புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 செப்., 2013

தம்புள்ள பள்ளிவாசல் அகற்றப்படும் அபாயம்!- நிர்வாகத்தினர் கவலை
மாத்தளை மாவட்டம் தம்புள்ள புனித பூமி அபிவிருத்தி திட்டம் தொடர்பாக புதிதாக தயாரிக்கப்பட்டுள்ள வரை படத்திலும் தம்புள்ள ஹைரியா பள்ளிவாசலை அகற்றுவதற்கு அடையாளமிடப்பட்டுள்ளதாக நிர்வாகம் கவலை வெளியிட்டுள்ளது.
அந்தப் பிரதேசத்திலுள்ள பௌத்த விகாரையொன்றை மையப்படுத்தி, பெருநிலப்பரப்புப் பகுதியொன்று புனித பூமியாக தற்போது நாடு நகர அபிவிருத்தி அதிகார வாரியத்தினால் அடையாளமிடப்பட்டுள்ளதாகப் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் தமிழோசையிடம் தெரிவித்தனர்.
கடந்த வருடம் பௌத்த கடும்போக்காளர்களினால் இந்த பள்ளிவாசலும் தாக்குதலுக்குள்ளாகியிருந்தது.
ஏற்கனவே அடையாளமிடப்பட்ட பகுதியில் மக்கள் குடியிருப்புகளும், கட்டிடங்களும், நாடு நகர அபிவிருத்தி அதிகார வாரியத்தினால் சில வாரங்களுக்கு முன்னர் அகற்றப்பட்டு அந்தப் பகுதியில் அபிவிருத்தி பணிகள் நடைபெற்று வருகின்றன.
புதிதாக தயாரிக்கப்பட்டுள்ள வரை படத்தில், பள்ளிவாசலை ஊடறுத்து 110 அடி அகலமான நான்கு வழி நெடுஞ்சாலையொன்றை நிர்மாணிக்கும் வகையில் அடையாளமிடப்பட்டுள்ளதாக பள்ளிவாசல் நிர்வாகம் கூறுகின்றது.
ஏற்கனவே யாழ்ப்பாணம் - கண்டி ஏ-9 நெடுஞ்சாலை சாலை போக்குவரத்திற்கு வசதியாக உள்ளது.
அப்படி இருந்தும் புதிதாக மற்றுமோர் நெடுஞ்சாலையை நிர்மாணிக்க உத்தேசித்திருப்பதானது அந்தப் பகுதியில் குடியிருக்கும் தமிழர்களையும், முஸ்லிம்களையும் வெளியேற்றுவதற்கான ஒரு திட்டமிட்ட செயற்பாடாகவே கருத வேண்டியிருப்பதாக பள்ளிவாசல் நிர்வாகத்தை சேர்ந்த எஸ். வை. எம். சலிம்தீன் கூறுகின்றார்.
28 தமிழ் குடும்பங்கள் நாடு நகர அபிவிருத்தி வாரியத்தினால் தலா ஒரு இலட்சம் ருபாய் கொடுப்பனவு வழங்கி வெளியேற்றப்பட்டுள்ளார்கள் என்றும், அதன் காரணமாக நிரந்தர குடியிருப்புகளை இழந்த நிலையில் இக்குடும்பங்கள் தற்போது நிர்கதியாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
சில மாதங்களுக்கு முன்னர் கூட இந்தப் பிரச்சினை ஏற்பட்ட போது ஆளும் கட்சியிலுள்ள முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் பள்ளிவாசல் அகற்றப்படமாட்டாது என்ற உத்தரவாதத்தையும், உறுதிமொழியையும் ஜனாதிபதி தங்களுக்கு வழங்கியுள்ளதாக பகிரங்கமாக அறிவித்திருந்தார்கள் எனவும் சலீம்தீன் சுட்டிக்காட்டினார்.
இந்தப் பிரச்சினைக்கு ஜனாதிபதியினால் மட்டுமே தீர்வு காண முடியும் என்றும் அவர் மேலும் குறிப்பிடுகின்றார்.
இது தொடர்பாக மத விவகார அமைச்சு அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு கருத்தைப் பெற மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை என தமிழோசை தெரிவித்துள்ளது.

ad

ad