புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஆக., 2016

தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சற்குணபாண்டியன் மரணம் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சற்குணபாண்டியன் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். அவருடைய உடலுக்கு தி.மு.க.
தலைவர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
எஸ்.பி.சற்குணபாண்டியன் மரணம்
முன்னாள் அமைச்சரும், தி.மு.க. துணை பொதுச்செயலாளருமான எஸ்.பி.சற்குணபாண்டியன் (வயது 76) சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக சென்னை தியாகராயநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இவருக்கு ஏற்கனவே இருதய அறுவை சிகிச்சை செய்த நிலையில், தற்போது சிறுநீரக கோளாறு காரணமாக அவரது உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டது.
கடந்த 11–ந் தேதி மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து வீட்டிற்கு வந்தார். இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு அவரது உடல்நிலை மோசமடைந்தது. தொடர்ந்து மூச்சுதிணறலும் ஏற்பட்டது. நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் அவர் மரணம் அடைந்தார்.
கருணாநிதி நேரில் அஞ்சலி
எஸ்.பி.சற்குணபாண்டியனின் உடல் பழையவண்ணாரப்பேட்டை, லாயர் சின்னதம்பி தெருவில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தது.
அவரின் மறைவு செய்தியை கேள்விப்பட்டதும் தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று பகல் 12.10 மணிக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவருடைய குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார்.
கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள், தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன், தி.மு.க. பொருளாளரும், எதிர்க்கட்சித்தலைவருமான மு.க.ஸ்டாலின், அவருடைய மனைவி துர்கா ஸ்டாலின், கனிமொழி எம்.பி., மு.க.தமிழரசு, முன்னாள் மத்திய மந்திரிகள் தயாநிதி மாறன் மற்றும் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா எம்.பி., இலக்கிய அணி புரவலர் இந்திராகுமாரி, முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, கே.பி.பி.சாமி, காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் சு.திருநாவுக்கரசர், எம்.எல்.ஏ.க்கள் மா.சுப்பிரமணியன், ரங்கநாதன், வாகை சந்திரசேகர், சேகர்பாபு, தி.மு.க. வர்த்தக அணி மாநில செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம், துணைச்செயலாளர் பாண்டிசெல்வம், தெட்சினமாற நாடார் சங்க சென்னை கிளை செயலாளர் டி.விஜயா சந்திரன், உள்ளிட்ட தி.மு.க. பிரமுகர்கள் பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்கள்.
இறுதி ஊர்வலம்
எஸ்.பி.சற்குணபாண்டியனின் இறுதி ஊர்வலம் நேற்று மாலை 5 மணிக்கு அவருடைய வீட்டில் இருந்து புறப்பட்டு, காசிமேடு சுடுகாட்டை சென்றடைந்தது. அங்கு அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
மறைந்த எஸ்.பி.சற்குணபாண்டியனுக்கு எஸ்.பி.பொன்.பாண்டியன், எஸ்.பி.எஸ்.முத்துசோழன் என்ற மகன்களும், லட்சுமி பொன்.பாண்டியன் மற்றும் சிம்லா முத்துசோழன் என்ற இரு மருமகள்களும் உள்ளனர். பேத்தி கனிமொழி, பேரன் ஆதவன் நிக்சன் ஆகியோர் உள்ளனர். இதில் சிம்லா முத்துசோழன் தமிழகத்தில் தற்போது நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஆர்.கே.நகர். தொகுதியில் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மகளிர் ஆணையத்தலைவர்
பெரியார், அண்ணா, கருணாநிதி, ஆகியோரின் நன்மதிப்பை பெற்ற எஸ்.பி.சற்குணபாண்டியன் 13 வயது முதலே மேடை பேச்சாளராக திகழ்ந்தார். கட்சியில் மகளிர் அணி துணை செயலாளர், மாநில செயலாளர், தலைமை செயற்குழு உறுப்பினர் போன்ற பல பொறுப்புகளை வகித்தவர். மகளிர் ஆணையத்தின் தலைவராகவும், பொறுப்பு வகித்த அவர், தற்போது கட்சியின் துணை பொதுச்செயலாளராக இருந்தார்.
மறைந்த எஸ்.பி.சற்குணபாண்டியன் சொந்த ஊர் தேனி மாவட்டம் சின்னமனூர். கணவர் பெயர் சற்குணபாண்டியன். 1989–ம் ஆண்டு ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து 1989–ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று சமூகநலத்துறை அமைச்சரானார்.
பவளவிழா
கடந்த ஜனவரி 14–ந் தேதி எஸ்.பி.சற்குணபாண்டியனுக்கு 75 வயது நிறைவடைந்து 76 வயது பிறந்தது. இதனையொட்டி பவளவிழா மலரும் வெளியிடப்பட்டது. 1954–ம் ஆண்டு தியாகராய கல்லூரியில் தி.மு.க. சார்பில் நடந்த தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகை விழாவில் 13 வயதில் முதல் முறையாக மேடை ஏறி பேசியதற்காக, நாவலர் நெடுஞ்செழியன் கையால் பரிசும் பெற்றுள்ளார். 1957–ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் சென்னை நகராட்சியில் பிரசார கூட்டங்களிலும் பேசி தி.மு.க. தலைவர்களின் அன்பை பெற்றார்.
அப்போது மேலவை உறுப்பினராக எஸ்.பி.சற்குணபாண்டியனை, அண்ணா நியமித்தார். 1967–ம் ஆண்டு சமூகநலத்துறை வாரிய உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
துணை பொதுச்செயலாளர்
1988–ம் ஆண்டு இந்தி திணிப்பை கண்டித்து கருணாநிதி தலைமையில் நடந்த சட்டநகல் எரிக்கும் போராட்டத்தில் கலந்து கொண்டு போராடியதால் 2 மாதம் சிறைதண்டனை அனுபவித்தார். கட்சி சார்பில் பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்றுள்ளார். 1990–ம் ஆண்டு கலைஞர் விருது வழங்கப்பட்டது.
2015–ம் ஆண்டு தி.மு.க. தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகியோரை தேர்ந்தெடுக்க முதன்முறையாக எஸ்.பி.சற்குணபாண்டியன் ஆணையாளராக நியமிக்கப்பட்டார். கட்சியின் துணை பொதுச்செயலாளராகவும் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad