புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 மார்., 2013


ஜெனிவா சுழலில் சிக்கியுள்ள இலங்கை இராணுவம்
ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரவுள்ள தீர்மானம் பற்றிய விவகாரம் சூடு பிடித்துள்ள நிலையில் இதன் தாக்கத்தில் இருந்து விடுபட முடியாத நிலைக்கு இலங்கை இராணுவமும் தள்ளப்பட்டுள்ளது.
ஜெனிவா தாளங்களுக்கேற்ப ஆட வேண்டிய நிர்ப்பந்தம் இலங்கை இராணுவத்துக்கும் ஏற்பட்டுள்ளது என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது. கடந்த வாரம் இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜகத் ஜெயசூரிய வன்னிப் பகுதிக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார்.
அங்கு சில புதிய படைத் தலைமையகங்களையும்,  படையினருக்கான வசதிகளையும் ஆரம்பித்து வைத்திருந்ததாக செய்திகள் வெளியாகின. எனினும் அவரது பயணத்தின் முக்கிய நோக்கம் அதுவாக இருக்கவில்லை.
ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானம் தொடர்பாக படையினர் மத்தியில் ஏற்பட்டுள்ள சந்தேகங்களை நீக்குவது தான் அவரது பயணத்தின் அடிப்படை நோக்கம்.
சுமார் 2 லட்சம் படையினரைக் கொண்ட இலங்கை இராணுவத்தின் பெரும்பாலான படைப்பிரிவுகள் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரில் ஈடுபட்டிருந்தன.
எனவே போர்க்குற்றச்சாட்டுகளும், அது பற்றிய சர்வதேச விசாரணை என்று பரவும் செய்திகளும் போரில் பங்கெடுத்த படையினர் மத்தியில் குழப்பத்தையும் எதிர்காலம் குறித்த கேள்வியையும் நிச்சயம் எழுப்பவே செய்யும்.
இலங்கை இராணுவத்தில் உள்ள பெரும்பாலானோர் இறுதிக்கட்டப் போருடன் தொடர்புபட்டிருந்தவர்கள் என்பதால் இது ஒரு சிக்கலான பிரச்சினையாகவே இருந்தது.
போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து சர்வதேச அளவில் வெளியாகும் படங்கள் படையினர் மத்தியில் எந்தளவுக்கு சென்றடைகின்றன என்பது கேள்விதான்.
ஆனால் சரத் பொன்சேகா மற்றும் சிங்களத் தேசியவாத சக்திகளின் கருத்துகள் நிச்சயம் இவர்களின் காதுகளில் ஒலித்திருக்கும்.
ஐநா விசாரணைக் குழு நிச்சயம் இலங்கைக்கு வரப் போகிறது.
வீசா இல்லாமல் உள்ளே வரும் அதிகாரம் படைத்த அந்தக் குழு தன்னிடம் வந்து போரில் என்ன நடந்தது என்று கேட்டால் விளக்கமளிக்க வேண்டியது தனது பொறுப்பு என்று அரசாங்கத்தை அண்மையில் மிரட்டியிருந்தார் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா.
தனது வழிகாட்டலில் நடத்தப்பட்ட போரின் போது போர்க்குற்றங்கள் எதையும் இராணுவம் இழைக்கவில்லை என்று சரத் பொன்சேகா அடித்துச் சொன்னாலும் சர்வதேச விசாரணைக் குழு என்று பயமுறுத்தும் அவரது கருத்து படையினர் மத்தியில் எடுபடவே செய்யும்.
அரசாங்கத்தினால் தூக்கியெறியப்பட்டவராக இருந்த போதிலும் போரின்போது படையினர் மத்தியில் ஒரு கதாநாயகனாகவே அவர் இருந்தவர் என்பதை மறுக்க முடியாது.
அரசியல் நுழைவு அவரது இமேஜை பெரிதும் பாழ்படுத்தி விட்ட அதேவேளை படையினர் மத்தியில் அவரது கருத்து உன்னிப்பாக கவனிக்கப்படும்.
சரத் பொன்சேகாவின் எச்சரிக்கை வெளியான பின்னர் தான் இராணுவத் தளபதியின் வன்னிக்கான பயணம் இடம்பெற்றது.
கிளிநொச்சிப் படைத் தலைமையகத்துக்கும் அதன் கீழுள்ள பூநகரி 66வது டிவிஷன் தலைமையகம் மற்றும்துணுக்காய் 65வது டிவிஷன் தலைமையகத்துக்கும் முதலில் சென்றிருந்தார் இராணுவத் தளபதி.
அதையடுத்து முல்லைத்தீவு படைத் தலைமையகம், புதுக்குடியிருப்பு 68வது டிவிஷன், ஒட்டுசுட்டான் 64வது டிவிஷன் ஆகியவற்றுக்கும் சென்று படையினருடன் கலந்துரையாடியிருந்தார்.
இராணுவத் தளபதியின் இந்தப் பயணத்தின் நோக்கமே படையினருடன் கலந்துரையாடி ஜெனிவா பற்றிய கலக்கத்தை போக்குவது தான் என்று கருதப்படுகிறது.
வன்னிக்கான பயணத்தின் போது டிவிஷன் தலைமையகங்களில் ஆயிரக்கணக்கான படையினர் மத்தியில் இராணுவத் தளபதி லெப். ஜெனரல் ஜகத் ஜெயசூரிய உரையாற்றியிருந்தார்.
இதன்போது அவர் இலங்கை இராணுவத்தின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் ஆட்சி மாற்றத்தை அடிப்படையாகக் கொண்டவை என்றும் படையினருக்குப் பின்புல ஆதரவாக உள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவையும் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவையும் அதிகாரத்தில் இருந்து அகற்றவே இந்த முயற்சிகள் நடப்பதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
இது ஆட்சி மாற்றத்துக்காக கூறப்படும் குற்றச்சாட்டுகளே தவிர படையினரைத் தண்டிக்கும் நோக்குடையவையல்ல என்ற தொனி அவரது பேச்சில் காணப்பட்டுள்ளது. இது மறைமுகமாக படையினருக்கு நம்பிக்கையூட்டும் கருத்தாகவே உள்ளது.
அதேவேளை, இலங்கை இராணுவம் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என்றும், போரின் போது மீறல்கள் எதுவும் நிகழவில்லை என்றும் அவர் வலியுறுத்தவும் தவறவில்லை.
போரில் மீறல்கள் இடம்பெற்றதா? இல்லையா? என்பது இராணுவத் தளபதியை விட போரில் ஈடுபட்ட படையினரே நன்கு அறிவர்.
ஆனாலும் அப்படி ஏதும் நடக்கவில்லை என்று அவர் அழுத்திக் கூறியது போர்க்குற்ற விசாரணைக்கு இடமளிக்கப்படமாட்டாது என்ற தெம்பை படையினருக்குக் கொடுப்பதற்காகத் தான்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்பட்ட போதும் இராணுவத் தளபதி இவ்வாறு தான் சுற்றுப்பயணம் செய்து படையினருக்கு தெம்பூட்டியிருந்தார்.
அதேவேளை போரின் இறுதிக்கட்டத்தில் பெருமளவு பொதுமக்கள் கொல்லப்படதற்கு படையினர் காரணமல்ல என்ற இராணுவ நீதிமன்ற விசாரணை அறிக்கை ஒன்று கடந்த மாதம் வெளியிடப்பட்டது.
பெப்ரவரி 15ம் திகதி இராணுவத் தளபதியிடம் இந்த அறிக்கை கையளிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
போரின் இறுதிக்கட்டத்தில் பெருமளவு பொதுமக்கள் கொல்லப்பட்ட ஆட்டிலறித் தாக்குதல்களுக்கு படையினர் காரணமா? என்ற கோணத்தில் அந்த இராணுவ நீதிமன்ற விசாரணை மேற்கொண்டிருந்தது.
மேஜர் ஜெனரல் கிரிசாந்த டி சில்வா தலைமையிலான அந்த இராணுவ நீதிமன்றத்தில் மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா, பிரிகேடியர் ருவான் குலதுங்க, பிரிகேடியர் ருவான் டி சில்வா, பிரிகேடியர் அருண விஜேவிக்கிரம ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
இந்த அறிக்கையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உத்தரவுக்கமைய பூச்சிய நிலை பொதுமக்கள் இழப்பு கொள்கை போரின் போது இறுக்கமாக கடைப்பிடிக்கப்பட்டுள்ளதாக சாட்சியங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
போர் தவிர்ப்பு வலயங்கள் தொடர்பான உத்தரவுகள் எல்லா நேரங்களிலும் படைத் தளபதிகளால் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் போர் தவிர்ப்பு வலயங்களில் இருந்து தாக்குதல் நடத்தினாலும் கூட பதில் தாக்குதலை தவிர்க்குமாறு தளபதிகளுக்கு கூறப்பட்டிருந்தது.
மனிதாபிமானப் போரின் எல்லர்கட்டங்களிலும் இராணுவம் அனைத்துலக மனிதாபிமான சட்டத்தையும் போர்ச் சட்டத்தையும் மதித்து ஒழுக்கத்துடன் நடந்து கொண்டுள்ளது.
இதன்மூலம் பொது மக்களுக்கு இழப்புகள் ஏற்படுவதை அவர்கள் தவிர்த்தனர்.
விடுதலைப் புலிகளே பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தியது. தப்பிச் செல்ல முயன்ற பொது மக்களை படுகொலை செய்தது. சிறார்களை கட்டாயப்படுத்தி போரில் ஈடுபடுத்தியது போன்ற போர்க்குற்றங்களிலும் ஈடுபட்டனர்.
விடுதலைப் புலிகளின் போர்க்குற்றங்களைத் தடுத்து நிறுத்த வேண்டிய கடமையில் இருந்து அனைத்துலக சமூகம் தவறியுள்ளதை நீதிமன்றம் கண்டறிந்துள்ளது. இவ்வாறு அதன் சாராம்சத்தில் கூறப்பட்டிருந்தது.
பா|துகாப்பு வலயத்தில் ஆட்லறிக் குண்டுகள் வீழ்ந்ததை அந்த அறிக்கை நிராகரிக்கவில்லை.
ஆனால் அவை புலிகளின் குண்டுகள் என்றும், ஆட்டிலறியை இயக்குவதற்கு தகுந்த பயிற்சி பெறாதவர்கள் அவற்றை இயக்கியதாலும் தரமற்ற ஆட்டிலறிகள் மற்றும் குண்டுகளை அவர்கள் பயன்படுத்தியதும் தான் அதற்கு காரணம் என்றும் அந்த அறிக்கை கூறியது.
கடந்த மாதம் 15ம் திகதி இந்த அறிக்கை இராணுவத் தளபதியிடம் கையளிக்கப்பட்டது.
அது இன்னமும் அவரது பரிசீலனையில் தான் உள்ளது. இதுவரை பாதுகாப்புச் செயலரிடம் கையளிக்கப்படவில்லை.
அறிக்கையை ஆய்வு செய்துள்ளதாகவும் தனது குறிப்புகளையும் சோ்த்து அதனை விரைவில் பாதுகாப்புச் செயலரிடம் கையளிக்க உள்ளதாகவும் இராணுவத் தளபதி கூறி ஒரு வாரமாகி விட்டது.
வழக்கத்தில் இராணுவ நீதிமன்ற அறிக்கைகள் பகிரங்கமாக வெளியிடப்படுவதில்லை.
சரத் பொன்சேகா தொடர்பான இராணுவ நீதிமன்ற அறிக்கை இராணுவத் தளபதியிடம் கையளிக்கப்படவுடனேயெ அதன் சுருக்கத்தை வெளியிட்டது இராணுவத் தலைமையகம்.
அதாவது ஜெனிவா கூட்டத் தொடருக்கு முன்னதாக படையினர் மீதான குற்றச்சாட்டுகளை நிராகரிக்க வேண்டும் என்பதே அதன் குறியாக இருந்தது.
இராணுவத் தளபதியின் கையில் அறிக்கை கொடுக்கப்பட்டு பல வாதரங்களாகி விட்ட நிலையிலும், அது இன்னமும் பாதுகாப்பு அமைச்சுக்கு கையளிக்கப்படாதுள்ளது.
இது இராணவ விசாரணை அறிக்கை கையளிக்கப்பட்டதான அறிவிப்பின் மீது கேள்வியை எழுப்ப வைத்துள்ளது.
இந்த அறிக்கை தயாரிக்கப்பட்ட முன்னரே அவசரமாக அதன் சில பகுதிகள் வெளியிடப்பட்டதா? என்பதே அந்தக் கேள்வி.
கடந்த ஆண்டு ஜெனிவாவில் தீர்மானம் கொண்டுவர அமெரிக்கா தயாராகிறது என்று உறுதிப்படுத்தப்பட்டதும் இந்த இராணுவ விசாரணை நீதிமன்றம் அவசர அவசரமாக அமைக்கப்பட்டது நினைவிருக்கலாம்.
எனினும் இந்த விசாரணை நீதிமன்றம் சனல் 4 வெளியிட்ட வீடியோ ஆதாரங்கள் குறித்த விசாரணையை இன்னமும் முடிக்கவில்லை. அதற்குள் அடுத்த படங்களை சனல் 4 வெளியிட்டு விட்டது குறிப்பிடத்தக்கது.
இராணுவ விசாரணை அறிக்கை பூச்சிய நிலை இழப்பு என்ற கொள்கையை உறுதியாக கடைப்பிடித்ததாக கூறுகிறது.
ஆனால் போரில் குறிப்பிட்டளவு பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்பதை அமைச்சர் பசில் ராஜபக்ச, பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச போன்றவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
அதாவது போரில் அகப்பட்டு பொதுமக்கள் கொல்லப்படுவது உலக வழக்கம் தான் என்று அவர்கள் ஏற்றுக் கொள்ளுகின்றனர். ஆனால் அப்படி எதுவுமே நடக்கவில்லை என்று அடித்துக் கூறுகிறது இராணுவ விசாரணை அறிக்கை.
அங்கொன்றும் இங்கொன்றுமாக சில சம்பவங்கள் நடந்திருக்கலாம் விசாரிக்கிறோம், குற்றவாளிகளை தண்டிக்கிறோம் என்று கூறியிருந்தால் சர்வதேச சமூகம் இந்த அறிக்கையை ஓரளவுக்கேனும் கருத்தில் எடுத்திருக்கும்.
அப்படி எதையுமே கூறாமல் பொதுமக்களில் ஒருவர் கூட கொல்லப்படாமல் போரை நடத்தினோம் என்று கூறப்பட்டதே, இந்த அறிக்கை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாததற்குக் காரணம்.
இந்த அறிக்கையின் மூலம் இராணுவம் தன்னை புத்திசாலி என்று நிரூபிக்க முயன்று தோற்றுப் போயுள்ளது.
முக்கியமான நேரத்தில் இந்த இராணுவ விசாரணை அறிக்கை வெளியிடப்பட்ட போதும் அது எவராலும் கையில் எடுத்துப் பார்க்கப்படவேயில்லை.
இது குற்றச்சாட்டுகள் குறித்த இராணுவ விசாரணையின் மீது சர்வதேச சமூகம் நம்பிக்கை கொள்ளவில்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளது.  இராணுவ நீதிமன்ற விசாரணை அறிக்கை அவசரமாக வெளியிடப்பட்டது அரசாங்கத்துக்க எந்த சாதகமான விளைவையும் தரவில்லை.
ஏனென்றால் அடிப்படை யதார்த்தத்தை ஏற்க மறுக்கும் இந்த அறிக்கையை அரசாங்கத்தில் உள்ள இராஜதந்திரிகள் கூட புத்திசாலித்தனமானது என்று ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
அது மட்டுமன்றி வழக்கமாக ஜெனிவா செல்லும் இலங்கைக் குழுவில் இராணுவ அதிகாரி ஒருவரும் இடம்பெறுவது வழக்கம். கடந்த காலங்களில் மேஜர் ஜெனரல் தயா ரத்நாயக்கவே அதிக கூட்டங்களுக்குச் சென்றுள்ளார்.
இம்முறை இராணுவத் தரப்பில் இருந்து எவரும் அனுப்பப்படவில்லை.
இதுவும் கவனிக்கப்படுகின்ற ஒரு விவகாரமாகவே உள்ளது.
குற்றச்சாட்டுகளை முறியடிப்பதற்கான சர்வதேச பிரசாரங்களில் இருந்து இராணுவத்தை ஒதுக்கி வைக்க அரசாங்கம் விரும்புகிறது போலத் தெரிகிறது. ஜெனிவாவில் இருந்து இராணுவ அதிகாரிகள் ஒதுக்கப்பட்டது அதனையே உணர்த்துகின்றன.
சுபத்ரா

ad

ad