புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 டிச., 2015

தமிழக உளவுத்துறை ஐஜி திடீர் மாற்றம் ஏன்? பரபரப்பு தகவல்கள்

தமிழக உளவுத்துறை ஐஜி டேவிட்சன் தேவாசீர்வாதம் திடீரென்று அதிரடியாக மாற்றப்பட்டு
காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டது குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக போலீஸ் ஐஜி டேவிட்சன் தேவாசீர்வாதம், கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி உளவுப் பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டார். ஆரம்பத்தில் வேலைகளை மட்டும் கவனித்து வந்தவர், திடீரென்று அதிகாரிகளுக்கான அரசியலில் சிக்கினார். ஓய்வு பெற்ற சில உயர் போலீஸ் அதிகாரிகள் இவரை இயக்க ஆரம்பித்தனர்.

 இதனால் அவர்கள் சொல்படி கேட்க ஆரம்பித்தார். அது முதல் தனது வேலைகளை மறந்து விட்டு அதிகாரிகளை கண்காணிக்கும் வேலைக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தார். இதனால் குறிப்பிட்ட சில அதிகாரிகள் குறித்து முதல்வருக்கு அறிக்கை அளித்தார். அதில் உச்சக்கட்டமாக டிஜிபி அசோக்குமார் குறித்தும் சில தவறான தகவல்களை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார். இது முதல்வரின் கவனத்துக்கு சென்றதுமே, உளவுத்துறை ஐஜி தவறான நடவடிக்கைகளில் இறங்கிவிட்டார் என்று முதல்வர் சந்தேகப்பட ஆரம்பித்தார்.

அப்போது, தமிழக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராடத் தொடங்கின. சில பத்திரிகைகளிலும் அரசுக்கு எதிரான செய்திகள் வர ஆரம்பித்தன. உடனடியாக முக்கிய எதிர்க்கட்சி தலைவர்களின் செல்போன்கள், பத்திரிகையாளர்களின் செல்போன்களை உளவுத்துறை டேப் செய்ய உத்தரவிட்டார். அப்படி டேப் செய்தபோதுதான், திமுகவுடன் மதிமுக நெருங்கி வரத் தொடங்கியது தெரிந்தது. உடனடியாக, மதிமுகவின் முக்கிய தலைவர் ஒருவரை விருதுநகரில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரியில் வைத்து டேவிட்சன் ஒரு ஏடிஜிபியுடன் சென்று சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பு அடிக்கடி நடந்துள்ளது. அதன்பின்னர்தான் மக்கள் நலக் கூட்டணி உருவாக்கப்பட்டது.

 மேலும், தேமுதிக தலைவர் விஜயகாந்த்தையும் திமுக கூட்டணியில் சேராமல் மக்கள் நலக் கூட்டணிக்கு செல்ல வைக்க, உளவுத்துறை முயன்றது. இதற்காக, மக்கள் நலக் கூட்டணித் தலைவர்களையும் தூண்டி விட்டு, விஜயகாந்த்தை சந்திக்க வைத்தது. இது குறித்து பத்திரிகையாளர்களுக்கு உளவுத்துறை மூலமே தகவல் பெரிய அளவில் பரப்பப்பட்டது. ஆனால், இத் திட்டம் தெரிந்து விஜயகாந்த் உஷாரானதால், உளவுத்துறை திட்டம் பலிக்கவில்லை. இதுபோல் பல்வேறு அரசியல் பணிகளை டேவிட்சன் செய்து கொடுத்து வந்தார். இந்தநிலையில்தான், முதல்வருக்கு நெருக்கமாக உள்ள 2 பேருக்கிடையே சமீபகாலமாக மோதல் வெடித்து வருகிறது.

அதிமுகவில் யார் பெரியவர் என்ற ஈகோ மோதல்தான் அது.. இதை தெரிந்துகொண்ட உளவுத்துறை, அதில் ஒருவருடைய செல்போனை டேப் செய்ய ஆரம்பித்துள்ளது. அந்த முக்கிய நபரின் செல்போனின் நம்பரை மட்டும் போட்டு, அவரது பெயருக்குப் பதில், கார்த்திக் என்று ஒரு மாற்றுப் பெயர் வைத்து, உள்துறையில் முறையாக அனுமதி பெற்று டேப் செய்யப்பட்டு வருகிறது. இந்த தகவல் தாமதமாக முதல்வருக்கு நெருக்கமானவர்களுக்குத் தெரியவந்தது. உடனே, இது குறித்து முதல்வரின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது. இதனால் உளவுத்துறை ஐஜி குறித்து விசாரணை நடத்த டிஜிபி அசோக்குமாருக்கு உத்தரவிடப்பட்டது.

அப்போதுதான், டேவிட்சன் தேவாசீர்வாதம் தனது மைத்துனர் பெயரில் ஆவடியில் பெரிய அளவில் ரியல் எஸ்டேட் தொழில் செய்தது தெரியவந்தது. நீர் பிடிப்பு பகுதிகளை பொதுமக்களுக்கு விற்பனை செய்துள்ளனர். அந்த இடம் ஏரி பாசனத்திற்கு உட்பட்டது என்பதால் பட்டா கிடைக்காது. இதனால் பொதுமக்கள் யாரும் வாங்க முன் வரவில்லை. இதனால் தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி, இளம் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு அந்த இடத்தை விற்பனை செய்தார். இவரே போன் போட்டு பேசியதால், இவரது பேச்சை நம்பி சுமார் 78 பேர் அந்த இடத்தை வாங்கினர். அந்த இடத்தை வாங்கிய பிறகு பட்டாவுக்கு அதிகாரிகள் விண்ணப்பம் செய்தபோது, அதற்கு பட்டா கொடுக்க முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்து விட்டனர்.

இதனால், அந்த இடத்தை விற்பனை செய்யலாம் என்று முயன்றபோது அதிகாரிகள் வாங்கிய விலையை விட குறைந்த விலைக்குத்தான் கேட்டனர். பலர் அதை வேண்டாம் என்று கூறி விட்டனர். இப்போது பெய்த மழையில் அந்த இடத்தில் மட்டும் 10 அடிக்கு மேல் தண்ணீர் நின்றுள்ளது. இதனால் அந்த இடத்தை விற்கவும் முடியாமல், பட்டா வாங்கவும் முடியாமல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் திணறி வந்தனர். இதுகுறித்து முதல்வருக்கு அதிகாரிகள் புகார் செய்தனர். இதுகுறித்தும் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதன்தொடர்ச்சியாக இதுகுறித்து ரகசிய விசாரணைக்கு டிஜிபி அசோக்குமார் உத்தரவிட்டார்.

பின் அந்த அறிக்கையை முதல்வருக்கு அனுப்பி வைத்தார். ஏற்கனவே அவர் மீது கோபத்தில் இருந்த முதல்வர் ஜெயலலிதா, அவரை உடனடியாக மாற்றி உத்தரவிட்டுள்ளார். இதைத் தவிர மாநிலம் முழுவதும் மாவட்ட எஸ்பிக்களுக்கு சில பண விவகார வழக்குகளை முடித்துக் கொடுக்கும்படி உத்தரவிட்டுள்ளார். மேலும், சிவகங்கை சிறுமி பலாத்காரம், டிஎஸ்பி விஸ்ணுப்பிரியா வழக்கு, பெண் போலீசை மாவட்ட எஸ்பி ஒருவர் கர்ப்பமாக்கிய புகார் ஆகியவற்றையும் இவர் மறைப்பதற்கு முயன்றதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இப்போது, இந்த விவகாரங்கள் குறித்தும் உளவுத்துறை அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர். இது போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ad

ad