புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 மார்., 2014

உயிரிழந்த என்.எல்.சி., சாயப்பட்டறை தொழிலாளர்கள் குடும்பத்துக்கு நிவாரணம்: ஜெ. அறிவிப்பு!
நெய்வேலி என்.எல்.சி. மற்றும் பெருந்துறை சாயப்பட்டறையில் உயிரிழந்த தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில், ''நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் 17ஆம் தேதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரருக்கும், அந்த நிறுவனத்தின் ஒப்பந்த தொழிலாளியாகப் பணி புரிந்து வந்த ராஜா என்கிற ராஜ்குமார் என்பவருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த் தகராறின் போது, மத்திய தொழில் பாதுகாப்பு படை காவலர் துப்பாக்கியால் சுட்டதில் ராஜா என்கிற ராஜ்குமார் உயிரிழந்தார்.

மேலும், பெருந்துறை, சிப்காட் தொழில் மையத்தில் இயங்கி வரும் தனியார் சாயத் தொழிற்சாலை சுத்திகரிப்பு மையத்திலுள்ள கழிவுநீர் தொட்டியில் 18ஆம் தேதி மின்மோட்டார் பழுதினை நீக்க இறங்கிய போது, விஷவாயு தாக்கி, ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடியைச் ஆனந்த், நேபாளத்தைச் சேர்ந்த பீர்பகதூர், ஷிபா, விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த சசிகுமார்; ஈரோடு நகரைச் சேர்ந்த முருகன், சென்னிமலையைச் சேர்ந்த மதன்குமார், சுதாகர் ஆகிய ஏழு நபர்கள் உயிரிழந்தனர்.

தேர்தல் நடத்தை விதிகளின்படி, விருப்ப நிதியிலிருந்து அமைச்சர்கள் மற்றும் இதர அலுவலர்கள் எந்தவித மானியமோ, தொகையோ வழங்கக் கூடாது என உள்ளது. எனவே, எந்தவித நிவாரண உதவியும் என்னால் அறிவிக்கப்படவில்லை.

தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலில் இருந்தாலும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து விபத்துகள் மற்றும் இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க தடையேதுமில்லை என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.

அதன் அடிப்படையில், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் உயிரிழந்த ராஜா என்கிற ராஜ்குமார் குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாயும், பெருந்துறை, சிப்காட் தொழில் மையத்தில் இயங்கி வரும் தனியார் சாயத் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி மரணமடைந்த ஏழு நபர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் ஆணையிட்டுள்ளேன்'' எனக் கூறியுள்ளார்.

ad

ad