புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 டிச., 2013

    ஏற்காடு இடைத்தேர்தல்: 89.24 % வாக்குப்பதிவு

ஏற்காடு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு புதன்கிழமை அமைதியான முறையில் நடந்து முடிந்தது. இதில் 89.24 சதவீத வாக்குகள் பதிவாகின. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் காலை 8 மணிக்குத் தொடங்கி,
மாலை 5 மணி வரையிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்தது. பெரும்பாலான கிராமங்களில் வாக்குப்பதிவு தொடங்குவதற்குமுன்பே மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
ஏற்காடு தொகுதியின் எம்எல்ஏ (அதிமுக) பெருமாள் திடீரென இறந்ததையடுத்து டிசம்பர் 4 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்தத் தேர்தலில் அதிமுக சார்பில் மறைந்த எம்.எல்.ஏ. பெருமாளின் மனைவி பெ.சரோஜா, திமுக சார்பில் வெ.மாறன், சுயேச்சைகள் 9 பேர் உள்பட மொத்தம் 11 பேர் போட்டியிட்டனர்.
தேர்தல் பிரசாரம் கடந்த திங்கள்கிழமை (டிசம்பர் 2) மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. இந்த நிலையில், புதன்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 120 மையங்களில் 290 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
வாக்குப்பதிவு காலை 8 மணிக்குத் தொடங்கி, மாலை 5 மணி வரையிலும் விறுவிறுப்பாக நடைபெற்றது. பெரும்பாலான கிராமப்புற வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் காலை 8 மணிக்கு முன்னதாகவே நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். ஏற்காடு தொகுதி முழுவதிலும் காலை முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். மலைப் பகுதிகள், சமவெளிப் பகுதிகள் என அனைத்து இடங்களிலும் வாக்காளர்கள் பெரு வாரியாகக் குடும்பத்துடன் வந்து வாக்களித்ததால், வாக்குப்பதிவு சதவீதம் தொடர்ந்து அதிகரித்து வந்தது.
மொத்தமுள்ள 2,40,290 வாக்காளர்களில் காலை 10 மணியளவில் 18 சதவீதம்பேர் வாக்குகளைப் பதிவு செய்திருந்தனர். பகல் 12 மணியளவில் 43 சதவீதம், 2 மணியளவில் 67 சதவீதம், இறுதியில் 89.24 சதவீத வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டது.
வாக்களித்த வேட்பாளர்கள்: அதிமுக வேட்பாளர் சரோஜா, தனது குடும்பத்தினருடன் பாப்பநாயக்கன்பட்டி நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் காலை 8.40 மணிக்கு தனது வாக்கைப் பதிவு செய்தார். திமுக வேட்பாளர் மாறன், தனது கட்சி நிர்வாகிகளுடன் சென்று பூவனூர் தொடக்கப்பள்ளியில் காலை 8.05 மணிக்கு தனது வாக்கைப் பதிவு செய்தார்.
கைதிகள் தபால் வாக்கு: குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இரு கைதிகள் தபால் மூலம் வாக்குப் பதிவு செய்தனர். இந்த "சீல்' இடப்பட்ட தபால் உறைகள், ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த தபால் வாக்குப் பெட்டியில் சிறைக்காவலர்கள் மூலம் போடப்பட்டன.
போலீஸ் பாதுகாப்பு:தேர்தலையொட்டி அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் துணை ராணுவத்தினர், தொழில் பாதுகாப்புப் படையினர், உள்ளூர் காவல் துறையினர் உள்ளிட்ட சுமார் 3 ஆயிரம் வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும், வாக்குச் சாவடி நிகழ்வுகள் முழுவதும் வெப் கேமராக்கள் மூலம் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து நேரடியாகக் கண்காணிக்கப்பட்டன.
முதல்முறையாக "நோட்டா': எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பாத வாக்காளர்கள் தங்கள் கருத்தைப் பதிவு செய்யும்வகையில் 'நோட்டா' பதிவு நடைமுறையை தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து தமிழகத்தில் முதன்முறையாக இந்தத் தேர்தலில் நோட்டா பதிவு அறிமுகம் செய்யப்பட்டது. இதன்படி வாக்குப்பதிவு இயந்திரத்தில் இருந்த 11 வேட்பாளர்களின் பெயர்கள் கொண்ட பொத்தானுக்கு அடுத்தபடியாக "நோட்டா' பொத்தான் அமைக்கப்பட்டிருந்தது.
குளறுபடிகள் இல்லை: வாக்குப்பதிவின் போது, எந்தவித வன்முறைச் சம்பவங்களோ, மோதல்களோ, வாக்குப்பதிவு இயந்திரக் கோளாறுகள் உள்ளிட்ட குளறுபடிகளோ பெரிய அளவில் நடைபெறவில்லை. எதிர்பார்த்ததைக் காட்டிலும் மிகவும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்து முடிந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாக்குப்பதிவு முடிவடைந்ததும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மூடியிட்டு சீல் வைக்கப்பட்டன. பின்னர், அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களும் பலத்த பாதுகாப்புடன் சேலம் அஸ்தம்பட்டி சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.
வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. அன்று பிற்பகலுக்குள் தேர்தல் முடிவுகள் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரலாறு காணாத வாக்குப்பதிவு
தமிழகத்தில் நடந்த இடைத்தேர்தல்களில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக 89.24 சதவீத வாக்குகள் ஏற்காடு தொகுதியில் பதிவாகியுள்ளன. இதற்குமுன்பாக, திமுக ஆட்சிக் காலத்தில் 2009-ஆம் ஆண்டில் நடந்த மதுரை திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலில் அதிகபட்சமாக 89 சதவீத வாக்குகள் பதிவாகின.
அதிமுக ஆட்சியில் நடந்த இடைத்தேர்தல்களில் 2011-இல் திருச்சி மேற்குத் தொகுதியில் 60 சதவீத வாக்குகள் பதிவாகின. 2012-ஆம் ஆண்டு மார்ச் மாதம், சங்கரன்கோவில் தொகுதிக்கான தேர்தலில் 77.5 சதவீதமும், அதே ஆண்டு ஜூனில் புதுக்கோட்டை தொகுதிக்கான தேர்தலில் 73 சதவீத வாக்குகளும் பதிவாகின.

ad

ad