புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஜூன், 2013


மலிவு விலை காய்கறி கடைகளை
திறந்து வைத்தார் ஜெயலலிதா






தமிழகத்தில் பல்வேறு இடங்களில் 31 பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகளை வீடியோ கான்பரன்சிங் வசதி மூலமாக திறந்து வைத்தார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று தலைமைச் செயலகத்தில், காய்கறி விலை உயர்வினைக் கட்டுப்படுத்தும் தமிழக அரசின் நடவடிக்கையாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 31 பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகளை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.
விவசாயிகளின் விளை நிலங்களிலிருந்தும், கூட்டுறவு சங்கங்களின் கொள்முதல் மையங்களிலிருந்தும் காய்கறிகள் நேரடியாகக் கொள்முதல் செய்யப்பட்டு, தரம் பிரிக்கப்பட்டு சென்னைக்கு கொண்டு வரப்படும். விவசாயிகளிடமிருந்து நேரிடையாக ஒவ்வொரு நாளும் கொள்முதல் செய்யப்படும் காய்கறிகளுக்கான தொகை அன்றைய தினமே சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கங்களால் விவசாயிகளுக்கு வழங்கப்படுவதால் விவசாயிகள் இடைத்தரகர்களை நாடவேண்டிய சூழல் தவிர்க்கப்படுவதுடன் அவர்களுக்கு உரிய விலை உடனடியாக கிடைக்கவும் ஏதுவாகிறது. விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் காய்கறிகள் அன்றைய அடக்க விலையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுவதால் நுகர்வோர்களும் பயனடைவார்கள்.
திண்டுக்கல் மாவட்டம் - தங்கம்பட்டி, மணியக்காரப்பட்டி, பழனி, சத்திரப்பட்டி; திருவள்ளூர் மாவட்டம் - ஆரணி; கிருஷ்ணகிரி மாவட்டம் - பாகலூர், பேரிகை; விழுப்புரம் மாவட்டம் - திண்டிவனம், வெள்ளிமலை; நாமக்கல் மாவட்டம் - கொல்லி மலை; நீலகிரி மாவட்டம் போன்ற காய்கறி அதிகமாக விளையும் பகுதிகளில் கூட்டுறவு சங்கங்கள் நேரடியாக காய்கறிகள் கொள்முதல் செய்யும். விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் காய்கறிகள் சென்னை, தேனாம்பேட்டை காமதேனு கூட்டுறவு சிறப்பங்காடி வளாகத்தில் குளிர்பதன அறையில் பாதுகாக்கப்படும்.
பல்வேறு பகுதிகளிலிருந்து கொள்முதல் செய்யப்படும் காய்கறிகள் சென்னை மாநகரில் தேனாம்பேட்டை, இராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, ராஜா அண்ணாமலைபுரம், வேளச்சேரி, சைதாப்பேட்டை, வில்லிவாக்கம், கீழ்ப்பாக்கம், பெரியார் நகர், கண்ணம்மா பேட்டை மற்றும் துரைப்பாக்கம் ஆகிய 11 இடங்களிலுள்ள டி.யு.சி.எஸ். விற்பனை நிலையங்களிலும்; அண்ணா நகர், வில்லிவாக்கம் மற்றும் ஷெனாய் நகர் ஆகிய  3 இடங்களிலுள்ள பூங்கா நகர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை கடைகளிலும்; தாம்பரம் கிழக்கு, குரோம்பேட்டை, போரூர், பல்லாவரம் மற்றும் ஆலந்தூர் ஆகிய  5 இடங்களிலுள்ள காஞ்சிபுரம் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை கடைகளிலும்; மாத்தூர் மற்றும் ஆர்.வி. நகர் ஆகிய 2 இடங்களிலுள்ள வட சென்னை கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை கடைகளிலும்; அடையார் மற்றும் வண்ணாரப்பேட்டை ஆகிய  2 இடங்களிலுள்ள தொடக்க கூட்டுறவு பண்டகசாலை கடைகளிலும்; அண்ணா நகர், நந்தனம், கீழ்ப்பாக்கம், கோபாலபுரம், இந்திரா நகர் மற்றும் சூளைமேடு ஆகிய  6 இடங்களிலுள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கடைகளிலும் என மொத்தம்  29 கடைகள் மூலம் விற்பனை செய்யப்படும். மேலும், மயிலாப்பூர் மற்றும் கோயம்பேடு ஆகிய  இடங்களில் டி.யு.சி.எஸ். நிர்வாகத்தின் கீழ் இயங்கும் 2 நடமாடும் கடைகள் மூலமாகவும் காய்கறிகள் விற்பனை செய்யப்படும்.
கூட்டுறவு சங்கங்களால் விவசாயிகளிடமிருந்து நேரடியாகக் கொள்முதல் செய்யப்படும் உருளைக் கிழங்கு, வெங்காயம், தக்காளி, கத்திரிக்காய், வெண்டைக்காய், முட்டைக்கோசு, பீன்ஸ், கேரட், பீட்ரூட், முருங்கை, பச்சை மிளகாய், தேங்காய், வாழைக்காய் போன்ற 31 வகையான காய்கறிகள் வெளி அங்காடி விலையைவிடக் குறைந்த விலைக்கு விற்கப்படும்.

இந்த நிகழ்ச்சியில், கூட்டுறவுத் துறை அமைச்சர், உணவுத் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைச் செயலாளர், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad