புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 மே, 2016

தமிழக முதல்வர் மாண்புமிகு அம்மா அவர்களுக்கு- அனைத்துலக தமிழ்பெண்கள் அமைப்பு

மாண்புமிகு அம்மா அவர்கள்
தமிழக முதலமைச்சர்
தமிழ்நாடு
மாண்புமிகு அம்மாவுக்கு
நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் மிக
ப்பெரும்பான்மை ஆசனங்களை பெற்று மீண்டும் தமிழக முதலமைச்சராக தெரிவாகி இருக்கும் மாண்புமிகு அம்மா அவர்கட்கு அனைத்துலக தமிழ்பெண்கள் அமைப்பு  மிகவும் மகிழ்வுடனும் பெருமையுடனும் வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறது.
ஆணாதிக்கம் நிறைந்த இந்த சமூகஅமைப்பில் அதிலும் அரசியலில் மிகவும் மோசமான குரூரமான ஆணாதிக்கம்நிறைந்த ஒரு சூழலில் தனித்த ஒரு பெண்மணியாக அத்தனை சவால்களையும் எதிர்கொண்டு வெற்றி ஈட்டிவரும் உங்களை ஒரு காவியத்தலைவியாகவே பார்க்கின்றோம்.
இந்த வெற்றியானது என்னதான் ஒரு கட்சிக்கு கிடைத்த வெற்றி அல்லது ஆட்சிமுறைக்கு கிடைத்த அங்கீகாரம்,தேர்தல் விஞ்ஞாபனத்துக்கு கிடைத்த ஒப்புதல் என்று ஆயிரம் காரணங்களை கூறினும் இந்த வெற்றி என்பது உங்களின் தனிப்பட்ட நம்பிக்கைக்கு,உங்களின் தனித்த செல்வாக்குக்கு கிடைத்த பெரு வெற்றி என்றே உறுதியாகிறது.
ஏராளம் பொறுப்புகளுடனும்,ஆறாவது முறையாக தெரிவு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் உங்களின் பணிகளுக்கு இடையில் நாமும் சில கோரிக்கைகளை சில வேண்டுகோள்களை உங்கள் முன் சமர்ப்பிக்கின்றோம்.
தமிழக பெண்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் முன்னேற்றம்,சுயஆளுமை என்பனவற்றுக்கு முன்னுரிமை கொடுத்து சட்டங்களை நடைமுறைகளை உருவாக்கும்படி வேண்டுகின்றோம்.
அத்துடன் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக தமிழகத்தின் அகதிமுகாம்களில் மிகுந்த இடர்களுடனும் எந்தவொரு சட்டபாதுகாப்பு இன்றி வசதிகள் ஏதுமற்று வாழும் ஈழத்தமிழ் அகதிகளின் வாழ்வு மற்றும் அவர்களின் பாதுகாப்பு அவர்களின் வருங்கால தலைமுறையினர் தமிழகத்தில் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் உரிய இடம் பெற அனுமதித்தல் என்பனவற்றை தயவு செய்து தாயுள்ளத்துடன் கவனிக்க வேண்டுகின்றோம்.
குடியுரிமை ஏதுமற்றவர்களாக அவர்கள் வாழ்வதால் பலதரப்பட்ட அதிகார தரப்பினரும் அவர்கள் மீது தமது வன்மங்களை, தமது
ஊழல்களை, துஸ்பிரயோகங்களை, பயமுறுத்தல்களை தொடர்ந்து மேற்கொண்ட வண்ணமே இருக்கிறார்கள் அண்மையில் மதுரையில் ஒரு ஈழத்தமிழன் இவ்விதமான ஒரு அதிகாரஅச்சுறுத்தல், நிராகரிப்பு என்பனவற்றால் சம்பந்தப்பட்ட அதிகாரியின் முன்னிலையிலேயே உயர்அழுத்த மின்கடத்தியை கையால் பற்றி கருகி சாவடைந்திருந்தார். இதனை போன்ற பல சம்பவங்களுக்கு ஒரு உதாரணம் மட்டுமே அது.
லட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் அவ்விதம் தமிழகத்தின் பல அகதிமுகாம்களில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்கிறார்கள். தாயுள்ளத்துடன் எல்லாவிதமான பிரச்சனைகளையும் அணுகும் தாங்கள் இந்த விடயத்திலும் உங்களின் கருணையை காட்டுமாறு அனைத்துலக தமிழ்பெண்கள் அமைப்பு சார்பாக வேண்டுகின்றோம். எல்லாம் வல்ல பரம்பொருள் உங்களுக்கு நீடித்த ஆயுளையும் ஆரோக்கியத்தையும் மேலும் வெற்றிகளையும் வழங்க பிரார்த்திக்கின்றோம்.
நன்றி
பணிவன்புடன்
மதி வடிவேலு
தலைவர்
அனைத்துலக தமிழ்பெண்கள் அமைப்பு

ad

ad