புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 மார்., 2014

ப்ரீபெய்டு கூட்டணி வில்லன்கள்...ஒரு முழு நீள  அலசல் 
வாக்கு வியாபாரிகளின் சுயரூபம்!
'அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ என்று நடிகர் கவுண்டமணி பேசியது சாதாரண வசனம் இல்லை என்பது, முன்பு எப்போதையும்விட இப்போது தெள்ளத்தெளிவாகப் புரிகிறது. இருட்டிய பொழுது விடிவதற்குள், இந்தக் கூட்டணியில் இருந்து
அந்தக் கூட்டணிக்கு இடம் மாறிவிடுகின்றன கட்சிகள். நான்கு கடைகளில் விலை விசாரித்து, எங்கு விலை குறைவாக இருக்கிறதோ அந்தக் கடையில் ஒரு பொருளை வாங்குவதைப் போல, எல்லாக் கூட்டணிகளுடனும் சீட் மற்றும் ரேட் பேரம் நடத்தி, எங்கு அதிகம் கிடைக்கிறதோ, அந்தப் பக்கம் ஒதுங்குகிறார்கள்.நன்றி விகடன்
இங்கு எல்லாமே சாதாரணம். நேற்று வரை ஜெயலலிதாவிடம் சரண் அடைந்திருந்த கம்யூனிஸ்ட்களுக்கு, திடீரென தாங்கள் ஒரு தேசியக் கட்சி என்பதும், தங்களுக்குத் தனித்த வாக்கு வங்கி உண்டு என்பதும் நினைவுக்கு வரும். மோடி அலை வீசுவதாகப் பேசிக்கொண்டே விஜயகாந்த் பின்னால் லொங்கு, லொங்கு என அலைவார்கள் பா.ஜ.க-வினர். அவரோ கடைசி நேரம் வரை ஒன்றும் சொல்லாமல் இருந்துவிட்டுக் கிளம்பப் போகும் நேரத்தில் பஸ்ஸில் ஏறி, 'எல்லாமே ஜன்னல் ஓர சீட்டாதான் வேணும். இல்லைன்னா நான் பக்கத்து பஸ்ல ஏறிடுவேன்’ என்று முரண்டு பிடிப்பார். பக்கத்து பஸ் ஓட்டுநரோ, 'வந்தா ஏறிக்கலாம். நாங்க பைபாஸ் வழியாப் போறோம்’ என்று ஹார்ன் அடித்து அழைத்தபடியே இருப்பார். என்ன கேலிக்கூத்து இது?
மக்களை இளிச்சவாயர்களாகவும், மடையர்களாகவும் கருதி அரசியல் கட்சிகள் நடத்தும் இந்த இழிவான கூட்டணி பேரம் சந்தர்ப்ப வாதமாகவும் சகிக்க முடியாததாகவும் இருக்கின்றன. தமிழகத் தேர்தல் களத்தில் கேட்பது வெறும் பேரம் பேசும் கூச்சல்கள் மட்டுமே. கொள்கை என்பது கடுகு அளவுக்குக்கூட இல்லை. முன்பு நான்கைந்து கட்சிகள் கூட்டுச் சேர்கின்றன என்றால், 'குறைந்தபட்சப் பொதுச் செயல் திட்டம்’ என ஒன்றை வரையறுப்பார்கள். இப்போது அரசியல் கட்சிகளிடம் உள்ள ஒரே குறைந்தபட்சத் திட்டம், அதிகபட்சத் தொகுதிகளைப் பெறுவதுதான்!
விஜயகாந்த் சாமர்த்தியசாலியா..? திருமா ஏமாளியா..?
விஜயகாந்தை எடுத்துக்கொள்வோம். உளுந்தூர்பேட்டை 'ஊழல் எதிர்ப்பு’ மாநாட்டில், 'தொண்டர்களிடம் கேட்டு கூட்டணியை முடிவுசெய்வோம்’ என்று சொன்னார். மாநாட்டில், 'தனித்துப் போட்டியிட வேண்டும்’ என்று தொண்டர்கள் பெருவாரியாக ஆதரவு தெரிவித்தனர். ஆனால் விஜயகாந்தோ, 'இருந்தாலும் தலைவர்கள் வேற முடிவு எடுத்தாலும் நீங்க ஏத்துக்கணும்’ என்றார். இப்போது கூட்டணி ரயிலைத் தாறுமாறு தடத்தில் ஓட்டிக்கொண்டிருக்கிறார்.
முடிவை எடுத்துவைத்துக்கொண்டு பிறகு எதற்கு, 'தொண்டர்களைக் கேட்டு முடிவு எடுப்போம்’ என்ற நடிப்பு? அந்த முடிவையாவது வேகமாக எடுத்தாரா? அதுவும் இல்லை. காங்கிரஸ், பா.ஜ.க., ஆகிய இரண்டு தேசியக் கட்சிகளையும் லோ, லோ என்று பின்னாலேயே அலையவிட்டார். பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்தார்; மோடிக்குப் பூங்கொத்துக் கொடுத்தார்; சிங்கப்பூர் போனார். கடைசி வரையிலும் பா.ஜ.க-வினரைப் பதற்றத்திலேயே வைத்திருந்தார்.
பா.ஜ.க. கூட்டணிக்கு விஜயகாந்தை இழுத்து வரவேண்டும் என்று படாதபாடுபட்ட தமிழருவி மணியனே கோபப்பட்டு, 'மாட்டுத் தரகரைப் போல விஜயகாந்த் செயல்படுகிறார்’ என்று சொல்லும் அளவுக்கு விஜயகாந்த் கேசரி கிண்டினார். விடிந்தால் கல்யாணம்... நள்ளிரவு தாண்டியும், 'வரதட்சணையில் நான்கு பவுன் குறையுது’ என்று பேரம் பேசுவது சாமர்த்தியமா? அரசியல் சந்தர்ப்பவாதமா?
விஜயகாந்த் இப்படி நான்கு பக்கமும் கை நீட்டுவதை அறிந்திருந்தும், 'அவர் தி.மு.க. கூட்டணிக்கு வரவேண்டும்’ என்று அழைப்புவிடுத்தபடியே இருந்தார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன். விஜயகாந்துக்கு மட்டுமா... 'காங்கிரஸ் கட்சி, தி.மு.க. கூட்டணிக்கு வந்தால் இந்த அணி பலமாகும்’ என்று வெளிப்படையாக காங்கிரஸுக்கு அழைப்புவிடுத்தவரும் அவர்தான். கடைசியில் விடுதலைச் சிறுத்தைகளுக்கு ஒரு தொகுதி மட்டும் ஒதுக்கப்பட்டவுடன், 'காங்கிரஸ் கூட்டணியில் இருந்தபோது தி.மு.க. மீது எரியப்பட்ட கற்களை எல்லாம் நாங்கள்தான் சுமந்தோம்’ என்றார். அதாவது ஈழப் போரில் காங்கிரஸின் பங்கு என்பதை வைத்து, கூட்டணியில் இருந்த தி.மு.க-வையும் கருணாநிதியையும் பலரும் விமர்சித்தபோது, 'அதை நான்தான் சுமந்தேன்’ என்கிறார் திருமாவளவன். அப்படி கல்லடிபடக் காரணமான காங்கிரஸை ஏன் மறுபடியும் கூட்டணிக்கு அழைத்தார்? எந்தக் கொள்கையின் அடிப்படையில் அந்த அழைப்பு விடுக்கப் பட்டது?
ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டதும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடத்தினர். அப்போது, 'ஏன் ஒரு தொகுதியை ஏற்றோம்?’ என்று விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் ஒரு விளக்கம் சொல்லப்பட்டது. அதில், 'அ.தி.மு.க. கூட்டணியில் கதவுகள் மூடப்பட்டு விட்டன. பா.ஜ.க-வுடையது மதவாதக் கூட்டணி என்பதாலும், அதில் பா.ம.க. இருப்பதாலும் அந்தப் பக்கம் போக முடியாது. இடதுசாரிகளை ஒருங்கிணைத்து தனி அணி அமைக்கலாம் என்றால், அது வாக்குகள் சிதறவே உதவும். கோபப்பட்டு தி.மு.க. கூட்டணியைவிட்டு வெளியேறுவதால் நாம் அரசியலில் தனிமைப் படுவோம். இதைத்தான் சாதியவாத சக்திகள் எதிர்பார்க்கின்றன. ஆகவேதான், ஒரு தொகு தியை ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று’ என்று சொல்லப்பட்டிருந்தது.
பிறகு இன்னொரு தொகுதி கொடுக்கப்பட்டுவிட்டது என்பது வேறு. ஆனால், திடீரென அ.தி.மு.க. கூட்டணிக்குப் போவதைப் பற்றி இவர்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லை. அங்கு கதவு மூடப்பட்டுவிட்டது என்பது மட்டுமே இவர்கள் முன் இருக்கும் தடை!
இடதுசாரிகளின் அவலம்!
ஒருவகையில் விடுதலைச் சிறுத்தைகளேனும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி இரண்டு தொகுதி களைப் பெற்றுவிட்டனர். ஆனால், 'போர்க்குணம்’மிக்க இடதுசாரிகளோ அவமானகரமான முறையில் கடைசி நேரத்தில் வெளியேற்றப்பட்டனர். அ.தி.மு.க. மாவட்டச் செயலாளரைவிடவும் விசுவாசமாக இருந்த
தா.பாண்டியனைக் கழற்றிவிட உண்மையில் கல்நெஞ்சம் வேண்டும். அது ஜெயலலிதாவுக்கு இருக்கிறது என்பதல்ல செய்தி. கடைசிப் பந்தி வரையிலும் உட்கார வைத்து, 'சாப்பாடு தீர்ந்துடுச்சு’ என்று அனுப்பி வைக்கப்பட்ட இடது, வலது கம்யூனிஸ்ட்கள் தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுவிட்டது என்று சொல்லக்கூடத் திராணி அற்றவர்களாக இருக்கின்றனர்.
'முதல்வரை யாரோ தவறாக வழிநடத்து கிறார்கள்’ என்கிறார் டி.கே.ரங்கராஜன். 'கூட்டணி முறிய நாங்கள் காரணம் அல்ல’ என்கிறார் பிரகாஷ் காரத். எதிர்ப்பைக்கூட பணிவுடன் தெரிவிக்கும் நிலையில்தான் இருக்கிறார்கள் கம்யூனிஸ்ட்கள்.
வெளியேறிய கம்யூனிஸ்ட்கள், தி.மு.க-வுடன் சேராததற்கு 2ஜி அலைக்கற்றை ஊழலை ஒரு காரணமாகச் சொல்கின்றனர். அந்த வழக்காவது விசாரணை அளவில்தான் இருக்கிறது. ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பே வரப்போகிறது. எனில், எந்த அடிப்படையில் இத்தனை ஆண்டுகளாக அ.தி.மு.க. பக்கம் நின்றனர் இடதுசாரிகள்?
இப்படி ஒரு கேள்விக்குச் சில ஆண்டுகளுக்கு முன்பு தா.பாண்டியன், 'தேர்தல் கால உறவுக்குக் கூட்டணி என்று அர்த்தம் கிடையாது. அது அவ்வப்போதைய அரசியல் நிலைமைக்கு ஏற்ப அமைக்கப்படும் வியூகம். இணைந்து போட்டியிட்டுத் தேர்தலைச் சந்தித்தோம் என்ற ஒரே காரணத்துக்காகத் தொடர்ந்து அவர்களை ஆதரிக்க வேண்டும் என்று பொருள் இல்லை’ என்று சொன்னார். தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகளில் நேர்த்தியாக வெளிப்படுத்துவதாலேயே, அரசியல் சந்தர்ப்பவாதம், சாமர்த்தியம் ஆகிவிடாது!
முன்னே ஒன்று... பின்னே ஒன்று!
தேர்தலுக்கு முந்தையக் கூட்டணி வேறு; தேர்தலுக்குப் பிந்தையக் கூட்டணி வேறு என்பது, கடந்த பல ஆண்டுகளாக நிறுவப்பட்டுவிட்டது. காதலிக்க ஒரு துணை, கல்யாணத்துக்கு வேறு துணை என்பதைப் போல இது. காதலில் ஏதோ சிக்கல் வருகிறது, அதனால் பிரிகிறார்கள் என்றால் பரவாயில்லை. ஆனால், இவர்கள் தெளிவாக 'தேர்தலுக்கு முன்பு மட்டும்தான் இந்தக் கூட்டணி’ என்று பேசி வைத்துக்கொண்டு இணைகின்றனர். யாரை விமர்சித்து ஓட்டுப் பெற்றார்களோ... தேர்தல் முடிந்ததும் அதே கட்சிக்கு ஆதரவு தருகிறார்கள். இத்தகைய தங்களின் பச்சோந்தித்தனமான அரசியலை, 'அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை; நிரந்தரப் பகைவனும் இல்லை’ என்று கூச்சமே இல்லாமல் நியாயப்படுத்துகின்றனர்.
இப்படி இவர்கள் கொள்கை அற்றவர்களாக இருப்பது அவர்களின் சொந்தச் சிக்கலாக முடியக்கூடியது அல்ல. இவர்கள் மக்களை மதிப்பீடுகள் அற்ற மந்தைகளாக மாற்றுகின்றனர். 'எதுக்கும் யார்கூடவும் சேர்ந்துக்கலாம். வேலை முடிஞ்சாப் போதும்’ என்று கருதும் காரியவாதிகளாக மனமாற்றம் செய்கின்றனர். முக்கியமாக, 'கொள்கை’ என்ற ஒன்று அவசியமற்றது என்ற கருத்தை இவர்கள் பரப்பி வைத்துள்ளனர். இது மிக, மிக ஆபத்தானது. எதிலும் பிடிமானமற்ற மொக்கைகளாக குடிமக்கள் இருக்க வேண்டும் என்று இவர்கள் கருதுகின்றனர்.
அப்படி மக்களைக் கொள்கையற்றக் கூடுகளாக மாற்றினால்தான், தாங்கள் அங்கும் இங்கும் குரங்குகளைப் போல தாவும்போது, அதை இயல்பு போல ஏற்றுக்கொள்வார்கள். இல்லை என்றால்தான் மக்கள் சுதாரித்துவிடுவார்களே! இத்தகைய இவர்களின் கொள்கை நீக்கம் செய்யப்பட்ட அரசியல் என்பது, மொத்த சமூக இயக்கத்தையுமே பாதிக்கிறது. விளைவு... அரசியல் என்றாலே தீண்டத்தகாத கெட்டவார்த்தையாக மாற்றப் பட்டுவிட்டது.
விஜயகாந்த், இதற்குத் தெளிவான உதாரணம். கட்சி ஆரம்பித்த காலத்தில் இருந்து இதுவரை பலமுறை பல சந்தர்ப்பங்களில் அவரிடம் 'உங்கள் கட்சியின் கொள்கை என்ன?’ என்று கேட்கப்பட்டிருக்கிறது. ஆரம்பத்தில் 'வறுமை ஒழிப்பு, வல்லரசு’ என்று வசனம் பேசிய அவர் பிறகு, 'என்னாங்க பெரிய கொள்கை? எல்லாக் கட்சியும் கொள்கைப்படித்தான் இயங்கிட்டு இருக்கா?’ என்று கேட்டார். உண்மைதானே..! எந்தக் கட்சிதான் இங்கு கொள்கை அடிப்படையில் செயல்படுகிறது? 'யாருக்கும் வெட்கம் இல்லை’ என்று சொல்வதைப் போல, இங்கு யாருக்கும் கொள்கை இல்லை!
பா.ம.க-வை எடுத்துக் கொள்வோம். கட்சித் தொடங்கப்பட்ட நாளில் இருந்து எத்தனை முறை அணி மாறியிருக்கிறார்கள் என்று அத்தனை சுலபத்தில் கணக்கிட்டுவிட முடியாது. இந்தச் சூழலில், கடந்த மூன்று ஆண்டுகளாக பா.ம.க. பின்னடைவைச் சந்தித்துவரும் நிலையில்,
ஓர் ஆண்டுக்கு முன்பு மருத்துவர் ராமதாஸ், 'நாங்கள் திராவிடக் கட்சிகளுடனும், தேசியக் கட்சிகளுடன் கூட்டணி வைக்க மாட்டோம்’ என்று அடித்துச் சொன்னார். மூன்று மாதம் கழித்து, 'நாங்கள் திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி வைக்க மாட்டோம்’ என்று சொன்னார். தேசியம் காணாமல்போயிருந்தது. இந்த நிலையில் இப்போது தேசியக் கட்சியான பா.ஜ.க. கூட்டணிக்குள், அவரது கட்சி மல்யுத்தம் நடத்திக்கொண்டிருக்கிறது. பா.ம.க-வினர் இப்போது வரை 'திராவிடக் கட்சிகள்தான் தமிழ்நாட்டைச் சீரழித்ததாக’ப் பேசி வருகிறார்கள். ஆனால், 1998-ல் இருந்து அந்தச் சீரழிவில் தாங்களும் கூட்டாளிகளாக இருந்தோம் என்பது அவர்களுக்கு மறந்துவிடுகிறது. அதுவும்போக, இவர்களின் கணக்கில் தி.மு.க-வும் அ.தி.மு.க-வும்தான் திராவிடக் கட்சிகள் போல. இப்போது பா.ஜ.க. கூட்டணியில் இருக்கும் ம.தி.மு.க. என்ற திராவிடக் கட்சியும், திராவிடமும், தேசியமும் இணைந்து மிரட்டும் தே.மு.தி.க-வும் எந்த அளவு கோலுக்குள் வரும் என்று தெரியவில்லை!
லட்சியத்தில் உறுதி... எங்கே?
சரி, அந்தப் பக்கம் வைகோ-வின் கதைதான் என்ன? 'ஈட்டி காட்டிடினும் மார்புக் காட்டிடும் சிங்கக்கூட்டம், அது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞர் கூட்டம்’ என்று கூட்டங்கள்தோறும் பேசும் வைகோ, எந்தக் கொள்கையின் அடிப்படையில் பா.ஜ.க. கூட்டணியில் முதல் ஆளாகத் துண்டு போட்டார்? அவரது கறுப்புத் துண்டின் ஓரத்தில் காவி நிறத்தை இணைத்துக்கொண்டிருப்பது எந்தத் திராவிடக் கொள்கையின் அடிப்படையில்?
தமிழர்களை 'திராவிடப் பொறுக்கிகள்’ என்று வார்த்தைக்கு வார்த்தை வசைபாடும் சுப்பிரமணியன் சுவாமியும், பெரியாரை மிகவும் இழிவாக அவமானப்படுத்திய ஹெச்.ராஜாவும் பா.ஜ.க-வில்தான் இருக்கிறார்கள். தங்கள் பேச்சுக்காக அவர்கள் வருத்தம்கூட தெரிவிக்கவில்லை. அவர்களை வைகோ ஏற்றுக்கொள்கிறார் என்றால், பெரியாரை அவமானப்படுத்தும்விதமாகப் பேசிய ஹெச்.ராஜாவின் கருத்தையும் ஏற்றுக்கொள்கிறாரா?
'ஈழத் தமிழர்களைக் கொன்றுகுவிக்க ஆதரவாக இருந்த காங்கிரஸை எதிர்ப்பது என்ற அடிப்படையில் இணைந்திருக்கிறோம்’ என்று சொல்லப்பட்டாலும், அதுவும் பொருத்தமற்ற பதில்தான். ஏனெனில், முள்ளிவாய்க்கால் இன அழிப்பை நிகழ்த்திய ராஜபக்ஷே அரசு மீது போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்பதைக்கூட பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். அந்தக் கேள்விக்கு 'நோ கமென்ட்ஸ்’ என்கிறார். அதைவிட முக்கியமாக, 'பழைய சம்பவங்களைக் கிளறக் கூடாது. குழிதோண்டிப் புதைத்துவிட வேண்டும்’ என்று சொல்கிறார். 2002-ம் ஆண்டு குஜராத் படுகொலைகள் குறித்து மீண்டும், மீண்டும் எல்லோரும் பேசுவது பா.ஜ.க-வுக்குத் தலைவலியாக இருப்பதால், அவர் மொத்தமாகப் 'பழசு எல்லாத்தையும் புதைக்கணும்’ என்கிறார். இந்தக் கருத்தை வைகோ, ஏற்றுக்கொள்கிறாரா? எனில், முள்ளிவாய்க்கால் படுகொலைகள் ஐந்து ஆண்டு பழசாகிவிட்டதால், அதை மறந்துவிட வேண்டுமா?
வைகோ, அப்படிச் சொல்பவர் என்று எண்ணவில்லை. ஆனால், அப்படிச் சொல்பவர்களுடன் கூட்டணி வைத்திருக்கிறாரே! என்ன விநோதம் இது!? ஒரு பக்கம் கொலைகாரனுக்குத் தண்டனை வேண்டும் என்று பேசுவதும், மறுபக்கம் கொலைகாரனை ஆதரிப்பவர்களுடன் கை கோத்துக்கொள்வதும் எவ்வளவு சந்தர்ப்பவாத செயல்? 'அரசியலில் நேர்மை, லட்சியத்தில் உறுதி’ என்பது எல்லாம் வெறுமனே பொருளற்ற சினிமா பன்ச் டயலாக்தானா?
னில், இவர்களின் அணிசேர்க்கையில் ஒரு சதவிகிதம்கூட கொள்கை இல்லை என்பது தெளிவு. இருப்பினும் தேர்தல் பிரசாரத்தில் எப்படியும் எதிர் அணியினரை வசைபாடத்தான் போகின்றனர். அப்போது திடீரென இவர்களுக்கு எதிர் அணியினர் நடத்திய கொள்ளைகளும், மக்கள் விரோதச் செயல்களும் நினைவுக்கு வரும். அதைக் கொள்கை போல பேசுவார்கள். அதாவது இவர்களுக்கு அணி சேர்வதற்கு முன்பு கொள்கைகள் கிடையாது; சேர்ந்த பிறகு கொள்கைகள் தானாக வந்துவிடும். சமையல் செய்வதற்கு முன்பு கத்திரிக்காய், புடலங்காய், வெங்காயம் என்று தனித்தனிப் பெயர். சமைத்த பிறகு அதற்குப் பெயர் கூட்டு. அதுபோல அமைத்த பிறகு, அதன் பெயர் கூட்டணி.
மொத்தத்தில் ஒரு காய்கறி சந்தையின் பேரத்தைப் போல நடைபெறுகிறது, இவர்களின் கூட்டணி பேரம். காய்கறி சந்தை என்று இதைக் குறிப்பிடுவது மிகவும் மரியாதையான வர்ணனை. பச்சையாக சொல்வதானால், இது 'அரசியல் விபசாரம்’. 'அவர், இவர்கூடப் போவாரா, இவர் அவர்கூடப் போவாரா, சீட் எத்தனை, ரேட் எவ்வளவு?’ என்பவைதான் இவர்களின் அணி சேர்க்கைக்கான அளவுகோல்கள் எனும்போது, இதை வேறு எப்படி அழைப்பது?
அரசியலில் கொள்கை குறித்து தமிழகத்தில் புகழ்பெற்ற வசனம் ஒன்று உண்டு. அறிஞர் அண்ணா சொன்னது. 'பதவி என்பது தோளில் கிடக்கும் துண்டு; கொள்கை என்பது இடுப்பில் உள்ள வேட்டி’! எனில், ஓட்டுக் கட்சி அரசியல்வாதிகளே... சற்றே குனிந்து உங்கள் இடுப்புகளைக் கவனியுங்கள். உங்கள் வேட்டிகள் அவிழ்ந்து வெகுகாலமாகின்றன!

ப்ரீபெய்டு கூட்டணி விதிமுறைகள்!
கொல்கத்தாவில் கடந்த வாரம் அண்ணா ஹசாரேவுடன் இணைந்து மம்தா பானர்ஜி நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் இப்படிச் சொன்னார்: ''இது 'ப்ரீபெய்டு’ கூட்டணியின் காலம் அல்ல; 'போஸ்ட்பெய்டு’ கூட்டணியின் காலம்!''
தேர்தல் அரசியலின் நடப்புநிலை குறித்த குறுக்குவெட்டுச் சித்திரத்தை மம்தா நமக்கு வழங்கியுள்ளார். தேர்தலுக்கு முன்பு அமைக்கப்படும் 'ப்ரீபெய்டு’ கூட்டணியாக இருந்தாலும், தேர்தலுக்குப் பிறகு அமைக்கப்படும் 'போஸ்ட்பெய்டு’ கூட்டணியாக இருந்தாலும் மொத்தத்தில் அது 'பெய்டு’ கூட்டணி என்பதே மம்தா கூற்றில் புரிந்துகொள்ளவேண்டிய முக்கியமான அம்சம். மேலும், எந்தக் காலத்திலும் தேர்தல் கூட்டணி, கொள்கைக் கூட்டணியாக இருந்தது இல்லை என்பதையும் சொல்கிறார். இதன் அடிப்படையில் ப்ரீபெய்டு செல்போன் சேவை - ப்ரீபெய்டு கூட்டணி குறித்து ஒரு சின்ன அலசல்...  
ப்ரீபெய்டுக்கு 'செல்லுபடியாகும் காலம்’ (validity time) உண்டு. அரசியல் கூட்டணிக்கும் இது உண்டு. ஆனால், செல்போன் வேலிடிட்டியை நாம் முடிவுசெய்யலாம். கூட்டணி எப்போது முறியும் என்பதை யாரும் யூகிக்க முடியாது.
 ப்ரீபெய்டுக்கு 'பேசும் நேரம்’ (talk time) உண்டு. அதாவது, எவ்வளவு ரூபாய்க்குப் பேசப்போகிறோம் என்பதை முன்கூட்டியே முடிவுசெய்யலாம். கூட்டணி பேரங்களுக்கும் இது பொருந்தும்.
 ப்ரீபெய்டில் பல திட்டங்கள் உள்ளன. திட்டத்தைப் பொறுத்து 'எவ்வளவு ரூபாய்க்குப் பேசுவது’ என்பது மாறும். கூட்டணியில் கட்சியின் பலத்தை வைத்து தொகையும் தொகுதியும் முடிவாகும்.  
 ஒருவேளை, ரீ-சார்ஜ் செய்த தொகை இடையிலேயே தீர்ந்துவிட்டால், டாப்-அப் செய்துகொள்கிறோம் இல்லையா... அதுபோல, ப்ரீபெய்டு கூட்டணியில் பிரச்னை வந்தால் ஒரு தொகுதியைக் கூடுதலாகக் கொடுத்தோ, தொகுதியை மாற்றிக்கொடுத்தோ அல்லது வேறு எதையோ கொடுத்தோ டாப்-அப் செய்துகொள்ளலாம்.
 உங்களுக்கான சிறப்புச் சலுகைகள் குறித்து அறிய *717# என்ற எண்ணுக்கு டயல் செய்வதைப் போல, ப்ரீபெய்டு கூட்டணியில் உங்களுக்கான சிறப்புச் சலுகையைப் பெற அறிக்கைகளைப் போட்டுத் தாக்க வேண்டும். அந்த அறிக்கை, கட்சியின் பலம் குறித்த வீராப்பாகவோ, 'நாங்கதான் முதலில் துண்டுபோட்டோம்’ என சீனியாரிட்டியை நிலைநாட்டுவதாகவோ இருக்கலாம்.
 இரட்டை சிம் கார்டு கொண்ட மொபைல் என்றால், குறிப்பிட்ட ஒரு நெட்வொர்க்கின் ப்ரீபெய்டு சேவையைப் பயன்படுத்திக்கொண்டே, மற்றொரு நெட்வொர்க்கின் சேவையை இன்னொரு சேனலில் பயன்படுத்தலாம். அரசியலில் ஒரு கூட்டணியில் இருந்துகொண்டே, மற்றொரு கூட்டணியுடன் பேரம் பேச முடியும்!

ad

ad