புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஆக., 2014

உறுதி வேண்டும்! அஞ்சும் அளவுக்கு நடவடிக்கைகள் கடுமையாக வேண்டும்! ஆனந்த விகடன்
இலங்கை அரசின் பாதுகாப்பு மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் இணையதளத்தில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இருவரையும் மிகவும் தரக்குறைவாக விமர்சித்து வெளியானது ஒரு கட்டுரை.
தமிழக மீனவர்களைப் பாதுகாக்கக் கோரி பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா எழுதிய கடிதங்களைக் கொச்சைப்படுத்தியிருக்கிறது இலங்கை அரசின் அந்த இணையதளம்.
கொதித்து எழுந்த எதிர்ப்புகளால், நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்டு, கட்டுரையை நீக்கியிருக்கிறார்கள்.
எனினும் நிகழ்ந்தது, சாதாரணத் தவறா என்ன?
இந்தியாவை இலங்கை எந்த அளவுக்கு உதாசீனமாகக் கருதுகிறது என்பதற்கான உதாரணம் இது.
இலங்கை அரசின் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியான கருத்தை, அந்த நாட்டின் அதிகாரபூர்வக் கருத்தாகத்தான் எடுத்துக்கொள்ள முடியும்.
கட்டுரையைத் திரும்பப் பெற்றிருக்கலாம்; ஆனால், விஷக் கருத்து பரப்பப்பட்டு விட்டதே!
தன் அண்டை நாட்டுத் தலைவர்களை அநாகரிகமாகச் சித்திரிக்கும் மனத்துணிவு இலங்கைக்குத் திடீர் என்று வரவில்லை.
அநாகரிகமாக நடந்துகொண்ட முந்தைய தருணங்களில் கறாராகக் கண்டிக்காமல், மென்மையாகக் கையாண்டதன் விளைவு தான் இது.
அதனால்தான் பிரதமரையும் முதலமைச்சரையுமே போகிற போக்கில் இழிவுபடுத்தி உள்ளனர்.
மனித உரிமை அமைப்புகளின் கள ஆய்வு, ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை... என அனைத்தையும் ஆணவத்துடன் புறக்கணிக்கும் இலங்கை, அதே அணுகுமுறையுடன் இந்தியாவையும் கையாள்கிறது.
சீனாவை ஒரு கேடயம் போல முன்வைத்து இந்தியாவைப் பயமுறுத்துகிறது.
இந்தப் பூச்சாண்டிக்கு அஞ்சினால், இத்தகைய குயுக்தியான வழிமுறையைத் தொடர்ந்து அனுமதித்தால், இந்தியாவின் இறையாண்மை கேலிக்கு உள்ளாகும்,  தெற்காசியப் பிராந்தியத்தில் அதன் ஆளுமையும் கேள்விக்கு உள்ளாகும்.
இலங்கையுடனான அயலுறவுக் கொள்கைகளை மறுசீரமைக்க வேண்டிய தருணம் இது.
கச்சதீவு திரும்பப் பெறப்படுவதில் இருந்து, கூலிப்படையைப் போல செயல்படும் இலங்கைக் கடற்படையைத் தடுத்து நிறுத்துவது வரை அனைத்தும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
ஒப்பந்தங்களில் மட்டுமல்ல... நடைமுறையிலும் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும்.
 'இந்திய மீனவன் மீது கை வைத்தால், இலங்கையின் மீது பொருளாதாரத் தடையே வந்துவிடும்’ என்று அஞ்சும் அளவுக்கு நடவடிக்கைகள் கடுமையாக வேண்டும்.
இலங்கையின் மன்னிப்பும், இந்தியாவின் பெருந்தன்மையும் இராமேஸ்வர மீனவனின் காயங்களுக்கு மருந்து போடாது.
அவர்களுக்குத் தேவை, அமைதியான வங்கக் கடல். அதைச் சாத்தியப்படுத்த வேண்டியது மத்திய அரசின் பொறுப்பு!

ad

ad