மூன்று வாரங்கள் ஆகிவிட்டன. முதல்வர் ஜெ.வுக்கான சிகிச்சை தொடர்வதால் மாலுமி இல்லாத கப்பல் போல தத்தளிக்கிறது
ஆட்சி என்கிற கப்பல்! அரசின் உயரதிகாரிகள், அமைச்சர்கள் தொடங்கி மாற்றுக்கட்சி அரசியல்வாதிகளும் கவர்னர் மாளிகைக்குப் படையெடுக்கும் படலம் தொடங்கியிருக்கிறது. ஆட்சிக்கு நிர்வாக ரீதியாக ஏற்பட்டுள்ள சட்டச் சிக்கல்களால் அப்பல்லோ மருத்துவ மனை, தலைமைச்செயலகம், கவர்னர் மாளிகை என மூன்று இடங்களிலும் பரபரப்புக்கு பஞ்சமில்லை.
பிரதமர் மோடியின் தனிச்செயலாளர் சஞ்சய் பவ்சர் கொடுத்த அழுத்தமான உத்தரவின் பேரில் கவர்னர் மாளிகைக்கு அழைக்கப்பட் டார் தலைமைச்செயலாளர் ராமமோகனராவ். ""மருத்துவமனையில் நீண்ட நாட்கள் தங்கி முதல்வர் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என அப்பல்லோ நிர்வாகம் சொல்லியிருப்பதால், அரசு நிர்வாகத்தை கவனிப்பது யார்? உங்களுக்கு ஏதேனும் உத்தரவுகள் தரப்பட்டிருக் கிறதா?'' என கேள்வி எழுப்பினார் பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ். ""முதல்வர் இருக்கும் போது அரசு நிர்வாகம் எப்படி நடந்ததோ அதேபோல துறை ரீதியிலான பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன. எந்தத் தொய்வும் இல்லை'' என்றிருக்கிறார் தலைமைச்செயலாளர். ""முதல்வரின் கருத்துருவிற்காக கோப்புகள் தேங்கிக்கிடப் பதாகவும், சட்ட ஒழுங்கு நடவடிக்கைகளில் வெளிநபர்களின் தலையீடுகள் அதிகமிருப்ப தாகவும் மத்திய அரசுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனால், முதல்வர் உடல்நலம் சரியாகி வரும் வரையில் நிர்வாகத்தை கவனிக்க ஒருவரை நியமிக்க வேண்டும்'' என கவர்னர் சொல்ல, அங்கிருந்து கிளம்பினார் தலைமைச் செயலாளர்.
சசிகலா யோசனைப்படி செயல்பட்ட தலைவர்கள்:
கவர்னர் மாளிகையிலிருந்து திரும்பிய அமைச் சர்கள் இருவரும் அப்பல்லோவில் இரண்டாவது மாடியிலிருந்த சசிகலாவை சந்தித்தனர். அப்பல்லோவிற்கு ஜெயலலிதா வந்தபிறகு சசிகலாவை ஓ.பி.எஸ். சந்தித்து விவாதிப்பது அப்போதுதான் என்கிறார்கள் அதிகாரிகள். கவர்னர் கறாராக இருப்பதை ஓ.பி.எஸ்.சும் எடப்பாடியும் சசியிடம் விவரித்துவிட்டு முதல்மாடிக்கு திரும்பிவிட்டனர். முதல்மாடியில் முதல்வரின் செயலாளர் வெங்கட்ரமணனிடமும் அரசு ஆலோசகர் ஷீலாபாலகிருஷ்ணனிடமும் கவர்னரின் சந்திப்பில் நடந்ததை பகிர்ந்துகொண்டிருந்தார் தலைமைச்செயலாளர். அப்போது வெங்கட் ரமணனுக்கு மட்டும் சசியிடமிருந்து அழைப்பு. அவரிடம், சட்டரீதியாக முடிவு எடுத்தால் ஜெயலலிதாவிடமிருந்து முதல்வர் பதவி பறிபோவ தையும் அதனால் ஏற்படும் சிரமங்களையும் விவரித்திருக்கிறார் சசிகலா.
இதனைத்தொடர்ந்து நடந்த விவாதங்களில்தான், ஆட்சிக்கு நெருக்கடி தரும் மத்திய அரசின் வேகத்தைக் குறைக்கும் வகையில் கவர் னரை சந்தித்து அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக அரசியல்வாதிகளை பேச வைக்கும் முடிவை எடுத்துள்ளனர். அதன் முதல்கட்டம்தான் வைகோவை அப்பல்லோவுக்கு அழைத்து சசிகலா பேச, கவர்னரை சந்தித்தார் வைகோ.