட்டுகள் சர்வதேச ரீதியில் படையினருக்கு எதிராக உள்ளன. இந்தக் குற்றச்சாட்டுகளைச் சரிப்படுத்தும் வகையிலேயே வெலிக்கடை மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நிராயுதபாணிகளாக இருந்த கைதிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் பாரிய சர்ச்சையையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சூடு நடத்துவதற்குப் படையினர் பாவித்த ஆயுதங்கள் தொடர்பிலும் பல கோணங்களில் பேசப்படுகின்றன.
எனவே, குறித்த மோதல் சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற முறையில் விசாரித்துக் குற்றவாளிகளை அரசு நீதியின் முன் நிறுத்தவேண்டும் என்றார்.

ad

ad