புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஆக., 2013





             "தலைவா... வா'ன்னா அவ்வளவு சீக்கிரம் வந்திட முடியுமா? வரத்தான் விட்டுடுவாங்களா? தடை தாண்டு வதற்குள் தலைசுத்தி விட்டது "தலைவா' விஜய்க்கு!

ஏன் இத்தனை தடை? விடை தேடி விசாரணையில் இறங்கினோம்.

கடந்த ஜூலை 20 தேதியிட்ட "நக்கீரன்' அட்டைப்படக் கட்டுரையில் அரசியல் "டச்'சுடன் எம்.ஜி.ஆர். பாணியில் விஜய்யின் "தலைவா' படம் எடுக்கப்பட்டிருப்பது பற்றி எழுதியதோடு இதனால் படத்துக்கு சிக்கல் வரும் என்று குறிப்பிட்டிருந்தோம்.

இந்நிலையில் இரண்டு வாரங்களுக்கு முன்பு படத்தை தணிக்கைக் குழுவிற்கு அனுப்பியிருந்தனர்.

"படத்தில் வன்முறை காட்சிகள் இருப்பதால் "யு/ஏ' சான்றிதழ்தான் தரமுடியும்!' என தணிக்கைக் குழு சொன்னது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரிவைஸிங் கமிட்டிக்கு அப்ளை செய்தது படக்குழு! அங்கும் சில காட்சிகளை வெட்டினால் "யு' இல்லேன்னா "யு/ஏ' சான்றுதான் எனச் சொல்லிவிட்டனர். "யு' இருந்தால்தான் வரிவிலக்கு கிடைக்கும். இதனால் வெட்டிக் கொள்ள சம்மதித்து "யு' சான்றிதழ் பெற்றனர்.


முதலில் இந்தப் படத்தை தணிக்கைக் குழுவினர் பார்த்தபோதே மறைமுக மாக ஆளும் கட்சி அட் டாக்குடன் சில வசனங் கள் இருப்பதாக யூகித்த சென்ஸார் உறுப்பினர்கள் சிலர் "இது சிக்கலை உண்டாக்குமே. அதை அவாய்ட் பண்ணுங்களேன்!' எனச் சொன்னார்களாம்.

"அதை தவிர்த்து விடுகிறோம்' எனச் சொல்லியிருக்கிறார்கள் படத் தரப்பில். இந்த விஷயம் உளவுத் துறைக்கு எட்ட... அவர்கள் அரசுக்கு "நோட்' அனுப்பிவிட்டனர்.

"எத்தனையோ பேருக்கு இந்த சீட்டை குடுத்திருக்கீங்க... இந்த முறை என்னை "ட்ரை'ப் பண்ணிப் பாருங்களேன்!' என விஜய் சொல்வது போல் ஒரு வசனம் வருமாம். அதோடு, குடிநீர், மின்வெட்டு, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை பிரச்சினைகளை விமர்சிப்பது போலவும் இலவசங்கள் கொடுப்பதை கிண்டலடிப்பது போலவும் காட்சிகள் இருந்துள்ளன.

அங்குதான் ஆரம்பமானது பிரச்சினை.

"வரிவிலக்கு பெற தகுதியான படமா?' என்பதை தீர்மானிக்க, ஆர்.வி.உதயகுமார், எல்.ஆர். ஈஸ்வரி, எம்.என்.ராஜம், வி.எஸ்.ராகவன் உள்ளிட்டவர்களைக் கொண்ட ஒரு குழுவை இரண்டாண்டுகளுக்கு முன் அமைத்தது ஜெ. அரசு. "தலைவா' படம் ரம்ஜானுக்கு ரிலீஸ் என்பதால் அந்த குழுவிற்கு படத்தைப் போட்டுக் காட்டி வரிவிலக்குப் பெற முயற்சி எடுத்தார்கள். அரசியல் சலசலப்பில் "தலைவா' சிக்கியதால் சிக்னல் கிடைத்தபிறகு படத்தைப் பார்க்கலாம் என முடிவெடுத்து படத்தைப் பார்க்காமலே இழுத்தடித்தது வரி விலக்கு குழு.

ரிலீஸ் தேதி நெருங்க... நெருங்க பதட்டம் ஏற்பட்டது. வரிவிலக்கு இல்லையென்றால்... தியேட்டர் காரர்களின் லாபம் குறையும். அதனால் விநியோகஸ்தர் களிடம் கை வைப்பார்கள். விநியோகஸ்தர்களோ படத்தின் வெளியீட்டு உரிமையை வாங்கியிருக்கும் "வேந்தர் மூவீஸ்' மதனை நெருக்குவார்கள். மதனோ படத்தின் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயினை நெருக்குவார். ஜெயின் விஜய்யை நெருக்குவார். இதனால்தான் பதட்டம். வரிவிலக்கு கிடைக்காவிட்டால் படவெளியீட்டை தள்ளி வைக்க வேண்டிய சூழல்.

இந்நிலையில் திரையரங்க உரிமையாளர் சம்மேளனத்தின் தலைவர் "அபிராமி' ராமநாதனிடம் "படம் பார்த்தீங்களா? அரசியல் அட்டாக் இருக்காமே?' என கலைராஜன் எம்.எல்.ஏ. விசாரித்தாராம். அன்றைய தினமே "தலைவா' படத்தைத் திரையிடும் சென்னை ஐநாக்ஸ் தியேட்டருக்கு மிரட்டல் கடிதம் வந்ததாக போலீஸில் தியேட்டர் நிர்வா கம் புகார் செய்தது. "தலைவா' படத்தை திரையிட் டால் தியேட்டரில் குண்டு வெடிக்கும்' இப்படிக்கு தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் மாணவர் புரட்சிப்படை' என அந்த மிரட்டல் கடிதத்தில் இருந்ததாக ஐநாக்ஸ் மேனேஜர் விக்னேஷ் மயிலாப்பூர் காவல் நிலை யத்தில் புகார் அளித்திருக்கிறார். இது போல் அபிராமி, சத்யம் உள்ளிட்ட திரையரங்கங்களுக்கும் மிரட்டல் கடிதம் வந்ததாக சொல்லப்படுகிறது.

7-ந்தேதியன்று தமிழ்நாடு முழுக்க டிக்கெட் ரிசர்வேஷன் தொடங்கியது. ஆனால் காவல்துறை வட்டாரங்களிலிருந்து "படத்தை இப்போதைக்கு ரிலீஸ்  செய்ய வேண்டாம்' என வாய்மொழி உத்தரவு வர, இதை யடுத்தே ரிசர்வேஷன் நிறுத்தப்பட்டது. 

இதையடுத்து திரையரங்க உரிமையாளர் சம்மேளன தலைவர் "அபிராமி' ராமநாதன், திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் "ரோஹிணி' பன்னீர்செல்வம், "வேந்தர் மூவீஸ்' மதன், அதன் ஆலோசகர் "அம்மா கிரியேஷன்ஸ்' சிவா உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் ஃபிலிம் சேம்பரில் கூடி விவாதித்தனர்.

"படத்திற்கு வரிவிலக்கு அளித்தால் படவெளி யீட்டுக்கு பிரச்சினை இல்லை' என முடிவு செய்துகொள்ள லாம் என்கிற முடிவுக்கு வந்தனர். அதோடு தயாரிப்பாளர் தரப்பிலும் "கொடநாடு சென்று முதல்வரை சந்திக்க முயற்சி எடுக்கிறோம்' எனவும் உறுதி தரப்பட்டது.

பட ரிலீஸுக்கு முதல்நாள் வரிவிலக்கு குழு             வினர் ஃபோர் பிரேம்ஸ் ப்ரிவியூ தியேட்டரில் படம் பார்த்தனர். ஆனாலும் வரிவிலக்கு குறித்து உறுதி செய்யப்படவில்லை. எனவே, படத்தை சிக்கலில்லாமல் திரையிட முடியுமா, எந்த நேரத்திலும் மேலிடம் எந்த முடிவை வேண்டுமானாலும் எடுக்குமே என தியேட்டர்காரர்கள் மத்தியில் பதட்டம். சிட்டியில் வைத்துள்ள "தலைவா' படத்தின் பேனர்களை எடுக்கச் சொல்லி போலீஸ் தரப்பிலிருந்து  நிர்பந்திப்பதாகவும், படத்தின் டைட்டிலையே மாற்ற வேண்டுமென மேலிடம் நெருக்கடி தருவதாகவும் கோலிவுட்டில் பரபரப்பான பேச்சு நிலவுகிறது. 

ஏன்?

விஜய் தரப்பு மீதான மேலிடத்தின் கோபம்தான்.


"தலைவா' படத் தியேட்டர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்' என்பதே போலீஸின் யோசனை என்பதுதான். படத்தின் கதை குறித்து தொடரப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிமன்றம் படத்திற்கு தடைவிதிக்கவில்லை. இதையடுத்தே "வெடிகுண்டு' சங்கதி கிளம்பியது.
ரம்ஜானை முன்னிட்டு ஸ்பெஷல் பெர்மிஷனுடன் அதிகாலை முதல் நள்ளிரவு வரை தியேட்டர்களில் ஆறு காட்சிகளுக்கு அனுமதிக்கப்பட்டது. ஏற்கனவே பதட்டம் இருப்பதால் திரையரங்க உரிமையாளர்கள், டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனர், மற்றும் மாவட்ட எஸ்.பி.க்களிடம் தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு கோரினார்கள்.

"ரம்ஜான் பண்டிகை பாதுகாப்பில்தான் நாங்க கவனம் செலுத்த முடியும். பாதுகாப்பு ரிஸ்க்கை நீங்களே எடுத்துக்கங்க' என காவல்துறை தரப்பில் சொல்லப்பட்டுள்ளது. "படம் வெளியாகாமலிருக்க என்னென்ன வகையில் நெருக்கடி கொடுக்க முடியுமோ அதையெல்லாம் செய்ங்க!' என மேலிடம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருப்பதால்தான் காவல்துறை நழுவுகிறது.

"விஜய் இவ்வளவு வில்லங்கங்களை சந்திப்பதற்கு காரணமே விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சி.தான்!' என போலீஸ் உள் வட்டாரங் களிலேயே பேசிக்கிறாங்க.

"2011 தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சியைப் பிடிக்க என் மகனின் செல்வாக்கும் காரணமாக இருந்தது. ஆனா எங்களுக்கு எந்த முக்கியத்துவமும் தராமல் செல்வாக்கு இல்லாத சரத்குமாருக்கு முக்கியத்துவம் தர்றாங்க!' என்றும் சினிமா வட்டத்தில் பேசியிருக் கிறார் எஸ்.ஏ.சி. கார்டனுக்கு அவ்வப்போது கடிதம் எழுதுவது சரத்குமாரின் வழக்கம். சமீபத்தில் சரத் அனுப்பிய கடிதத்தில் எஸ்.ஏ.சி. ஒரு முக்கியமான இடத்தில் பேசிக் கொண்டதையும் குறிப்பிட்டு எழுதினாராம். "ரஜினியை இந்தம்மா அடிக்கடி சீண்டுனாங்க. ஆனா ரஜினி அமைதியா இருந்துட்டார். ரஜினி மாதிரி விஜய் அமைதியா இருக்க மாட்டான்!' என எஸ்.ஏ.சி. பேசியதாக அந்த கடிதத்தில் குறிப்பிட்டாராம் சரத்.

அதுமட்டுமில்லாமல் சமீபகாலமாக விஜயகாந்த்துடன் நெருக்கம் பாராட்டுகிறது விஜய் தரப்பு. விஜயகாந்த் பெரிய ஹீரோவாக இருந்தபோது, விஜய் வளரும் நடிகர். தனது ஹிட் படங்களைத் தந்த எஸ்.ஏ.சிக்கு நன்றிக்கடனாக விஜய்யின் "செந்தூரப்பாண்டி' படத்தில் கெஸ்ட்ரோலில்  நடித்து விஜய்யை       பி அண்ட் சி-யில் ரீச் பண்ண உதவினார் விஜயகாந்த்.

இப்போது விஜயகாந்த்தின் சின்ன மகன் சண்முகப்பாண்டியன் ஹீரோவாக நடிக்கிறார். தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர். நடித்த "பிருந்தாவன்' என்கிற சூப்பர் ஹிட் படத்தின் கதை உரிமையை வாங்கி வைத்திருக்கிறார் விஜயகாந்த். இதில் கெஸ்ட் ரோலில் நடிக்கும்படி விஜய்யிடம் விஜயகாந்த் கேட்க... அதற்கு விஜய்யும் சம்மதித்திருப்பதாகச் சொல்லப்படு கிறது. இப்படி வரும் செய்திகளும் மேலிடத்தை எரிச்சல் பட வைத்திருக்கிறது.

"விஜய் தரப்பு சி.எம்.மை நேரில் சந்தித் தால்தான் எங்களுக்கு நிம்மதி' என "தலைவா' படத்தின் தயாரிப்பு, விநியோக, திரையரங்க புள்ளிகள் தீர்மானமாகச் சொல்லி வந்தனர்.

இதனால் விஜய்யும், எஸ்.ஏ.சி.யும் கொடநாடு செல்வார்கள் என தகவல்கள் வந்த நிலையில்... எஸ்.ஏ.சி. வேளாங்கண்ணி கோயிலுக்குச் சென்றதால் விஜய்யும், டைரக்டர் விஜய்யும் விமானம் மூலம் 8-ந்தேதி கோவை சென்றனர். அங்கிருந்து கார் மூலம் கொடநாடு கிளம்பிப் போனார்கள். ஜெ. தங்கியிருக்கும் கொடநாடு எஸ்டேட்டுக்கு முன்பாக கோடார்மடம் செக்போஸ்ட்டில் கார் வந்ததும் போலீஸார் விசாரித்தனர்.

"சி.எம்.மை சந்திக்கணும்' என விஜய் சொல்ல... "அப்பாயிண்ட்மெண்ட் இருக்கா?' என போலீஸ் கேட்க... "இல்லை... ஆனா கண்டிப்பா சந்திக்கணும்!' என விஜய் சொல்லியிருக்கிறார்.

உடனே வயர்லஸ் மூலம் தொடர்பு கொண்டு போலீஸார் கேட்க... "சந்திப்புக்கு நேரமில்லை' என விரட்டியடிக்காத குறையாக தகவல் வந்தது.

கையோடு கொண்டு சென்றிருந்த கோரிக்கை கடிதத்தை கொடுக்க வேண்டும் என விடாமல் விஜய் கேட்டுக் கொள்ள... அந்தக் கடிதம் பெறப்பட்டு கொடநாடு பங்களா செகரட்டரி நடராஜனிடம் ஒப்படைக்கப்பட்டது.

விஜய் கார் திருப்பியனுப்பப்பட்டது. இதனால் விஜய் ரொம்பவே அப்செட்.

...நாம் மேற்கொண்ட விசாரணையில் "தலைவா' படச் சிக்கலுக்கு "காரணம் ஆயிரம்' சொல்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்.

சினிமாவால் வளர்ந்தது தமிழக அரசியல். ஆனால் சினிமாவை சினிமாவாக பார்க்காமல் படங்களை வெளியிட முடியாத பதட்டங்களை உருவாக்கும் போக்கு நியாயம்தானா?

ad

ad