புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 அக்., 2016

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி அதிர்ச்சி தோல்வி

3-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து போட்டித் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் ந
டந்து வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் சென்னையின் எப்.சி., கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி., நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி. (கவுகாத்தி), அட்லெடிகோ டீ கொல்கத்தா, எப்.சி.புனே சிட்டி, மும்பை சிட்டி எப்.சி., எப்.சி. கோவா, டெல்லி டைனமோஸ் எப்.சி. ஆகிய 8 அணிகள் கலந்து கொண்டு மோதி வருகின்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் உள்ளூர்-வெளியூர் அடிப்படையில் இரண்டு முறை மோத வேண்டும். லீக் ஆட்டங்கள் முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும்.
இந்த நிலையில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த 6-வது லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.-டெல்லி டைனமோஸ் எப்.சி. அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சென்னை அணியில் தமிழக வீரர் மோகன்ராஜ் பின்கள வீரராக இடம் பெற்று இருந்தார். இந்த சீசனில் சென்னையில் நடந்த முதல் ஆட்டம் என்பதால் போட்டியை காண ரசிகர்கள் அதிக அளவில் திரண்டனர். இதனால் ஸ்டேடியம் களை கட்டி இருந்தது.
சென்னை வீரர்கள் தொடக்கம் முதலே தாக்குதல் ஆட்டத்தை தொடுத்தனர். டெல்லி அணி தனது சிறப்பான தடுப்பு அரண் ஆட்டத்தின் மூலம் அதனை அருமையாக சமாளித்தது. 26-வது நிமிடத்தில் டெல்லி வீரர் மிலன்சிங் பந்துடன் கோல் எல்லைக்குள் வேகமாக புகுந்தார். அவரை சென்னை அணியின் கோல் கீப்பர் டுவைன் கெர் (ஜமைக்கா) முரட்டுத்தனமாக தடுத்தார். இதனால் காலில் அடிவாங்கிய அவர் மைதானத்தில் விழுந்து புரண்டார்.
பெனால்டி பகுதிக்குள் இந்த சம்பவம் நடந்ததால் டெல்லி அணிக்கு பெனால்டி வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதனை பயன்படுத்தி அந்த அணி வீரர் மார்செலோ பெரீரா (பிரேசில்) எளிதாக கோல் அடித்தார். 
32-வது நிமிடத்தில் சென்னை அணி பதில் கோல் திருப்பியது. ஜெஜெ லால்பெகுலா கடத்தி கொடுத்த பந்தை கண் இமைக்கும் நேரத்தில் சக வீரர் டுடு ஒமாக்பெமி (நைஜீரியா) கோலுக்குள் திணித்தார். டெல்லி அணியின் கோல் கீப்பர் அண்டோனியா பால்டாசர் பாய்ந்து தடுக்க முயற்சித்தார். ஆனால் பந்து அவரது கையில் உரசிய படி கோலுக்குள் ஊடுருவியது.
உற்சாக வெள்ளத்தில் உள்ளூர் ரசிகர்கள் எழுப்பிய ஆரவாரம் அடங்குவதற்குள் டெல்லி அணி உடனடியாக பதிலடி கொடுத்தது. 34-வது நிமிடத்தில் ரிச்சர்ட் காட்சே கோல் எல்லையை நோக்கி கடத்தி கொடுத்த பந்தை சக வீரர் மார்செலோ பெரீரா மின்னல் வேகத்தில் கோலாக மாற்றினார். அவர் தொடர்ந்து அடித்த 2-வது கோல் இதுவாகும். இதையடுத்து முதல் பாதியில் டெல்லி அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.
பிற்பாதியில் சென்னை அணி ஆக்ரோஷத்தை தீவிரப்படுத்தியது. ஆனால் அது டெல்லி அணியின் தடுப்பு ஆட்டத்துக்கு முன்பு தவிடுபொடியானது. தடுப்பு ஆட்டத்தில் அதிக கவனம் செலுத்திய டெல்லி அணி, எதிரணி காணும் தொய்வை சரியாக பயன்படுத்திக் கொண்டது. 84-வது நிமிடத்தில் டெல்லி அணி 3-வது கோலை அடித்து சென்னை ரசிகர்களை சோகத்தில் உறைய வைத்தது. கீன் பிரான்சிஸ் லீவிஸ் வலையை நோக்கி தூக்கி உதைத்த பந்தை சக வீரரும், மாற்று ஆட்டக்காரருமான பாதரா பாட்ஜி (செனகல்) மிக அபாரமாக தலையால் முட்டி கோலுக்குள் அனுப்பினார். அதன் பிறகு தளர்ந்து போன சென்னை அணியால் கடைசி வரை பதில் கோல் எதுவும் திருப்ப முடியவில்லை.
முடிவில் சென்னையின் எப்.சி. 1-3 என்ற கோல் கணக்கில் டெல்லி அணியிடம் தோல்வியை தழுவியது. டெல்லி அணி இந்த சீசனை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. அதே சமயம் 2-வது ஆட்டத்தில் ஆடிய சென்னை அணி சந்தித்த முதல் தோல்வி இது. தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தாவுடன் டிரா கண்டு இருந்தது.
மும்பையில் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 7 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் மும்பை சிட்டி எப்.சி.-நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி. (கவுகாத்தி) அணிகள் சந்திக்கின்றன.

ad

ad