புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 செப்., 2016

அரவக்குறிச்சியில் போட்டியிடப் போவதில்லை!' -அறிவாலயத்தை அதிர வைத்த கே.சி.பி

தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ள தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதிகளுக்கான தேர்தல் தேதி இன்னமும்
அறிவிக்கப்படவில்லை. ' அரவக்குறிச்சி தொகுதியில் நான் போட்டியிடப் போவது சந்தேகமே' என நிர்வாகிகளிடம் பேசியிருக்கிறார் தி.மு.க வேட்பாளர் கே.சி.பழனிச்சாமி. 
தமிழக சட்டப்பேரவைக்கு கடந்த மே மாதம் 16-ம் தேதி தேர்தல் நடந்தது. தொகுதி முழுக்க வாரியிறைக்கப்பட்ட பணம் மற்றும் அதிக அளவில் பணம் பிடிபட்டது உள்ளிட்ட காரணங்களால்அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தொகுதிகளுக்கு மே 23-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவித்தது தேர்தல் ஆணையம். பின்னர் தேர்தல் தேதி ஜூன் 13-ம் தேதிக்கு மாற்றப்பட்டது. ' தேர்தல் தேதியை தள்ளி வைத்ததை ஏற்றுக் கொள்ள முடியாது. இரண்டு தொகுதிகளிலும் முன்கூட்டியே தேர்தல் நடத்த வேண்டும்' என தி.மு.க. சார்பில் தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. ஜுன் 1ம் தேதிக்குள் 2 தொகுதிகளிலும் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு, கடிதம் எழுதினார் ஆளுநராக இருந்த ரோசய்யா. அனைத்து மட்டத்திலும் நெருக்கடிகள் அதிகரித்தாலும், அரவக்குறிச்சி, தஞ்சைக்கு எப்போது தேர்தல் என்ற கேள்விக்கு, இன்னமும் விடை கிடைக்கவில்லை. இந்தநிலையில், ' அரவக்குறிச்சி தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை' என அதிர வைத்திருக்கிறார் தி.மு.க சொத்துப் பாதுகாப்புக் குழு உறுப்பினரும் அரவக்குறிச்சி வேட்பாளருமான கே.சி.பழனிச்சாமி. 
இதுகுறித்து நம்மிடம் பேசினார் கரூர் மாவட்ட தி.மு.க நிர்வாகி ஒருவர், " உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு அரவக்குறிச்சி, தஞ்சாவூர் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்குத் தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கிறோம். விரைவில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தி.மு.க தலைமை முன்வைத்த கோரிக்கைக்கு, தேர்தல் ஆணையம் செவிசாய்க்கவில்லை. இந்தநிலையில், ஆளுங்கட்சியை எதிர்த்துப் போட்டியிட்டாலும், வெற்றி கிடைக்குமா என்பதைத்தாண்டி, ' போட்டியிடாமல் ஒதுங்கிக் கொள்வதே நல்லது' என நினைக்கிறார் கே.சி.பி. இத்தனைக்கும் கே.சி.பியோடு நெருங்கிய நட்பில் இருந்தவர்தான் அ.தி.மு.க வேட்பாளர் செந்தில் பாலாஜி. ' இதை அறிந்து கொண்டதால்தான், கே.சி.பியோடு செந்தில் பாலாஜியை நேரடியாக மோதவிட்டார் ஜெயலலிதா' என தொகுதிக்குள் பரவலாக பேச்சு உள்ளது. நேற்று திடீரென தி.மு.க ஒன்றிய செயலாளர்களை அழைத்துப் பேசினார் கே.சி.பி. 
இந்தக் கூட்டத்தில், பரமத்தி ஒன்றிய செயலாளர் கருணாநிதி, அரவக்குறிச்சி ஒன்றிய செயலாளர் எம்.எஸ்.மணி மற்றும் கரூர் ஒன்றிய செயலாளர் கந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்களிடம், ' அரவக்குறிச்சியில் நான் போட்டியிடப் போவதில்லை' எனத் தெளிவாகக் கூறிவிட்டார். போட்டியிடாமல் ஒதுங்கிக் கொள்வது குறித்த காரணத்தை அவர் விளக்கவில்லை. அ.தி.மு.க வேட்பாளருக்கு எதிராக கே.சி.பி போட்டியிட்டால், கட்டாயம் தி.மு.க வெற்றி வாகை சூடும். தொழிலில் பிரச்னை ஏற்படலாம் என்பதால் ஒதுங்குகிறாரா என்பதும் தெரியவில்லை. தலைமையின் முடிவுக்காகக் காத்திருக்கிறோம்" என்றார் ஆதங்கத்தோடு. 
'போட்டியிடப் போவதில்லை என்ற தகவல் உண்மையா' என்ற கேள்வியை தி.மு.க வேட்பாளர் கே.சி.பழனிச்சாமியிடம் கேட்டோம். " தெரியவில்லை. அதுபற்றி நான் இன்னமும் முடிவு செய்யவில்லை. தலைமைதான் முடிவு செய்ய வேண்டும்" என்றார் நிதானமாக.

ad

ad