புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 அக்., 2013

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது: தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்
 
இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்பதை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் 24.10.2013 வியாழக்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த  தீர்மானத்தை தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா முன்மொழிந்தார்.

அப்போது, 2009 ஆம் ஆண்டு, இலங்கை உள்நாட்டுப் போர் உச்சக் கட்டத்தில் இருந்த நிலையில் சர்வதேச சட்டம் மற்றும் ஜெனிவா ஒப்பந்தத்தில் உள்ள போர் விதிமுறைகளை முற்றிலும் மீறி, லட்சக்கணக்கான அப்பாவி இலங்கைத் தமிழர்களை கொன்று குவித்து ஒரு இனப் படுகொலையை இலங்கை அரசாங்கம் நடத்தியது.
இலங்கை அரசின், அராஜகச் செயலைக் கண்டித்து தமிழ்நாட்டில் அனைத்துத் தரப்பினரும் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இலங்கை நாட்டிற்கு எதிராக உலகம் முழுவதிலிருந்தும் கண்டனக் குரல்கள் எழுப்பப்பட்டன.
எத்தனையோ கண்டனங்கள், அழுத்தங்களையும் கொடுத்தும், இலங்கை அரசு அங்கு வாழும் தமிழர்களுக்குத் தேவையான மறுவாழ்வு பணிகளை சரிவர மேற்கொள்ளவில்லை என்றும், தமிழர்கள் இரண்டாம் தர குடிமக்களாக கருதப்படுவது தொடர்கிறது என்றும் தகவல்கள் வரப் பெற்றன. இது மட்டுமல்லாமல் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொடுமைகள் குறித்து புதிய ஆதாரங்களை ஊடகங்கள் வெளியிட்டன. இதன் காரணமாக ஒட்டுமொத்த தமிழ் நாடே கொதித்தது.
இந்தச் சூழ்நிலையில், தமிழக மக்களின் உணர்வுகள் உட்பட, அனைத்து காரணிகளையும் பரிசீலித்து, இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் தான் கலந்து கொள்வது குறித்து ஒரு முடிவு எடுக்கப்படும் என்று பிரதமர் தெரிவித்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. இந்த காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று தமிழக மக்கள் வலியுறுத்தி வரும் சூழ்நிலையில், பிரதமர் தன்னுடைய பங்கேற்பு பற்றி மட்டும் கருத்து தெரிவித்துள்ளது தமிழக மக்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.
காமன்வெல்த் நாடுகளின் தலைவரான இரண்டாம் ராணி எலிசபெத் அவர்களால் காமன்வெல்த் நாளான 11.3.2013 அன்று கையெழுத்திடப்பட்ட காமன்வெல்த் சாசனத்தில், மனித உரிமைகள் என்ற தலைப்பின் கீழ், “மனித உரிமைகள் குறித்த பொதுவான பிரகடனம், இதர தொடர்புடைய மனித உரிமைகள் குறித்த உடன்பாடுகள் மற்றும் இதர சர்வதேச ஆவணங்கள் ஆகியவற்றை பின்பற்றுவதில் உறுதியாக இருக்கிறோம் என்றும், அமைதி, நியாயம் மற்றும் நிலையான சமூகங்கள் ஆகியவற்றின் அடிப்படையாக விளங்கும் வளர்ச்சி உரிமை உள்பட சமூக, அரசியல், பொருளாதார மற்றும் கலாச்சார சம உரிமைகளை பாதுகாக்கவும், மேம்படுத்தவும் வழிவகுக்கும் சம உரிமை மற்றும், கண்ணியத்தை எவ்வித பாகுபாடுமின்றி அனைவருக்கும் வழங்கவும் உறுதி பூணுகிறோம் என்றும், இந்த உரிமைகள் அனைத்தும் பொதுவானவை, பிரிக்க முடியாதவை, ஒன்றுக்கொன்று சார்புடையவை, ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்றும், இதில் சிலவற்றை மட்டும் தெரிந்தெடுத்து செயல்படுத்த முடியாது என்றும், காமன்வெல்த் சானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாலினம், இனம்,  நிறம், மதம், அரசியல் நம்பிக்கை, அல்லது வேறு காரணங்களுக்காக ஏற்படுத்தப்படும் வேறுபாடுகளை கடுமையாக எதிர்க்கிறோம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
ஆனால், இந்தக் கொள்கைகளுக்கும் கோட்பாடுகளுக்கும் முற்றிலும் முரணாக இலங்கை அரசு செயல்பட்டு வருகிறது.
அந்த அறிக்கையில் காமன்வெல்த் கூட்டமைப்பு தொடர்ந்து உகந்த வகையில் திகழ வேண்டுமென்றால் சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் மனித கண்ணியத்தை மதித்தல் போன்ற அடிப்படைக் கொள்கைகளின் அஸ்திவாரத்தில் அமைக்கப்பட்ட காமல்வெல்த் அமைப்பு அவற்றை நிலைநிறுத்த வேண்டும் என்று கனடா நம்புகிறது. கனடா நாட்டு மக்களால் பெரிதும் போற்றப்படும் காமன்வெல்த் நாடுகளின் இந்த முக்கியக் கொள்கைகளை நிலைநிறுத்த இலங்கை அரசு தவறிவிட்டதால்,  கனடா நாட்டு பிரதமர் என்ற முறையில் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் தான் கலந்து கொள்ளப் போவதில்லை என்று அறிவித்து இருக்கிறார்.
இவற்றை எல்லாம் சுட்டிக்காட்டி இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டினை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்றும் கோடிட்டுக்காட்டி ஒரு விரிவான கடிதத்தினை பிரதமருக்கு 17.10.2013 அன்று எழுதியுள்ளேன். தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் இதே கோரிக்கையினை வலியுறுத்தி வருகின்றன. எனினும், மத்திய அரசு இந்தப் பிரச்சனை தொடர்பாக ஒரு திடமான, தீர்க்கமான முடிவை இன்னமும் எடுக்கவில்லை.
ஒட்டுமொத்த தமிழக மக்களின் கோரிக்கைக்கு மேலும் வலு சேர்க்கும் வகையிலும், தமிழக மக்களின் உணர்வுகளைத், தெரிவிக்கும் வகையிலும், கீழ்க்காணும் தீர்மானத்தினை நான் முன்மொழிகிறேன்.
தீர்மானம்

“தமிழக மக்களின் ஒருமித்த கருத்திற்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து இந்த ஆண்டு நவம்பர் மாதம் இலங்கை நாட்டில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டினை இந்தியா முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும் என்றும்; பெயரளவிற்குக் கூட இந்திய நாட்டின் சார்பாக  பிரதிநிதிகள் அந்த மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்றும்; இது குறித்த இந்தியாவின் முடிவை உடனடியாக இலங்கை நாட்டிற்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும்; இலங்கை தமிழர்கள் சுதந்திரமாகவும், சிங்களர்களுக்கு இணையாகவும் வாழ இலங்கை அரசு  நடவடிக்கை எடுக்கும் வரை காமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து இலங்கை நாட்டை தற்காலிகமாக நீக்கி வைப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் இந்தியப் பேரரசை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது” என்னும் தீர்மானத்தினை நான் முன்மொழிகிறேன் என்று கூறினார்.

ad

ad