புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 செப்., 2016

தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட்: தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி சாம்பியன் இறுதி ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீசை வீழ்த்தியது



தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட்டில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி, சேப்பாக் சூப்பர் கில்லீசை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

இறுதிப்போட்டி


முதலாவது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 24-ந்தேதி தொடங்கியது. தமிழக அளவில் கிரிக்கெட்டில் புதிய அவதாரமாக உருவெடுத்த புதுமையான இந்த கிரிக்கெட் திருவிழாவில் 8 அணிகள் பங்கேற்றன.

லீக் மற்றும் அரைஇறுதி முடிவில் சேப்பாக் சூப்பர் கில்லீசும், தூத்துக்குடி பேட்ரியாட்சும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இந்த நிலையில் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டத்தில் இவ்விரு அணிகளும் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்றிரவு மல்லுகட்டின. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் எந்த மாற்றமும் இல்லை. தூத்துக்குடி அணியில் ஒரே ஒரு மாற்றமாக நாதனுக்கு பதிலாக அதிசயராஜ் டேவிட்சன் சேர்க்கப்பட்டார்.

அதிரடியான தொடக்கம்

டாஸ் ஜெயித்த தூத்துக்குடி கேப்டன் தினேஷ் கார்த்திக் தயக்கமின்றி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி கவுசிக் காந்தியும், அபினவ் முகுந்தும் தூத்துக்குடி அணியின் இன்னிங்சை தொடங்கினர். கில்லீஸ் கேப்டன் சதீஷ் வீசிய முதல் ஓவரிலேயே 2 பவுண்டரி ஓடவிட்ட தூத்துக்குடி பேட்ஸ்மேன்கள், தொடர்ந்து அதே வேகத்தை காட்டினர். அஷ்வாத் முகுந்தனின் ஓவரை பதம் பார்த்த முகுந்த் 4 பவுண்டரிகளை சாத்தினார். களத்தில், கில்லீஸ் பவுலர்களால் எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாத நிலையில், தூத்துக்குடி அணியின் ஸ்கோர் கம்பீரமாக பயணித்தது. 11.1 ஓவர்களில் ஸ்கோர் 100 ரன்களை கடந்தது.

விக்கெட் விழாததால், தூத்துக்குடி வீரர்கள் நெருக்கடியின்றி சகட்டு மேனிக்கு பேட்டை சுழற்றினர். பேட்டில் பட்ட பந்துகள் நாலாபுறமும் தெறித்து ஓடின. போக போக ரன்ரேட் விகிதம் 10 ரன்களுக்கு மேலாக எகிறியது. அணியின் ஸ்கோர் 132 ரன்களை (13.4 ஓவர்) எட்டிய போது ஒரு வழியாக இந்த ஜோடியை சுழற்பந்து வீச்சாளர் சாய் கிஷோர் பிரித்தார். அவரது பந்து வீச்சில் கவுசிக் காந்தி 59 ரன்களில் (43 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) சரவணனிடம் கேட்ச் ஆனார். காந்திக்கு இது 3-வது அரைசதமாகும். ஒரு விக்கெட்டுக்கு (132 ரன்) தூத்துக்குடி ஜோடியின் அதிகபட்சமாக இது அமைந்தது.

215 ரன்கள் குவிப்பு

அடுத்து வந்த கேப்டன் தினேஷ் காத்திக்கும், எதிரணியின் தடுமாற்றமான பவுலிங் மற்றும் பீல்டிங்கை கச்சிதமாக பயன்படுத்தி நொறுக்கிதள்ளினார். 6 பவுலர்களை பயன்படுத்தி பார்த்தும் தூத்துக்குடியின் ரன்வேட்டைக்கு அணை போட முடியவில்லை. காணாகுறைக்கு, அபினவ் முகுந்த் 76 ரன்களில் இருந்த போது கொடுத்த எளிதான கேட்ச் வாய்ப்பை கில்லீஸ் வீரர் முகுந்தனும், தினேஷ் கார்த்திக்குக்கு 44 ரன்களில் இருந்த போது கிட்டிய கேட்ச் வாய்ப்பை தலைவன் சற்குணமும் நழுவ விட்டனர்.

மின்னல் வேகத்தில் 2-வது அரைசதத்தை எட்டிய தினேஷ் கார்த்திக் (55 ரன், 26 பந்து, 5 பவுண்டரி, 4 சிக்சர்) கடைசி ஓவரில் ரன்-அவுட் ஆனார். 20 ஓவர்களில் தூத்துக்குடி அணி 2 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் குவித்து மலைக்க வைத்தது. டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்பு காஞ்சி வாரியர்சுக்கு எதிராக திருவள்ளூர் வீரன்ஸ் அணி 4 விக்கெட்டுக்கு 206 ரன்கள் எடுத்ததே சிறந்த ஸ்கோராக இருந்தது.

தொடர்ந்து 2-வது அரைசதத்தை பதிவு செய்த அபினவ் முகுந்த் 82 ரன்களுடனும் (52 பந்து, 12 பவுண்டரி, ஒரு சிக்சர்), ஆனந்த் ஒரு ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

தூத்துக்குடி சாம்பியன்

அடுத்து இமாலய இலக்கை நோக்கி களம் இறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு தொடக்கமே பேரதிர்ச்சியாக இருந்தது. சுழற்பந்து வீச்சாளர் கணேஷ் மூர்த்தி வீசிய முதல் ஓவரில் சேப்பாக் வீரர்கள் தலைவன் சற்குணம் (0), கோபிநாத் (0), கேப்டன் சதீஷ் (0), சசிதேவ் (0) ஆகியோர் வரிசையாக விக்கெட்டுகளை தாரை வார்த்தனர்.

முன்னணி வீரர்கள் வந்த வேகத்தில் வெளியேறியதால், அந்த சரிவில் இருந்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியால் மீள முடியவில்லை. வசந்த் சரவணன் (30 ரன், 34 பந்து, 4 பவுண்டரி) மட்டும் கொஞ்சம் போராடி பார்த்தார். மற்றவர்களின் ஆட்டம் குறிப்பிடும்படி இல்லை. இரண்டு முறை மழையும் குறுக்கிட்டது.

முடிவில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 18.5 ஓவர்களில் 93 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் 122 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, முதலாவது டி.என்.பி.எல். கோப்பையை சொந்தமாக்கியது. வெற்றி பெற்றதும் அந்த அணி வீரர்கள் மைதானத்தில் உற்சாகமாக வலம் வந்தனர். சாம்பியன் பட்டத்தை வென்ற தூத்துக்குடி அணிக்கு ரூ.1 கோடி பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.

நாயகன்-தொடர்நாயகன்

பந்து வீச்சில் அமர்க்களப்படுத்திய தூத்துக்குடி வீரர் கணேஷ் மூர்த்தி ஆட்டநாயகனாகவும், தொடரில் அதிகபட்சமாக 5 அரைசதம் 397 ரன்கள் குவித்ததுடன், விக்கெட் கீப்பிங் மூலம் 12 பேரையும் ஆட்டம் இழக்கச் செய்த திண்டுக்கல் வீரர் ஜெகதீசன் தொடர்நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

ஸ்கோர் போர்டு

தூத்துக்குடி பேட்ரியாட்ஸ்


கவுசிக் காந்தி (சி) சரவணன்

(பி) சாய் கிஷோர் 59

அபினவ்முகுந்த்(நாட்-அவுட்) 82

தினேஷ் கார்த்திக்(ரன்-அவுட்) 55

ஆனந்த் (நாட்-அவுட்) 1

எக்ஸ்டிரா 18

மொத்தம் (20 ஓவர்களில்

2 விக்கெட்டுக்கு) 215

விக்கெட் வீழ்ச்சி: 1-132, 2-214

பந்த வீச்சு விவரம்

சதீஷ் 3-0-30-0

அஷ்வாத் முகுந்தன் 3-0-37-0

அலெக்சாண்டர் 4-0-31-0

சாய் கிஷோர் 4-0-35-1

யோ மகேஷ் 3-0-40-0

அந்தோணி தாஸ் 3-0-37-0

சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

தலைவன் சற்குணம் (சி)ஆனந்த்

(பி) கணேஷ் மூர்த்தி 0

கோபிநாத் (சி) ஆகாஷ்

சும்ரா (பி) கணேஷ் மூர்த்தி 0

வசந்த் சரவணன் (பி) பாலாஜி 30

சதீஷ் எல்.பி.டபிள்யூ

(பி) கணேஷ் மூர்த்தி 0

சசிதேவ் (சி) பாலாஜி

(பி) கணேஷ் மூர்த்தி 0

யோ மகேஷ் (சி) கார்த்திக்

(பி) பாலாஜி 11

கவ்ஜித் சுபாஷ் (சி) அவுசிக்

ஸ்ரீனிவாஸ் (பி) அதிசயராஜ் 8

அந்தோணி தாஸ்(சி)அஸ்வின்

கிறிஸ்ட் (பி) அவுசிக் ஸ்ரீனிவாஸ் 16

முகுந்தன் எல்.பி.டபிள்யூ

(பி) வாஷிங்டன் சுந்தர் 5

சாய் கிஷோர் (நாட்-அவுட்) 10

அலெக்சாண்டர் (சி)

அதிசயராஜ் (பி) முகுந்த் 2

எக்ஸ்டிரா 11

மொத்தம் (18.5 ஓவர்களில்

ஆல்-அவுட்) 93

விக்கெட் வீழ்ச்சி: 1-0, 2-0, 3-0, 4-0, 5-33, 6-48, 7-73, 8-77, 9-90

பந்து வீச்சு விவரம்

கணேஷ் மூர்த்தி 4-1-11-4

அதியராஜ் டேவிட்சன் 4-0-26-1

எல்.பாலாஜி 2-0-8-2

அஸ்வின் கிறிஸ்ட் 4-0-26-0

அவுசிக் ஸ்ரீனிவாஸ் 3-0-10-1

வாஷிங்டன் சுந்தர் 1-0-3-1

அபினவ் முகுந்த் 0.5-0-2-1

ad

ad