புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 மார்., 2016

அபாண்டமான குற்றச்சாட்டு: ஓ.பன்னீர் செல்வம் விளக்கம்



மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் பியூஷ் கோயல், தன்னால் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க முடியவிலை என்று கூறியிருப்பது அபாண்டமான குற்றச்சாட்டு என்று தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

மத்திய மின்சாரம், நிலக்கரி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையின் அமைச்சர் திரு பியூஷ் கோயல் புதுடெல்லியில் நடைபெற்ற இளைஞர் மாநாட்டில் தமிழக முதல்வரை தன்னால் சந்திக்க இயலவில்லை என்ற ஒரு அபாண்டமான குற்றச்சாட்டை தெரிவித்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன. இந்தக் குற்றச்சாட்டில் எள் முனையளவும் உண்மை இல்லை என்பதையும், அரசியல் ஆதாயத்திற்காக வெளியிடப்பட்ட ஒரு ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்பதையும் வலியுறுத்தித் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டு மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு அல்லும் பகலும் அயராது பாடுபடும் தமிழக முதல்வர் தமிழக நலனுக்கான திட்டங்களுக்கு மத்திய அரசை தொடர்ந்து வற்புறுத்துவதோடு மட்டுமல்லாமல் தமிழகத்திற்கு எதிரான மத்திய அரசின் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் ஆகியவற்றிற்கு எதிர்ப்பும் தெரிவித்து வந்துள்ளார்கள். அந்த வகையிலே தான், இலங்கை அரசால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும், அவர்களது படகுகள் திரும்ப அளிக்கப்பட வேண்டும் என்றும் தொடர்ந்து மத்திய அரசை வற்புறுத்தியுள்ளார். அது போன்றே, விவசாயிகளை பாதிக்கும் கெயில் எரிவாயு குழாய் பதிப்புத் திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் வற்புறுத்தியுள்ளார். காவேரி மேலாண்மை வாரியம் மற்றும் காவேரி நீர் ஓழுங்குமுறைக் குழு ஆகியவற்றை அமைத்திடவும் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி உள்ளார்.. இங்கே நான் குறிப்பிட்டது ஒரு சில உதாரணங்களைத் தான். இது போன்று எண்ணற்ற உதாரணங்களை என்னால் சொல்ல முடியும்.

எதிர்வரும் தமிழ்நாடு சட்டப் பேரவை தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை எவராலும் வெல்லவே இயலாது என்னும் நிலையில், இது போன்ற தரம் தாழ்ந்த பொய்யான குற்றச்சாட்டுகளை அரசியல் ஆதாயத்திற்காக மத்திய மின்சாரம், நிலக்கரி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையின் அமைச்சர் பியூஷ் கோயல் அவர்கள் தெரிவித்திருப்பது கண்டனத்துக்குரியதாகும். அது போன்ற ஒரு கருத்தை மத்திய சாலை போக்குவரத்து நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பொன் இராதாகிருஷ்ணன் அவர்கள் தெரிவித்திருப்பதும் கண்டனத்துக்குரியதாகும்.

தமிழக முதல்வர் தமிழ்நாட்டின் நலனுக்காக மத்திய அமைச்சர்களை நேரில் சந்திப்பதுடன், கடிதங்கள் வாயிலாகவும் தொடர் முயற்சிகள் எடுத்து வருகிறார்கள் என்பது தமிழக மக்கள் அனைவருக்கும் நன்கு தெரியும். எனினும், பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர் பெருமக்களை தமிழக முதல்வர் ஜெயலலிதா சந்தித்த விவரங்கள் சிலவற்றை நான் இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான அரசு பதவியேற்ற சில நாட்களிலேயே, அதாவது 3.6.2014 அன்று தமிழக முதல்வர் புதுடெல்லி சென்று மாண்புமிகு பிரதமர் அவர்களை சந்தித்து தமிழகத்தின் தேவைகள் குறித்த ஒரு கோரிக்கை மனுவினை அளித்தார்கள். அன்றே மத்திய நிதியமைச்சர் திரு.அருண் ஜெட்லி அவர்களை சந்தித்து கோரிக்கை மனுவினை அளித்தார். மத்திய அமைச்சர்கள் ரவி சங்கர் பிரசாத், நிர்மலா சீத்தாராமன் மற்றும் பொன் இராதாகிருஷ்ணன் ஆகியோர் முதல்வரை தமிழ்நாடு இல்லத்தில் சந்தித்தார்கள்.

28.8.2014 அன்று மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் சென்னையில் முதல்வரைச் சந்தித்தார்கள்.

5.9.2014 அன்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்வரை சந்தித்தார்கள்.

7.8.2015 அன்று பிரதமர் நரேந்திர மோடி அவர்களை முதல்வர் தனது இல்லத்தில் சந்தித்து தமிழ்நாட்டின் வளர்ச்சி தொடர்பான கோரிக்கை மனுவினை அளித்தார்கள்.

9.9.2015 அன்று மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீத்தாராமன் மற்றும் தபொன் இராதாகிருஷ்ணன் ஆகியோரை சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் சந்தித்தார்கள்.

3.12.2015 அன்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட நரேந்திர மோடி சென்னை வந்தபோது அவரைச் சந்தித்து வெள்ள சேதங்கள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.

7.12.2015 மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் பி.அசோக் கஜபதி ராஜுவை சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்தார்.

13.12.2015 அன்று மத்திய நகர்ப்புற வளர்ச்சி, வீட்டு வசதி, நகர்ப்புற ஏழ்மை தணிப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு தலைமைச் செயலகத்தில் முதல்வரைச் சந்தித்தார்கள். இந்த சந்திப்பு நடந்த நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதையும் நான் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

20.12.2015 அன்று மத்திய நிதி, கம்பெனி விவகாரம் மற்றும் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அருண் ஜெட்லியை தலைமைச் செயலகத்தில் முதல்வர் சந்தித்தார். இந்த சந்திப்பு நடைபெற்றதும் ஞாயிற்றுக்கிழமை தான்.

முதல்வரைச் சந்தித்து தமிழக வளர்ச்சி குறித்து சந்தித்து பேச முடியவில்லை என குறிப்பிட்டுள்ள மத்திய சாலை போக்குவரத்து நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பொன் இராதாகிருஷ்ணன் தமிழக மீனவர்களின் பிரச்சனையை தீர்க்க தமிழக அரசு கவனம் செலுத்தவில்லை எனவும் தெரிவித்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளி வந்துள்ளன. இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்படவும், அவர்களது படகுகளை திரும்ப ஒப்படைத்திடவும் மத்திய அரசு உரிய நடவடிக்கைகள் எடுத்திட தமிழக முதல்வர் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறார்கள். சமீபத்தில் கூட மீனவர்கள் விடுதலை தொடர்பாக மக்களவை துணை சபாநாயகர் டாக்டர் மு.தம்பிதுரை அவர்கள் தலைமையில் அ.இ.அ.தி.மு.க.வைச் சேர்ந்த 48 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் அவர்களை சந்தித்து இது தொடர்பாக விளக்கிட நேரம் ஒதுக்கிட கேட்டுக் கொண்ட போது, பிரதமர் அவர்களால் நேரம் ஒதுக்கித் தரப்படவில்லை என்பது தான் உண்மையாகும். 

எனவே, நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அவர்களை சந்தித்து இது தொடர்பாக கோரிக்கை மனு ஒன்றினை அளித்து இந்தப் பிரச்சனையை விளக்கியுள்ளார்கள். அது போன்றே கெயில் எரிவாயு குழாய் பதிப்பு சம்பந்தமாக பிரதமர் அவர்களை சந்திக்க நேரம் ஒதுக்கித் தரப்படவில்லை என்பதையும் மத்திய அமைச்சர் பொன் இராதாகிருஷ்ணன் அவர்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

தமிழ்நாடு சட்டப் பேரவை தேர்தலை கொள்கைகளின் அடிப்படையில், மக்கள் நலனுக்காக நிறைவேற்றவுள்ள திட்டங்களின் அடிப்படையில் எதிர்கொள்வது தான் சிறந்த ஜனநாயக வழியாகும். அதனை விடுத்து, அரசியல் ஆதாயம் தேடும் வகையில் இது போன்ற விஷமத்தனமான பிரச்சாரங்களைபியூஷ் கோயல் மற்றும் பொன் இராதாகிருஷ்ணன் போன்றோர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார் பன்னீர்செல்வம்.

ad

ad